இதுக்கு மட்டும் தலிபான்களுக்கு ஆதரவு தரக்கூடாது!- ஐ.நா.

இந்தியா தலைமையில் நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆப்கன் தொடர்பான தீர்மானத்தை தாக்கல் செய்தன. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 15 உறுப்பு நாடுகளில் 13 நாடுகள் ஓட்டு போட்டன. இதையடுத்து தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:

பிற நாடுகளை அச்சுறுத்தவோ அல்லது தாக்கவோ ஆப்கன் பிராந்தியத்தை தலிபான் பயன்படுத்தக் கூடாது. பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பது, பயிற்சி அளிப்பது, பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிடுவது, நிதி திரட்டுவது போன்ற செயல்பாடுகளுக்கும் ஆப்கனில் இடமளிக்கக் கூடாது.

‘ஆப்கன் மக்கள் மற்றும் வெளிநாட்டினர் எப்போது வேண்டுமென்றாலும் தரை அல்லது வான் மார்க்கமாக வெளிநாடு செல்ல பாதுகாப்பு அளிக்கப்படும்’ என, தலிபான் உறுதி அளித்துள்ளது. அதன்படி தலிபான்கள் செயல்பட வேண்டும். காபூல் விமான நிலையத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. தலிபானும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தில் மேலும் சில பயங்கரவாத அமைப்புகளையும் சேர்க்காததால் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஒரு சில திருத்தங்கள் ஏற்கப்படாததால் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை என சீனா கூறியுள்ளது.

(நன்றி TAMIL SAMAYAM)