ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த கடைசி ட்ரோன் தாக்குதல் குறித்து அமெரிக்க ஊடகங்கள் ஐயம்

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா, கடைசி சில நாட்களில் நடத்திய ட்ரோன் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய செய்தித்தாள்கள் இந்தத் தாக்குதலில் ஒரு ஐஎஸ் செயல்பாட்டாளர் கொல்லப்பட்டார் என்ற செய்தி தவறானது என்று கூறியுள்ளன.

காபூலில் மனிதாபிமான உதவிக்குழுவைச் சேர்ந்த ஒருவர் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று செய்தித் தாளில் செய்தி வெளியானது. வாகனத்தில் வெடிபொருட்கள் இருந்ததாகவும் இது இரண்டாவது குண்டுவெடிப்புக்கு வழிவகுத்தது என்றும் அமெரிக்க ராணுவம் கூறுவதை ஊடகங்கள் மறுக்கின்றன,

இருப்பினும், பென்டகன், தாங்கள் ஒரு “பெரிய அச்சுறுத்தலை” தவிர்த்ததாகவே கூறுகிறது.

ஆகஸ்ட் 29 அன்று, காபூலில் ட்ரோன் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஆறு குழந்தைகள் இருந்ததாக மற்ற குடும்ப உறுப்பினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

மூன்று நாட்களுக்கு முன்னதாக காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதால் அந்த நேரத்தில் அமெரிக்க ராணுவம் உஷார் நிலையில் இருந்தது.

வீடியோ, புகைப்பட ஆதாரங்கள்

ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் 20 ஆண்டு காலப் பணி ஆகஸ்ட் 30 அன்று முடிவடைந்தது.

இரண்டு செய்தித்தாள்களும் ஆதாரத்திற்காக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சேகரித்து, நிபுணர்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளுடன் அதைப் பற்றிச் செய்தி வெளியிட்டன. இதற்குப் பிறகு, வாகனத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று கிடைத்த ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்ற முடிவுக்கு அவை வந்தன.

தாக்குதலுக்கு முன்னர் கொல்லப்பட்ட நபரின் அடையாளம் தெரிந்திருக்கவில்லை என்றும் ஆனால் பின்னர் அந்த நபர், ஐ எஸ்-ன் ஆப்கானிஸ்தான் பிரிவைச் சேர்ந்தவர் என்று கருதப்படுவதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் மார்க் மிலே, இது ஒரு “சரியான தாக்குதல்” என்று கூறினார்.

நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட், அந்த நபர் 43 வயதான இஸ்மராய் அஹ்மதி என்றும் அவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த நியூட்ரிஷன் அண்ட் எஜுகேஷன் இன்டர்நேஷனல் என்ற அமைப்புடன் தொடர்புடையவர் என்றும் கூறுகிறது. அஹ்மதி அமெரிக்காவிற்குக் குடிபெயர விண்ணப்பித்திருந்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.

வாகனத்தில் தேவையான பொருட்கள் இருந்தன

ஐஎஸ் அமைப்பின் வசம் இருந்த ஒரு வீட்டை விட்டு வெளியேறிய ஒரு வெள்ளை செடான் வாகனத்தை துரத்தியதை அமெரிக்க இராணுவம் ஒப்புக்கொண்டதாக நியூயார்க் டைம்ஸ் கூறியது. அவர்கள் பல உரையாடல்களை இடைமறித்து ஒட்டுக் கேட்டதாகவும் அந்த வாகனம், பல இடங்களில் நின்று பொருட்களை டெலிவரி செய்ய வேண்டியிருந்ததாகவும் கூறப்பட்டது.

ஒரு பாக்கெட் மிகப் பெரியதாக இருந்ததாகவும், அதில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கருதப்பட்டது என்றும் ஓர் அமெரிக்க அதிகாரி கூறினார்.

பாதுகாப்பு தொடர்பான வீடியோக்களை அவர்கள் ஆய்வு செய்ததில், அஹமதி மடிக்கணினியுடன் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாகப் பெரிய தண்ணீர் கேன்களையும் எடுத்துச் செல்வது தெரிந்ததாகவும் செய்திதாளில் செய்தி வெளியானது.

