பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சான் ஜோஸ் என்ற கப்பல் கடலில் காணமல் போனது. இப்போது அது எங்கு இருக்கிறது என்று தெரியும். ஆனால் அது யாருக்குச் சொந்தமானது என்பதில் சண்டை ஏற்பட்டிருக்கிறது.
ஏனென்றால், அதில் இருந்தது அத்தனையும் தங்கமும் இன்னபிற மதிப்புமிக்க பொருள்களும். அதன் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்.
அது 1708-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 தேதி. கொலம்பியா நாட்டுக்கு அருகே கடல் பகுதியில் சான் ஜோஸ் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. அந்த நாளின் பிற்பகலில் இருந்து பிரிட்டிஷ் கப்பலுடன் அது சண்டையில் ஈடுபட்டிருந்தது.
அதன் பிறகு அந்தக் கப்பல் கரீபியன் கடலில் காணாமல் போனது. அதில் இருந்த 600 பேருடன் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் நகைகளுடன் அது மூழ்கிப்போனது.
பல நூற்றாண்டுகளாக, சான் ஜோஸ் கப்பல் யாருக்கும் தெரியாத கடலின் தரையில் கிடந்தது. 2015 இல் அந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக கொலம்பிய அரசாங்கம் அறிவித்தபோது மர்மம் அவிழத் தொடங்கியது.
இப்போதும் கொலம்பியவின் கடலுக்கு அடியில் 600 மீ ஆழத்தில் கப்பலின் பாகங்கள் கிடக்கின்றன. அதில் உள்ள தங்கப் புதையல் யாருக்குச் சொந்தம் என்பதில் பல நாடுகளும் போட்டியிடுகின்றன.
கொலம்பிய அரசு தங்கப் புதையலுடன் மூழ்கிய கப்பல் இருக்கும் இடத்தை துல்லியமாக அறிவிக்கவில்லை. ஆயினும் இது ரொசாரியோ தீவுகளுக்கு அருகே ஏதோ ஒரு இடத்தில் இருக்கலாம் என்று தெரிகிறது. கொலம்பியா அறிவிக்காவிட்டால் அது எங்கிருக்கிறது என்று கற்பனை செய்து பார்ப்பது கடினம்.
இந்தப் புதையல் கப்பல் நீண்ட காலமாக கற்பனைக் கதைகளின் மையமாக இருந்திருக்கிறது. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்கஸ் இந்தக் கப்பலைப் பற்றி எழுதியிருக்கிறார். அவரது கதையின் நாயகன் கடலுக்குள் மூழ்கி கப்பலைத் தேடுவது போன்று அவர் கற்பனை செய்திருந்தார்.
கப்பலுக்கு என்ன நேர்ந்தது?
சான் ஜோஸ் கப்பல் பனாமாவின் துறைமுக நகரான போர்ட்பேலோவில் இருந்து 1708-ஆம் ஆண்டு மே மாதம் புறப்பட்டது. ஸ்பெயினின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த “அப்போதைய பெரு நாட்டில்” இருந்து எடுக்கப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த கற்கள் அந்தக் கப்பலில் இருந்தன. அவற்றின் இன்றைய மதிப்பு 1.5 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கலாம். வாரிசுரிமைப் போரில் ஈடுபட்டிருந்த ஸ்பெயினின் மன்னர் ஐந்தாம் பிலிப்புக்கு அது தேவைப்பட்டது.
போரில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷார் இந்தக் கப்பலை கார்த்தஜீனா நகருக்கு அருகே தாக்கக்கூடும் என்று கேப்டன் ஜோஸ் பெர்ணான்டஸுக்குத் தெரிந்திருந்தது. இந்த நகர்தான் கியூபாவின் ஹவானா நகரை நோக்கிய நீண்ட பயணத்துக்குத் தயார்படுத்துவதற்கான ஒரு குறுகிய கால நிறுத்தமாக இருந்தது. அபாயம் தெரிந்தாலும் பயணத்தைத் தொடர கேப்டன் முடிவெடுத்தார்.
ஜூன் 8-ஆம் தேதி பிற்பகலில் சான் ஜோஸ் கப்பலின் புதையலைக் கைப்பற்றுவதற்கான போர் தொடங்கியது. கைத்துப்பாக்கிகள், வாள்கள் மற்றும் கத்திகளுடன் ஆயுதம் ஏந்திய பிரிட்டிஷ் கடற்படை மூன்று முறை கப்பலில் ஏறி அதை கைப்பற்ற முயன்றதாக கார்த்தஜீனாவில் உள்ள கரீபியன் கடற்படை அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளரான கோன்சலோ கூறுகிறார்.
“இந்தச் சண்டையில் சான் ஜோஸ் வெற்றி பெற்றது. ஆனால் கடைசியான தருணங்கள் என்னவானது என்று தெரியவில்லை” என்கிறார் கோன்சலோ.
