மக்கள் விரும்பும் ஆட்சிக்கு காலம் கணிவது எப்போது? – இராகவன் கருப்பையா

மலேசிய அரசியல் வரலாற்றில் 2ஆவது முறையாக மக்கள் விரும்பாத ஒருவர் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுவும் வெறும் 18 மாதங்களில் இரு முறை நாடு தலைமைத்துவ  மாற்றங்களுக்கு இலக்காகியுள்ளது சரித்திரத்தில் நிச்சயம் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.

கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலின் போது பிரதமராவதற்கானப் பட்டியலில்  இடம் பெற்றிராத 2 பேர்  அப்பதவிவைச் சுவைத்திருப்பதுதான் வேடிக்கை.

அதே சமயத்தில் அந்த நாற்காலியில் அமருவதற்குக் கடந்த 23 ஆண்டுகளாக பொறுமையாகக் காத்துக்கிடக்கும் எதிர்க்கட்சி தலைவர் அன்வாரின் நிலையை எண்ணிப்பார்த்தால் சற்று பரிதாபமாகவே உள்ளது.

இந்தக்காலகட்டத்தில் மொத்தம் 5 பேர் தம்மை முந்திச் சென்றுவிட்ட நிலையிலும் இன்னமும் அவர் முன் வரிசையில் இருக்கிறார் என்றால் அது மிகையில்லை.

கடந்த வாரம் முன்னாள் பிரதமர் மஹியாடின் பதவி விலகியதைத் தொடர்ந்து  அன்வாரின் பெயர் மேலோங்கியது.

மஹியாடின் அரசாங்கத்தில் துணைப்பிரதமராக இருந்த இஸ்மாய்ல் சப்ரி முண்டியடித்துக் கொண்டு முயற்சிகளை வலுப்படுத்திய போதிலும் மக்கள் அவரை விரும்பவில்லை எனும் உண்மை சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்ட அதிருப்தி அலைகளின் வழி தெரிய வந்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மஹியாடின் கொல்லைப்புறமாக வந்து ஆட்சியைக் கைப்பற்றிய போது மக்கள் எப்படி சினமடைந்தார்களோ அதே போன்ற நிலைமைதான் இப்போதும் ஏற்பட்டுள்ளது.

14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஜ.செ.க.வை தாக்கி இனத்துவேசக் கருத்துகளை உமிழ்ந்து அவர் ஆற்றிய உரைகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

எது எப்படியாயினும் வரலாறு காணாத அளவுக்கு ஊழல் மேலோங்கியுள்ள நம் நாட்டில் இதுதான் ஜனநாயகமாக இருப்பதால் அதனை ஏற்றுக்கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

ஏனெனில் இப்படிப்பட்டவர்களுக்கு வாக்களித்து அந்த உயரிய இடத்திற்கு அனுப்பி வைத்தது மக்கள்தான். அவர்களே தானாக அங்குச் சென்று அமரவில்லையென்பதால் அதற்கான பிரதிபலனை மக்கள் அனுபவிக்கத்தான் வேண்டும்.

எண்ணற்ற ஊழல் வழக்குகளை எதிர்நோக்கி அன்றாடம் நீதிமன்ற வாசல்களை ஏறி இறங்கும் முன்னணி அம்னோ தலைவர்கள் கடந்த சில மாதங்களாக உக்கிரப் போராட்டம் நடத்தி மஹியாடினைக் கவிழ்த்ததற்கான காரணத்தை மக்கள் நன்றாக அறிவார்கள்.

அது ஒன்றும் பிரம்ம ரகசியம் கிடையாது.

ஆனால் அவர்களுடைய கனவு நிறைவேறுமா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவர்கள் திட்டமிட்ட மாதிரி அம்னோவைச் சேர்ந்த ஒருவர் பிரதமராகிவிட்ட போதிலும் ஆட்சி புரியும் கூட்டணியின் தலைவர் இன்னமும் மஹியாடின்தான் எனும் சூழலை நாம் உதாசினப்படுத்திவிட முடியாது.

தனது பெர்சத்து கட்சியின் 31 நாடாளுமன்றத் தொகுதிகளை ஆயுதமாகக் கொண்டு அம்னோவின் சிண்டை தன் வசம்தான் அவர் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களுடைய சுயநலத்திற்காக மஹியாடினை எப்படிக் கவிழ்த்தார்களோ அதே போன்ற வலைக்குள் அவர்களே விரைவில் சிக்கிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எல்லாரும் ‘ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்பதையும் மக்கள் நன்றாக அறிவார்கள்.

ஊழல் வழக்குகளை எதிர்நோக்கியுள்ளவர்கள் அரசாங்கப் பதவிகள் வகிக்க அனுமதிக்கப்போவதில்ல  எனப் பகிரங்கமாகவே அவர் அறிவித்துள்ளதால் அம்னோ தலைவர்களின் சூழ்ச்சி நிறைவேறுமா அல்லது ஜம்பம்தான் பலிக்குமா என்று உறுதியாகத் தெரியாது.

நிலைமை இவ்வாறு இருக்கக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மஹியாடின் எப்படி இரவு பகலாக நிம்மதியின்றி காலத்தைக் கடத்தினாரோ அதே போன்ற சூழல் இஸ்மாய்லுக்கும் ஏற்பட்டாலும் வியப்பில்லை.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து சுயநல அரசியலுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டு, நோய்த்தொற்று, பொருளாதாரம்  மற்றும் மக்களின் நலன் புறந்தள்ளப்பட்ட நிலையில் நிறையப் பேருடைய வாழ்க்கையும்  வாழ்வாதாரமும் சின்னாபின்னமாகிவிட்டது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இந்தக் குறைபாடுகளை எல்லாம் நிவர்த்தி செய்வதற்கு இஸ்மாய்லிடம் போதுமான ஆற்றல் உள்ளதா அல்லது ‘பழைய குருடி கதவைத் திரடி’ என்ற நிலையாகிவிடுமா எனும் ஐயப்பாடும் மக்களிடையே எழத்தான் செய்கிறது.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளபடியால் இப்படிப்பட்ட நிலையற்ற அரசியல் நீரோட்டத்தில்  சிக்கித் தவிக்கும் மக்களின்  சோகங்களுக்கு விரைவில் விமோசனம் கிடைக்கும் என்று தெளிவாகச் சொல்ல முடியாது.