இராகவன் கருப்பையா – பிரதமர் இஸ்மாய்ல் சப்ரி இன்று அறிவித்த அமைச்சரவை நாட்டு மக்களை எந்த அளவுக்குத் திருப்தி படுத்தியிருக்கும் என்று தெரியாது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தங்களுடைய சுயநலத்தையே முன்வைத்து நாட்டின் பொருளாதாரத்தையும் சுகாதாரத்தையும் இதர பல விசயங்களையும் சீரழித்த அதே நாடாளுமன்ற உறுப்பினர்களை ‘மறு சலவை’ செய்து மீண்டும் பதவியில் அமர்த்தியிருக்கும் பிரதமரின் போக்கானது, எம்மாதிரியான அரசியல் நெருக்கடிக்கு அவர் உள்ளாகியிருக்கிறார் என்பதையே பறைசாற்றுகிறது.
முன்னாள் பிரதமர் மஹியாடின் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தனது அமைச்சரவையை அமைத்த போது இதுபோன்ற அரசியல் நெருக்குதல்களுக்கு ஆளாகியிருக்கமாட்டார்.
அந்தச் சமயத்தில் அவருக்குத் தேவைப்பட்டது வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைதான். அதனால்தான் கல்வி, தகுதி, திறமை எதனையும் பொருள்படுத்தாமல் கண்மூடித்தனமாகக் கணக்கிலடங்காதவர்களை அமைச்சரவையில் அள்ளிப் போட்டுக் கொண்டார். கொல்லைப்புறமாக அரசாங்கத்தைக் கைப்பற்றிய களிப்பில் உறுப்புக் கட்சிகளும் ‘கிடைத்தவரைக்கும் இலாபம்தான்’ எனும் நிலைப்பாட்டில் ஏற்றுக் கொண்டன.
ஆனால் இஸ்மாய்லின் நிலைமை தற்போது முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. மொத்தம் 4 முனைகளிலிருந்து அவருக்கு அரசியல் நெருக்குதல்கள் உள்ளன.
‘நீதிமன்றத் திரள்’ என்று அழைக்கப்படும் அஹ்மட் ஸாஹிட் மற்றும் நஜிப் தரப்பு, மலாய் முஸ்லிம் ஆட்சிதான் வேண்டும் என வெறித்தனமாக ஒற்றைக்காலில் நிற்கும் பாஸ் கட்சி, பி.கே.ஆர். கட்சியிலிருந்து தவளைகளைப்போல் தாவி வந்த அஸ்மின் தரப்பு மற்றும் பெர்சத்துதான் இன்னமும் ஆட்சி செய்கிறது என்று வாதிடும் மஹியாடின் தரப்பு, ஆகிய 4 வெவ்வேறு குழுக்களின் கோரிக்கைகளுக்கு இஸ்மாய்ல் அடிபணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பது எல்லாருக்குமே தெரியும்.
இவர்களையெல்லாம் ஒருசேரச் சமாளிக்கும் வகையில்தான் ‘புதிய பானையில் பழைய சோறு’ எனும் நிலைப்பாட்டில் தனது புதிய அமைச்சரவையை அவர் அமைத்துள்ளதாகத் தெரிகிறது.
மஹியாடின ஆட்சி கவிழ்ந்ததற்கு அவர் மட்டுமே பொறுப்பில்லை. மாறாக அமைச்சர் பதவிகளுக்குக் கொஞ்சமும் தகுதியில்லாத பெரும்பாலான அமைச்சர்களும் அதற்கு முக்கிய காரணம் என்பதும் யாரும் மறுப்பதற்கில்லை.
எனவே தனது கைவசம் மொத்தம் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் வேளையில் நாட்டைச் சீர்குலைத்த அதே ‘மான்புமிகுகளை’ ஏன் மீண்டும் உள்ளே கொண்டுவந்தார் என்பதுதான் மக்களுடைய குழப்பம் இப்போது.
மஹியாடின் அரசாங்கம் கவிழ்ந்த போது விடுபட்டுப் போன வேலைகளை அதே அமைச்சர்கள் தடையின்றித் தொடர வேண்டும் என்பது ஒரு நோக்கமாகக் கூட இருக்கலாம்.
இருந்த போதிலும் இந்த அமைச்சரவையில் பாராட்டப்பட வேண்டிய ஒரே மாற்றம் சுகாதார அமைச்சு மட்டும்தான்.
முன்னாள் அறிவியல் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் இப்போது சுகாதார அமைச்சராக நியமனம் பெற்றுள்ளதை நாம் வரவேற்கத்தான் வேண்டும்.
தடுப்பூசி நடவடிக்கைகளுக்கும் அவர் பொறுப்பு வகிப்பதால் நோய்த்த தொற்றை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் அவர் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
மற்றபடி உயர் கல்வியமைச்சராக மறுநியமனம் பெற்றுள்ள நொராய்னி, அனைத்துலகத் தொழில்துறை அமைச்சராக மீண்டும் பதவியில் அமர்ந்துள்ள அஸ்மின், நிதியமைச்சராகத் தொடரும் தெங்கு ஸஃப்ருல், கல்வியமைச்சர் முஹமட் ரட்ஸி முதலிய நியமனங்கள் எல்லாமே மக்களுக்குப் பெருத்த ஏமாற்றமாகத்தான் அமையும் என்பதில் ஐயமில்லை.
நோய்த்தொற்று இன்று வரையில் வரம்புமீறித்தான் போய்க் கொண்டிருக்கிறது. பெரும்பாலான திரள்கள் தொழிற்சாலைகள் போன்ற வேலையிடங்களில்தான் உருவாகுகின்றன.
இருந்த போதிலும் இத்தகைய இடங்களை முழு முடக்கத்திற்குள் கொண்டு வராத அஸ்மின் பெரும்பாலோரின் கண்டனத்திற்குள்ளானார்.
நாட்டின் நிதி நிலைமை மிக மோசமாகப் போய்விட்ட சூழலில், மலேசியாவின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது என ஒரு அறிவிப்பு செய்து கேலிக்கூத்துக்கு உள்ளானார்.
அதே போல முஹமட் ரட்ஸியின் முன்னுக்குப் பின் முரணான, நிலையற்ற முடிவுகளினால் பள்ளிப் பிள்ளைகள் இன்னமும் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.
சி.ஐ.எம்.பி. பொருளகத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரியான தெங்கு ஸஃப்ருல் பொருளாதாரத்தை வலுப்படுத்தக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்னதான் செய்தார் என்றே தெரியவில்லை.
இந்தப் புதிய அரசாங்கத்தின் ஆயுள்காலம் 2 ஆண்டுகளுக்கும் குறைவுதான் என்றபடியால் நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்களில் ஒருவரான ஜோமோ சுந்தரத்தை இடைக்காலத்திற்கு நிதியமைச்சராக நியமித்திருக்கலாம்.
இனவாதிகளின் எதிர்ப்பு கண்டிப்பாக இருக்கும். ஆனால் நாட்டின் நலனே முக்கியம் என்று கருதும் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளை இஸ்மாய்ல் பெற்றிருப்பார்.