சீனா விமானப்படை தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் குற்றச்சாட்டு

தைபே,

கடந்த1949 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின்போது சீனாவும் தைவானும் பிரிந்தன. ஆனால், தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடா்ந்து கூறி வருகிறது. அதுமட்டுமின்றி, அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டி வருகிறது.

மேலும் தைவானை தன் தேசிய பாதுகாப்புச் சட்டம் வாயிலாக முழுதுமாக ஆக்கிரமிக்க சீனா முயற்சித்து வருகிறது. இதனையடுத்து தைவானில் அவ்வப்போது சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, தைவான் ராணுவத்துடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சீன விமானப்படை தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, தைவானை மிரட்டுவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் தங்கள் நாட்டின் வான் எல்லைக்குள் சீன விமானப் படையின் 19 விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் குற்றம்சாட்டியுள்ளது. அதில் அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் விமானங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. தைவான் மீது எந்த நேரமும் சீனா போர் தொடுக்கலாம் என்ற நிலை நிலவி வரும் சூழலில், தைவானின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன விமானப்படையின் ஜே 16 ரக ஜெட் விமானங்கள், எச் 16 ரக விமானங்கள் என, 19 விமானங்கள், தங்கள் வான் எல்லைக்குள் நுழைந்து வட்டமிட்டதாகவும், அவற்றை தைவான் விமானப்படை விரட்டியடித்ததாகவும் தைவான் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் இது குறித்து சீனா தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(நன்றி Dailythanthi)