அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு தாலிபன்கள் கட்டுப்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தின் வழியாக முதல் முறையாக வெளிநாட்டுக்கு பயணிகள் அனுப்பப் பட்டுள்ளனர்.
கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு இந்தப் பயணிகள் அழைத்து வரப்பட்டனர்.
இதில் 113 பேர் இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இவர்களில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் குடிமக்கள் அடங்குவார்கள்.
அண்மையில் கத்தாருக்குச் சென்றிருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கென், ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்பதற்கு உதவும்படி கேட்டுக் கொண்டார்.
கனடாவைச் சேர்ந்த 43 பேரும், நெதர்லாந்தைச் சேர்ந்த 13 பேரும் மீட்கப்பட்டிருப்பதாக அந்தந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, 1.24 லட்சம் பேர் அங்கிருந்து விமானங்கள் மூலமாக அழைத்து வரப்பட்டனர். வெளியேறுவதற்கான கெடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி முடிந்த பிறகும் பலர் அங்கு சிக்கியிருந்தனர்.
(நன்றி BBC TAMIL)