கப்பலுக்குச் சேதமடைந்திருக்கலாம், அல்லது பயணிகள் கேப்டனுக்கு எதிராகக் கலகம் செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஆனால் கப்பலோ, அதில் இருக்கும் பொக்கிஷங்களோ மூழ்குவதற்கு யாரும் விரும்பவில்லை என்பது மட்டும் உறுதி. “எதிரிகளிடம் சரணடைந்து, வெறுங்கையுடன் ஸ்பெயினுக்குத் திரும்புவதற்குப் பதிலாக துப்பாக்கி வெடிமருந்துகளைப் பற்றவைத்து, கப்பலை அதன் கேப்டனை மூழ்கடித்திருக்கலாம்” என்று கூறுகிறார் கோன்சலோ.
சான் ஜோஸ் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது?
27 நவம்பர் 2015 அன்று, சான் ஜோஸ் கப்பல் ரெமூஸ் 6000 என்ற ரோபோ நீர்மூழ்கியால் கண்டுபிடிக்கப்பட்டது. இது அமெரிக்காவை தளமாகக் கொண்ட வூட்ஸ் ஹோல் என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
ஏறக்குறைய 4 மீட்டர் நீளம் கொண்ட இந்த தானியங்கி ரோபா கடலின் மேற்பரப்பில் இருந்து 6 கிமீ ஆழம் வரை சென்று ஆய்வு செய்யும். இது சான் ஜோஸின் 9 மீ உயரம் வரை இறங்கி புகைப்படங்களை எடுத்திருக்கிறது. இதுவே சான் ஜோசை அடையாளம் காண ஆய்வாளர்களுக்கு உதவியது.
“இந்தக் கப்பல் 300 ஆண்டுகால காலனி ஆதிக்க வரலாற்றின் பிரதிநிதி” என கொலம்பிய வரலாற்று ஆய்வாளர் எர்னெஸ்டோ மான்டிநெக்ரோ கூறினார்.
27 நவம்பர் 2015 அன்று, சான் ஜோஸ் கப்பல் ரெமூஸ் 6000 என்ற ரோபோ நீர்மூழ்கியால் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கொலம்பியா கடற்பகுதியில் 1000 கப்பல்கள் மூழ்கியுள்ளன. அவை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட, சான் ஜோஸ் கப்பல் கொலம்பியாவால் கண்டுபிடிக்கப்பட்டபோதும், அதன் தொடர்ந்து எல்லைக்குள்தான் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சான் ஜோஸ் கப்பலில் இருந்த தங்கம் உள்ளிட்டவை எடுக்கப்பட்ட பொலிவியப் பூர்வீக நாடான கரா காராவைப் போலவே, ஸ்பெயினும் கப்பலின் ஒரு பகுதியை உரிமை கோரியது.
கப்பலும் பொக்கிஷங்களும் யாருக்குச் சொந்தம்?
சான் ஜோஸ் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக சட்டப் போராட்டங்களில் சிக்கியிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த கடல் மீட்பு நிறுவனமான எஸ்எஸ்ஏ, சான் ஜோஸைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் அதன் 50 சதவிகித உரிமை தங்களுக்கே சொந்தம் என்றும் 1980-களில் அறிவித்தது. இது தொடர்பாக கொலம்பிய அரசுடன் உடன்பாடு செய்து கொண்டிருப்பதாகவும் கூறியது.
ஆனால் 2015-ஆம் ஆண்டு கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக அப்போதைய கொலம்பிய அதிபர் மேனுவல் சான்டோஸ் அறிவித்தபோது, எஸ்எஸ்ஏ நிறுவனத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அந்த நிறுவனம் கூறிய இடத்துக்கும் கப்பல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கும் தொடர்பே இல்லை என்று கொலம்பிய அரசு கூறிவிட்டது. இது தொடர்பான வழக்கு கொலம்பிய உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது.
கப்பலைக் கண்டுபிடிக்க உதவிய எம்ஏசி என்ற நிறுவனத்துடன் கொலம்பிய அரசு 2019-ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டின்படி அதன் 45 சதவிகிதப் பொக்கிஷங்கள் அந்த நிறுவனத்துக்குச் செல்லும். ஆனால் தேசிய பண்பாடு, பாரம்பரிய நினைவுப் பொருள்கள் அவற்றில் அடங்காது.
“கொலம்பிய கடல் எல்லைக்குள் மூழ்கிய சான் ஜோஸ் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது வரலாற்றிலேயே முக்கியமானதாகும். சட்டத்தின் மூலம் நீரில் மூழ்கிய நமது பாரம்பரியத்தின் பெருமையை மீட்டெடுக்க முடியும்” என்று 2018-ஆம் ஆண்டில் முன்னாள் அதிபர் சான்டோஸ் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க நிறுவனம், ஸ்பெயின், கொலம்பியா என மூன்று தரப்பு உரிமை கோரும் பொக்கிஷக் கப்பலை மீட்பது தொடர்பாக பொதுவெளியில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால ரொசோரியோ தீவுப் பகுதி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடம் என்பதால் ஏராளமான படகுகள் அங்கு சென்று வருவதுண்டு. அவற்றுக்கு இடையே வேறு யாரேனும் அந்தப் பொக்கிஷங்களைக் கைப்பற்றிவிடக் கூடாது என்ற அச்சம் நீடித்திருக்கிறது.
(நன்றி BBC TAMIL)