நைஜீரியாவில் பிச்சைக்காரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அபுஜா,
நைஜீரியா நாட்டின் லாகோஸ் மாகாணத்தில் பிச்சைக்காரர்களுக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தெரு வியாபாரிகளையும் அந்த மாகாணம் தடை செய்துள்ளது. இவர்கள் ஒரு தொல்லை என்று அந்த மாகாண அரசு கருதுகிறது. லாகோஸ் மாகாணத்தில் பிச்சை எடுப்பவர்களை தடுத்து நிறுத்துவதற்கு ஒரு சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த குழு செயல்படத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி இளைஞர்கள் மற்றும் சமூக மேம்பாடு உயர் அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் பேசுகையில், “சட்டத்தை மதித்து வாழ்கிற மக்களுக்கு தெருவில் பிச்சை எடுப்பவர்கள் தொல்லையாக விளங்கி வருகிறார்கள். குழந்தைகளை உள்ளடக்கிய பிச்சைக்காரர்களும், தெரு வியாபாரிகளும் பிற இடங்களில் இருந்து இந்த மாகாணத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள், இது ஒரு வணிகமாக நடைபெறுகிறது. இது மனித குலத்தை இழிவுபடுத்துகிறது. குழந்தைகள் இதில் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்” என குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறும்போது, “எங்கள் தெருக்களில் இந்த மக்களின் செயல்பாடுகள் மனிதர்கள் நடமாட்டத்துக்கும், வாகன போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. சுற்றுச்சூழல் தொல்லை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது” எனவும் தெரிவித்தார்.
(நன்றி Dailythanthi)