அன்வாரை வரம்பு மீறி புகழ்ந்த ராயர்

இராகவன் கருப்பையா – இந்தியாவின் அகிம்சை சுதந்திரப் போராட்ட வீரரான மஹாத்மா காந்திக்கும் கருப்பின விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மண்டேலாவுக்கும் ஈடு இணையற்றவர்களாக கருதப்படுகிறார்கள்.

இந்நிலையில் பினேங் மாநிலத்தின் ஜெலுத்தோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான நேத்தாஜி ராயர் சில தினங்களுக்கு முன் கோமாளித்தனமாக சில விஷயங்களைப் பேசி கேலிக் கூத்துக்கு உள்ளானார்.

நெல்சன் மண்டேலாவிற்கும் மஹாத்மா காந்திக்கும் நிகராக பிரதமர் அன்வர் இப்ராஹிமும் உலகம் முழுவதும் புகழ் பெற்றுள்ளார் என்று அவர் குறிப்பிட்டது நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அது மட்டுமின்றி அந்த உரையின் பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு, குறிப்பிட்ட ஒரு சாரரின் சினத்தையும் கிளறிவிட்டுள்ளது வியக்கத்தக்க ஒன்றல்ல.

நேத்தாஜி ராயரின் இந்த அனாவசியமான ஒப்பீடானது, ஈடு இணையற்ற மண்டேலாவையும் காந்தியையும் சிறுமைப்படுத்தியுள்ளது என்பதைவிட அன்வாரை அவமானப்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

ஒரு இனத்தின் விடுதலைக்காகவும் ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கும் வாழ்நாள் முழுவதும் அயராது போராடிய இரு மகான்களை அன்வாருடன் ஒப்பிடுவது முற்றிலும் அறிவிலித்தனம் என பலர் கருதுகின்றனர்.

சம்பந்தமே இல்லாத, அதிகப்பிரசங்கித்தனமான இந்த ஒப்பீட்டை அனேகமாக அன்வார் கூட விரும்பியிருக்கமாட்டார்.

“கூஜா தூக்குகிறாயா, அமைச்சர் பதவிக்கு அடி போடுகிறாயா,” என்றெல்லாம் எதிர்கட்சி உறுப்பினர்கள் நையாண்டி செய்து கூச்சலிடும் அளவுக்கு ராயர் நடந்து கொண்டது கேலிக் கூத்தானது.

அன்வாருக்கு விசுவாசமாக இருப்பதைக் காட்டிக் கொள்வதற்கு இப்படியா ஒப்பீடு செய்வது? அவ்விரு  மகான்களின் வரலாறு வேறு, அன்வாரின் பாதை வேறு என்பது இவருக்குத் தெரியாதா என்ன?

நம் சமூகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் நமக்காகக் குரல் கொடுக்காமல் மவுன சாமியார்களாக இருக்கிறார்கள் எனும் குறைபாடு நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே இருக்கிறது.

எண்ணற்றப் பிரச்சனைகளில் மூழ்கிக் கிடக்கும் நம் சமூகம், முறையான வழித்தடமின்றி திக்கற்ற நிலையில்தான் இன்னமும் பரிதவித்துக் கொண்டிருக்கிறது.

அவர்களில் பலர் ராயரை வசைப் பாடியுள்ளனர். இப்படி ஒரு சூழலை அவர் தானாகவே தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றே நமக்குத் தோன்றுகிறது.