அன்வார் பிரதமராக வேண்டும் – குலா

முகியாதின் பதவி விலகுவதை முன்னிட்டு, இந்த வேளையில் நாட்டின் நலம் கருதி  எதிர்க்கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வாருக்கு ஆதரவளித்து  அந்த பிரதமர்  பதவிக்கு அவரை  பரிந்துரைக்க  பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற   உறுப்பினர்கள் முன் வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறார் முன்னாள் மனித வள அமைச்சர் குலசேகரன்.

இது  சார்பாக கருத்துரைக்கையில், அன்வார்  மக்களுக்காகப்  பல தியாகங்களைச் செய்தவர் என்ற காரணத்தினால் , பெரிகாத்தான் அரசாங்கம் செய்த  பல தவறுகளைச்  சரிசெய்து நாட்டை சரியான  பாதைக்கு இட்டுச் செல்ல  அவரால் தான் முடியும் என்று  பெரும்பான்மை மக்கள்  எதிர்பார்ப்பதால்  அவருக்கு இந்த   வாய்ப்பு வழங்கப்படுவதே   ஞாயமாகும் என்கிறார் குலா.

அன்வார் தன் சுய நலத்தைக் கருத்தில் கொண்டிருந்தால் அஸ்மின் அலி , அடி அவாங்க்  போன்று என்றோ முஹியாடின் கூட இணைந்து அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக   வந்திருக்க முடியும். கொண்ட கொள்கைக்காகவும் , மக்கள் நலனுக்காகவும் இது நாள் வரை பொறுமை காத்து வந்த அன்வாருக்கும் இந்த பிரதமர் பதவி  சேரவேண்டிய ஒன்றாகும்.

அரசியலமைப்பும் அதன் சட்டங்களும் மிகத்தெளிவாக உள்ளன. கோவிட் 19  தொற்றின் தீவிரம் காரணமாக நாடாளுமன்றம்  கலைக்கப்பட வேண்டும் என்று மஹியாடின்  மாமன்னரை  கேட்டு கொண்டால்  அதனை  நிராகரிக்க அரசருக்கு அதிகாரம் உள்ளது. அப்படி நிராகரிக்கும் பட்சத்தில்  மஹியாடினின் ஓரே  முடிவு  சட்டப்படி பிரதமர் பதவியை  விட்டு  விலகுவதேயாகும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.

லஞ்சம் நேரடியாகப்  பேரம் பேசப்படுவதாலும் ,    ஆட்சி செய்யப்படும் விதம்    கேளிக்கையாகவும் கிண்டலுக் குறியதாகவும் இருக்கும் இவ்வேளையில், உடனடியாக நாடு தன் சரியான பாதையில் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. உள்நாட்டினர்  பெருமை கொள்ளவும்   , வெளிநாட்டினர் நம்மை  மதிக்கவும் , மீண்டும் நாம் தலை நிமிர்ந்து  நடக்கவும்    ஓரே வழி  நாட்டில் ஆட்சி மாற்றம் மட்டுமே.

இந்தச்சூழலில், எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் அன்வாரை பிரதமராக ஏற்பதுதான், நாடாளுமன்ற முதிர்ச்சிக்கு எடுத்துக் காட்டாக அமையும். அதை விடுத்து பின்புற அரசியல் மீண்டும் வருமானால் அது சனநாயகத்திற்குப் பலத்த சவாலாக அமையும் என்கிறார் இந்த   ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் , மு.குலசேகரன்.