ஆப்கானிஸ்தானில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

காபூல்,

ஆப்கானிஸ்தானில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இம்மாதத்துடன் ஐ.நா. உணவு கையிருப்பு தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத பரிதாபநிலை காணப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி நிர்வாகத்தை தலீபான்கள் கைப்பற்றி உள்ளனர். 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறி விட்டன. தலீபான்கள் அமைக்கும் அரசு எப்படிப்பட்டதாக இருக்குமோ என்று ஆப்கானிஸ்தான் மக்கள் கவலைப்படுகிறார்கள்.

மக்களின் கவலைகளை மேலும் அதிகரிக்கும்வகையில், அங்கு உணவு பஞ்சம் தலைவிரித்தாட தொடங்கி உள்ளது. ஆப்கானிஸ்தானின் அன்னிய செலாவணி வெளிநாடுகளில் உள்ளது. அதுவும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனால், சர்வதேச நிதியுதவியை பெற்றுத்தான் ஆட்சி நடத்தும் நிலையில் தலீபான்கள் உள்ளனர்.

அதே சமயத்தில், நிதியுதவி அளிக்கும் சர்வதேச நாடுகள், அனைவருக்கும் உரிமை அளிக்க வேண்டும் என்று தலீபான்களுக்கு நிபந்தனை விதிக்கும் நல்ல வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

ஐ.நா. சபையின் உலக உணவு திட்டம் சார்பில் ஆப்கானிஸ்தானுக்கு உணவு பொருட்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. அவை சமீப வாரங்களில், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வினியோகிக்கப்பட்டன. ஆனால், அந்த உணவு கையிருப்பு இம்மாத இறுதிக்குள் தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், ஆப்கானிஸ்தானில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் தோன்றி உள்ளது. இதுகுறித்து ஐ.நா. மனிதாபிமான உதவிகள் பிரிவின் தலைவர் ரமிஸ் அலக்பரோவ் கூறும்போது, ஆப்கானிஸ்தானில் எல்லா உதவிகளுக்கும் 130 கோடி டாலர் தேவைப்பட்டது. ஆனால், அதில் 39 சதவீத தொகை மட்டுமே கிடைத்துள்ளது. ஐ.நா.வின் உணவு கையிருப்பு, இம்மாத இறுதிக்குள் தீர்ந்து விடும். அதனால் அங்கு பட்டினி அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மொத்த மக்கள்தொகை 3 கோடியே 80 லட்சம். அதில் மூன்றில் ஒரு பங்கு மக்கள், தங்களுக்கு நாள்தோறும் ஒருவேளை உணவாவது கிடைக்குமா என்று கவலைப்படுகிறார்கள்.

நலிந்த நிலையில் உள்ள மக்களுக்கு உணவு அளிப்பதற்கு உடனடியாக ரூ.1,500 கோடி தேவைப்படுகிறது. அத்துடன், உணவு உள்ளிட்ட பொருட்களை நேரடியாக காபூலுக்கு கொண்டுவர விமான நிலையத்தை பயன்படுத்தும் உரிமையை கேட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.

ஒருபுறம் உணவு தட்டுப்பாடு இருக்கும்நிலையில், அரசு ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. அதனால், அவர்களின் நிலைமையும் பரிதாபமாக உள்ளது. கடைகளுக்கு பொருட்கள் வரத்து இருந்தாலும், விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் பணத்தின் மதிப்பு குறைந்து வருகிறது. அந்நாட்டு பணம் முடக்கப்பட்டுள்ளது. இவற்றை மீறி, நாட்டில் ஸ்திரத்தன்மையை உண்டாக்க வேண்டிய சவால், தலீபான்களுக்கு இருக்கிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலையும் சமாளித்து, அவர்கள் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட வேண்டிய நிலையில் உள்ளனர்.

(நன்றி Dailythanthi)