விரைவில் வெளியேறுங்கள்; இல்லாவிட்டால் மோசமான விளைவுகள் நேரிடும்:  தலிபான்கள் எச்சரிக்கை

கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனையடுத்து அங்கு ஆட்சி அமைக்கும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் உள்ள தத்தம் நாட்டவரை மீட்கும் பணியில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா எனப் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன.

காபூல் விமானநிலையம் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி என மேற்கத்திய நாடுகளின் படைகளால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆகையால், விரைவில் அவர்கள் தங்கள் நாட்டவரை வெளியேற்றிவிட்டு நாட்டைவிட்டு முழுமையாக வெளியேறுமாறு தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறுகையில், அமெரிக்க, பிரிட்டன் படையினர் மீட்புப் பணிகள் பெயரில் இன்னும் கொஞ்சம் நாள் ஆப்கனில் இருக்க எடுக்கும் முயற்சியை நாங்கள் நீட்டிக்கப்படும் ஆக்கிரமிப்பாகவே கருதுகிறோம். சொன்னபடி திரும்பவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அனைத்துப் படைகளும் வெளியேறிவிடும் இன்று ஏற்கெனவே மேற்கத்திய நாடுகள் கூறியிருந்த நிலையில் தற்போது அதை மேலும் நீட்டிக்க ஜி7 நாடுகளின் தலைவர்கள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை, காபூல் விமானநிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆப்கன் பாதுகாப்புப் படை வீரர் உட்பட மூன்று பேர் இறந்தனர். இந்தச் சண்டையில் அமெரிக்க மற்றும் ஜெர்மனி ராணுவ வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

 

(நன்றி Hindutamil)