நைஜீரிய நாட்டு அதிபரின் மகனுக்கும் முக்கிய சமயத் தலைவரின் மகளுக்கும் நடந்த திருமணம் அதன் அழகுக்காகவும், வரிசைகட்டி வந்த ஏராளமான தனி விமானங்களுக்காகவும் பேசுபொருளாகியிருக்கிறது.
இந்த திருமணத்தை ஒட்டி, வடக்கு நைஜீரிய நகரமான கானோ விமான நிலையத்தின் ஓடுபாதையில் இந்த தனி விமானங்கள் வரிசைகட்டி இறங்கின.
நைஜீரியாவின் மேல்தட்டு வர்க்கத்தினரும், மேற்கு ஆப்பிரிக்க பகுதியை சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் இந்த திருமணத்துக்காக இந்த விமானங்களில் அணி அணியாக வந்து சென்றனர்.
யூசூப் புகாரிக்கும் சஹ்ரா நசீர் பேயரோவுக்கும் நடந்த இந்த திருமணம் இந்த ஆண்டு நைஜீரியாவில் நிகழ்ந்த பிரபல நிகழ்வுகளில் ஒன்று.
கானோ மாநிலத்தில் உள்ள பிச்சி நகர எமிர் அரண்மனையில் நடந்த இந்த திருமணத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அதிபர் குடும்பத்துக்கும், அரச குடும்பத்துக்கும் இடையே இப்படி ஒரு திருமண பந்தம் நடப்பது நைஜீரியாவில் முன்னெப்போதும் நடக்காதது என்று பிபிசியிடம் கூறினார் ஒரு வரலாற்று ஆய்வாளர்.
பிரிட்டனின் சர்ரே பல்கலைக்கழகத்தில் இந்த ஜோடி சந்தித்துக்கொண்டது.
சனிக்கிழமைதான் மணமகளின் தந்தை நசீர் அடோ பேயரோ பிச்சி நகரின் எமிராக அதிகாரபூர்வமாக முடிசூட்டிக்கொண்டார். எனவே மணவிழாவின் கொண்டாட்டம் சனிக்கிழமையும் நீடித்தது.
நைஜீரியாவின் முக்கியமான இஸ்லாமியத் தலைவர்களில் ஒருவரான நசீர் அடோ பேயரோவின் சகோதரர் கானோ நகரின் எமிராகவும் உள்ளார்.
சனிக்கிழமை நடந்த ஒரு விமர்சையான விழாவில் பிச்சி நகர எமிருக்கு (வெள்ளை ஆடையில் இருப்பவர்) அவரது அதிகாரத்தைக் குறிக்கும் செங்கோல் வழங்கப்பட்டது.
ஆனால், புதிதாக திருமணமான ஜோடி அந்த முடிசூட்டு விழாவில் பங்கேற்கவில்லை.
மணமகன் குடும்பத்தார் மணமகள் குடும்பத்தாருக்கு 5 லட்சம் நைரா பணம் (1,200 அமெரிக்க டாலருக்கு நிகரான பணம்) சீர்வரிசைப் பணமாக தந்தனர். இது வடக்கு நைஜீரியாவில் சராசரியாகத் தரப்படும் சீர்வரிசைப் பணத்தைப் போல 10 மடங்கு அதிகம்.
மணமக்கள் திருமணத்துக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் மணமகளின் தோள்பட்டை தெரிந்ததால் அது சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது மாதிரி ஆடை அணிவது அறக்கேடானது என்று சிலர் வாதிட்டனர். வேறு சிலர் மணமகள் அப்படி ஆடை அணிந்ததை ஆதரித்தனர் என்கிறார் பிபிசியின் இஷாக் காலித்.
100 விமானங்களா? 50 விமானங்களா?
இந்த நிகழ்வுக்காக விருந்தினர்களை ஏற்றிக்கொண்டு 100 தனி விமானங்கள் வந்ததாக சில செய்திகள் கூறுகின்றன. ஆனால், உண்மையில் 50க்கும் குறைவான விமானங்களே வந்ததாக ஒரு விமான நிலைய அதிகாரி பிபிசியிடம் கூறினார்.
எப்படி இருந்தபோதும், கொரோனா பெருந்தொற்று காரணமாக, விமரிசை குறைவாகவே திருமணம் நடத்தப்பட்டது. விருந்தினர்களில் பெரும்பாலோர் முகக் கவசம் அணிந்திருந்தனர். கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை அதிகரிப்பதை கட்டுப்படுத்த தற்போது நைஜீரியா போராடி வருகிறது.
திருமணத்துக்கு முன்னதாக அதிபர் முகமது புகாரி தமது மகனிடம் இருந்து மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
திருமண விழாவில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் அரண்மனைக்கு பாதுகாப்பு கொடுத்தனர். அருகே உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவுக்காக பிச்சி நகர எமிர் அரண்மனைக்கு முன்பாக அலங்கார வாயில் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
பிச்சி நகருக்கு வந்த அதிபரை வரவேற்க ஏராளமான மக்கள் நீண்ட தூரங்களில் இருந்து வந்திருந்தனர்.
தகவல் தொடர்பு அமைச்சரும், தகுதி வாய்ந்த இமாமும் ஆன இசா அலி பண்டாமி இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.
அரசியல்வாதிகளும், பாரம்பரிய ஆட்சியாளர்களும் நாடு முழுவதிலும் இருந்து இந்த திருமணத்துக்கு வந்திருந்தனர். எதிர்கட்சித் தலைவர்கள் கூட வந்திருந்தனர்.
2015 தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் அதிபர் குட்லக் ஜொனாதனும் விழாவுக்கு வந்திருந்தார்.
கம்பியாவின் முதல் சீமாட்டி ஃபடுமாடா பா பார்ரோ, அண்டை நாடான நைஜரின் முன்னாள் அதிபர் முகமது இசோஃபு ஆகியோர் இந்த திருணத்துக்கு வந்திருந்த வெளிநாட்டு விருந்தினர்களில் சிலர்.
(நன்றி BBC TAMIL)