2020 முதல் இந்த ஆண்டு ஜூன் வரையில், போதைப்பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 25 இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஜைனுடின் இன்று நாடாளுமன்றப் பதிலில் தெரிவித்தார்.
குற்றத் தடுப்பு சட்டம் 1959 (போகா), பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா), பயங்கரவாதத் தடுப்பு சட்டம் 2015 (போட்டா) மற்றும் ஆபத்தான மருந்துகள் (சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்) சட்டம் 1985 ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் எண்ணிக்கை குறித்து அலோர்ஸ்டார் நாடாளுமன்ற உறுப்பினர் சான் மிங் காய் கேட்ட கேள்விக்கு ஹம்சா பதிலளித்தார்.
“ஆபத்தான மருந்துகள் (சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்) சட்டம் 1985-இன் கீழ், 2020 முதல் ஜூன் 2021 வரை மொத்தம் 1,814 பேர் கைது செய்யப்பட்டனர்.
“அந்த எண்ணிக்கையில், 1.38 விழுக்காட்டினர் (25 பேர்) இளைஞர்கள் ஆவர்,” என்று ஹம்சா கூறினார்.
இந்தச் சட்டம், மற்றவற்றுடன், ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் தொடர்பான அல்லது சம்பந்தப்பட்ட எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் எதிராக தடுத்து வைக்க அனுமதிக்கிறது.
இதற்கிடையில், 2020 முதல் ஜூன் 2021 வரை, சோஸ்மாவின் கீழ் 369 தனிநபர்களையும், போக்காவின் கீழ் 2,832 நபர்களையும் அதிகாரிகள் தடுத்து வைத்தனர், அதே நேரத்தில் போட்டாவின் கீழ் கைதுகள் இல்லை என்று ஹம்சா கூறினார்.
அந்த எண்ணிக்கையில், இளைஞர்கள் யாரும் ஈடுபடவில்லை என்றார் அவர்.