காபூல்-”இந்தியாவுடனான கலாசாரம், பொருளாதாரம், அரசியல் மற்றும் வர்த்தக உறவை முன்பை போலவே தொடர விரும்புகிறோம்,” என, தலிபான் அமைப்பின் முக்கிய தலைவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டேனக்சாய் கூறியுள்ளார்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலிபான் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நல்ல நட்பு இருந்து வந்தது. ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்காக பல திட்டங்களை இந்தியா மேற்கொண்டது. பாகிஸ்தானின் ஆதரவு பெற்றுள்ள தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்துள்ளதால், இரு தரப்பு உறவு எப்படி இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. தலிபான் பயங்கரவாதிகளுடன் இணைந்து பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தலாம் என்ற அச்சமும் உள்ளது.
இந்நிலையில் மேற்காசிய நாடான கத்தாரில் இருக்கும் தலிபான் அமைப்பின் துணைத் தலைவர் ஸ்டேனக்சாய் கூறியுள்ளதாவது:ஆப்கனை பொறுத்தவரை இந்தியா ஒரு மிகவும் முக்கியமான நாடு. கலாசாரம், பொருளாதாரம், அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளை அந்த நாட்டுடன் முன்பைபோலவே தொடர விரும்புகிறோம்.பாக்., வழியாக அல்லது நேரடி விமானம் வாயிலாக வர்த்தக உறவை மேற்கொள்ளலாம்.
புதிய அரசு அமைந்ததும் இந்தியாவுடனான உறவைத் தொடர்வது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஸ்டேனக்சாய் 1980களில் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் ஆப்கன் ராணுவத்துக்காக பயிற்சி மேற்கொண்டவர். 1996ல் ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியபோது அவர் துணை வெளியுறவு அமைச்சராக இருந்தார்.
(நன்றி Dinamalar)