பருவ நிலை மாற்றத்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு: யூனிசெப் எச்சரிக்கை

புதுடில்லி-‘பருவ நிலை மாற்றத்தால் இந்தியா உட்பட நான்கு தெற்கு ஆசிய நாடுகளில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது’ என யூனிசெப் எனப்படும் ஐ.நா. சர்வதேச குழந்தைகள் நிதியம் எச்சரித்து உள்ளது.

யூனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பருவ நிலை மாற்றம் தொடர்பாக சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. உண்மையில் பருவ நிலை மாற்றத்தால் அதிக பாதிப்புக்குள்ளாவது குழந்தைகள் தான். அவர்களின் உடல் நலம் கல்வி பாதுகாப்பு உட்பட அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. புயல் வெப்பக் காற்று உள்ளிட்ட பருவ நிலை மாற்றத்தால் குழந்தைகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் 33 நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு தெற்காசிய நாடுகளும் இடம் பெறறுள்ளன. இந்தப் பட்டியலில் 26வது இடத்தில் இந்தியா உள்ளது. பாகிஸ்தான் 14வது இடத்திலும் வங்கதேசம் 15வது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 25வது இடத்திலும் உள்ளன.

பருவ நிலை மாற்றத்தால் வரும் ஆண்டுகளில் இந்தியாவில் 60 கோடிக்கும் அதிகமான மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிப்புக்குள்ளாவர். இந்தியாவின் நகர பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது அதிகரிக்கும். சர்வதேச அளவில் கடந்த ஆண்டு காற்று மாசு அதிகமாக உள்ளதாக அறியப்பட்ட 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

dinamalar