ரத்த வெள்ளத்தில் சிதறிக் கிடக்கும் உடல்கள்- காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பில் பலர் உயிரிழப்பு

காபூல்:

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு இருக்கும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து எப்படியாவது வெளியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் கடந்த 12 நாட்களாக விமான நிலைய வாசல்களில் பொதுமக்கள் காத்துக்கிடக்கின்றனர்.

காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் விமான நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் எச்சரிக்கை விடுத்தன. விமான நிலையத்திற்கு வெளியே உள்ள மக்கள் அந்த பகுதியை காலி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தின.

அவர்கள் எச்சரிக்கை செய்ததை உறுதி செய்யும் வகையில், இன்று இரவு காபூல் விமான நிலையத்திற்கு வெளியே சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. பிரதான அபே கேட்டில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலிபான் படையினர் உள்ளிட்ட ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. 13 பேர் இறந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

விமான நிலைய வாசல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலிபான் படையினர், குழந்தைகள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர். எனவே, உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

(நன்றி  Maalaimalar)