பின்னர் அஹ்மதி வீட்டிற்கு சென்றார். அமெரிக்க ட்ரோன் ஆபரேட்டர்கள் அவர் மற்றொரு நபருடன் பேசுவதைப் பார்த்து தாக்குதல் நடத்த முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அஹ்மதி தாக்கப்பட்டபோது, அவரது குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருந்தனர். இரண்டு வயது இளம் குழந்தையும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

என்ஈஐ தலைவர் ஸ்டீவன் குவான் வாஷிங்டன் போஸ்ட்டிடம் தனது தொண்டு நிறுவனம் வெள்ளை டொயோட்டா செடான் வைத்திருப்பதாக கூறினார்.

இந்த அமைப்பிற்கும் ஐ எஸ்-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் மறுத்தார். அவர், “நாங்கள் மக்களுக்கு உதவ முயற்சி செய்கிறோம். மக்களைக் கொல்ல நாங்கள் ஏன் வெடிபொருட்களை வைத்திருக்க வேண்டும்?” என்கிறார்.

அடுத்த நாள் ஒரு வெள்ளை டொயோட்டா காரில் இருந்து ராக்கெட் ஒன்று ஏவப்பட்டு தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் ஐ எஸ் ஒப்புக்கொண்டதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்தது. அது அஹமதி பயன்படுத்தியதைப் போன்ற ஒரு கார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வெடிப்பொருள் இருந்ததற்கான வலுவான ஆதாரம் இல்லை

ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பு, வாகனத்தில் வெடிபொருட்கள் இருப்பதைக் குறிப்பதாகப் பென்டகன் கூறியது.

ஆனால் இதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று இரண்டு செய்தித்தாள்களும் கூறுகின்றன.

வாஷிங்டன் போஸ்ட், அந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தின் புகைப்படங்களை நிபுணர்களுக்கு பகுப்பாய்வுக்காக அனுப்பியது. ஒரு நிபுணர், ஃபெரென்க் டால்னோகி-வெரெஸ், காரில் கணிசமான அளவு வெடிபொருட்கள் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறினார். வாகனத்தின் எரிபொருளில் இருந்து புகை வெளியேறியதால் இரண்டாவது குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என்று அவர் கூறினார்.

நிபுணர் பிரையன் காஸ்ட்னர், இரண்டாவது வெடிப்பு அநேகமாக “கார் தீப்பிடித்ததாலோ அல்லது எரிவாயு அல்லது எண்ணெயாலோ ஏற்பட்டிருக்க வேண்டும்” என்று கூறினார்.

நியூயார்க் டைம்ஸ் மூன்று ஆயுத நிபுணர்களை மேற்கோள் காட்டி ஆதாரங்கள் இல்லாததைச் சுட்டிக்காட்டுகிறது. அருகிலுள்ள வாசற்கதவில் ஒரே ஒரு கீறல் இருந்தது, சுவர் இடிக்கப்படவில்லை மற்றும் வேறு எந்த வாகனம் கவிழ்ந்ததாகவோ மரங்கள் முறிந்ததாகவோ சேதப்படுத்தப்பட்டதாகவோ தகவல் இல்லை என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா என்ன கூறியது?

ட்ரோன் தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா இன்னும் முழுமையான இறுதி அறிக்கையை வெளியிடவில்லை.

ஊடக செய்திகளுக்கு பதிலளித்த பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கர்பி, அமெரிக்கா “தாக்குதலை மதிப்பீடு செய்து வருகிறது” என்றார். “பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேறு எந்த ராணுவமும் இவ்வளவு கடினமாக உழைக்கவில்லை” என்றும் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைவர் மிலே, “இந்த தாக்குதல் வலுவான நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டது, நாங்கள் ஒரு பெரிய அச்சுறுத்தலைத் தடுத்து விமான நிலையத்தில் எங்கள் மக்களை பாதுகாத்தோம் என்று தான் நாங்கள் இன்னும் உறுதியாக நம்புகிறோம்” என்று விளக்குகிறார்.

(நன்றி BBC TAMIL)