பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி நான்காவது டெஸ்ட் போட்டியை வென்றிருக்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.
157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது.
பெருமை மிக்க ஓவல் மைதானத்தில் 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா பெற்றிருக்கும் முதல் டெஸ்ட்வெற்றி இது. 50 ஆண்டுக் காத்திருப்பு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
1971-ஆம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணிதான் கடைசியாக ஓவல் மைதானத்தில் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்திருந்தது.
ஹெட்டிங்லி மைதானத்தில் பெற்ற இன்னிங்ஸ் தோல்வி அழுத்தத்தில்தான் இந்திய அணி ஓவல் மைதானத்தில் களமிறங்கியது. இங்கும் முதல் இன்னிங்ஸ் மிக மோசமானதாகவே முடிவுக்கு வந்தது. 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்கு 99 ரன்கள் முன்னிலை கிடைத்தது.
ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித் சர்மாவின் அற்புதமான சதத்தால் இந்தியா மீண்டும் முன்னிலைக்கு வந்தது. தோல்விக்கு பதிலடி கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது இந்தச் சதத்தின் மூலம்தான்.
ரோஹித் சர்மா 127 ரன்கள் அடிக்க அவருக்கு ஆதரவாக புஜாரா 61 ரன்களும் விராட் கோலி 44 ரன்களும் எடுத்ததால் தொடக்கத்திலேயே வலுவாக முன்னேறியது இந்தியா. ரிஷப் பந்த், ஷ்ரத்துல் தாக்குர் என அடுத்த வரிசை வீரர்களும் அரைச் சதங்களை அடித்ததால் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா
கடைசி நாளில் இங்கிலாந்து 291 ரன்கள் தேவைப்பட்டன. ஒரேயொரு நாளில் இத்தனை ரன்களை அடிப்பதோ அல்லது அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவோ இரு அணிகளுக்குமே நிச்சயமாக வாழ்வா, சாவா என்ற போராட்டம்தான்.
ஆனால் இந்தியப் பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோரின் துல்லியமான தாக்குதல்களால் இங்கிலாந்து அணி நிலை குலைந்துவிட்டது. டிரா செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்த கடைசி மூன்று விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் தகர்த்தார்.
பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஷ்ரத்துல் தாக்குர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்தப் போட்டியில் தனது நூறாவது விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார்.
குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமை பும்ராவுக்குக் கிடைத்திருக்கிறது. இதற்கு அவருக்கு 24 போட்டிகள் தேவைப்பட்டிருக்கின்றன. இதற்கு முன்னதாக 25 போட்டிகளில் கபில்தேவ் 100விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
ஓவல் வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று முன்னிலை பெற்றிருக்கிறது இந்திய அணி. கடைசி போட்டி மான்செஸ்டர் நகரில் வரும் 10-ஆம் தேதி நடக்கிறது.
ஓவல் மைதானத்தில் இந்திய அணி பெற்ற வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அடுத்த போட்டியை வென்றாலோ, டிரா செய்தாலோ இந்திய அணி தொடரை வென்று சாதனை படைக்க முடியும்.
(நன்றி BBC TAMIL)