நீருக்குள் புதைந்திருக்கும் 8-ஆவது கண்டத்தைக் கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானிகளுக்கு 375 ஆண்டுகள் ஆகின. ஆனால் அதற்குள் இருக்கும் மர்மங்கள் இன்னும் தெளிவாகப் புலப்படவில்லை.
அது 1,642-ஆவது ஆண்டு. உலகின் எட்டாவது கண்டத்தைத் தேடும் பணியில் டச்சு மாலுமியான ஏபெல் டாஸ்மென் ஈடுபட்டிருந்தார். பூமியின் தெற்கு அரைக் கோளத்தில் ஒரு பரந்த கண்டம் இருக்கிறது என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.
அந்தக் காலகட்டத்தில் தெற்கு அரைக்கோளப் பகுதி ஐரோப்பியர்களுக்கு மர்மமாகவே இருந்தது. வடக்கேயுள்ள தங்களது கண்டத்தை சமநிலைப் படுத்தும் வகையில் தெற்கே ஒரு நிலப்பரப்பு இருக்க வேண்டும் என்று அவர்கள் கணித்திருந்தார்கள். அதற்கு டெர்ரா ஆஸ்ட்ராலிஸ் என்று பெயரும் வைத்தார்கள்.
இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் உள்ள தனது நிறுவனத்தின் தளத்திலிருந்து இரண்டு சிறிய கப்பல்களுடன் புறப்பட்டு மேற்கு, பின்னர் தெற்கு, பின்னர் கிழக்கு நோக்கிப் பயணித்து இறுதியில் நியூசிலாந்தின் தெற்கு தீவைச் சென்றடைந்தார் டாஸ்மேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அங்கு குடியேறியதாகக் கருதப்படும் உள்ளூர் மவோரி மக்களுடனான அவரது முதல் சந்திப்பு கசப்பாக முடிந்தது. மோதல் ஏற்பட்டது.
அடுத்த நாளில் டச்சு கப்பல்களுக்கு இடையில் செய்திகளை அனுப்பும் ஒரு சிறிய படகு மீது அவர்கள் படகைக் கொண்டு மோதினார்கள். அதில் நான்கு ஐரோப்பியர்கள் இறந்தனர். ஐரோப்பியர்கள் பதிலுக்கு தங்களுடைய எறிகணைகள் மூலம் உள்ளூர் மக்களின் துடுப்புப் படகுகளைத் தாக்கினர். அதன் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால் டாஸ்மனின் ஆய்வுப் பயணம் முடிவுக்கு வந்தது.
மோதல் நடந்த இடத்துக்கு மூர்டேனர்ஸ் – கொலைகாரர்கள் – என்று பெயரிட்டார். புதிய நிலத்தில் கால் வைக்காமல் சொந்த நாட்டுக்குத் திரும்பினார். பிரும்மாண்டமான தெற்குக் கண்டத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக நம்பினாலும், அவர் அந்த இடத்துக்கு மீண்டும் திரும்பி வரவேயில்லை.
அந்த நேரத்தில் ஆஸ்திரேலியக் கண்டம் ஏற்கெனவே அறியப்பட்டிருந்தது. ஆனால் அதுதான் தாங்கள் தேடிய தெற்குக் கண்டம் என்று ஐரோப்பியர்கள் கருதவில்லை. பின்னர் மனம் மாறி அதற்கு ஆஸ்திரேலியா என்ற பெயரை வைத்துவிட்டார்கள்.
2017-ஆம் ஆண்டில் புவியியலாளர்கள் குழு புதியாக ஸீலாண்டியா என்ற புதிய கண்டத்தைக் கண்டுபிடித்தாக அறிவித்தது. அந்த அறிவிப்பு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.
மடகாஸ்கரைப் போல ஆறு மடங்கு பெரிதாக சுமார் 49 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டதாக அது இருக்கும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது.
ஆனால் கலைக்களஞ்சியங்களும், வரைடங்களும், தேடுபொறிகளும் இதை ஏற்கவில்லை. உலகில் ஏழு கண்டங்கள்தான் இருக்கின்றன என்பதில் அவை பிடிவாதமாக இருந்தன. அது தவறு என புவியியலாளர் குழு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
புதிய கண்டம் மற்ற அனைத்துக் கண்டங்களையும் விடப் புதியது, சிறியது, இளையது என்று கவர்ச்சிகரமாகக் கூறப்பட்டது. இந்தக் கண்டத்தின் 94 சதவிகிதப் பரப்பு நீருக்குள் மூழ்கியிருக்கிறது. நியூசிலாந்து போன்ற சில தீவுகள் மட்டும் கடல் மட்டத்துக்கு மேலே இருக்கின்றன.
இந்தக் கண்டுபிடிப்பு ஒரு சிறிய தொடக்கம்தான். நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் இந்தக் கண்டத்தைப் பற்றிய விவரங்கள் இன்னும் புதிராகவே உள்ளன. அதன் ரகசியங்கள் 6,560 அடிக்குக் கீழே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அது எப்படி உருவானது, அங்கு யார் வாழ்ந்தார்கள், எவ்வளவு காலமாக அது நீருக்கடியில் இருக்கிறது என்பதெல்லாம் இன்னும் மர்மம்தான்.
ஒரு கடினமான கண்டுபிடிப்பு
உண்மையில், ஸீலாண்டியா பற்றி ஆய்வு செய்வது எப்போதும் கடினமாகவே இருந்து வந்திருக்கிறது.
1642-ஆம் ஆண்டில் டாஸ்மேன் நியூசிலாந்தைக் கண்டுபிடித்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு பிரிட்டிஷ் வரைபடத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் குக் தெற்கு அரைக்கோளம் நோக்கி அனுப்பப்பட்டார். அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வெள்ளி கடந்து செல்லும்போது அதைக் கண்காணிக்க வேண்டும் என்பதே. அதன் மூலம் சூரியன் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது திட்டம்.
ஆனால் அவருக்கு மற்றொரு ரகசியப் பணியும் இடப்பட்டிருந்தது. சீல் வைத்து மூடப்பட்டிருந்த ஓர் உறையில் அந்தப் பணி பற்றிய விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் முதல் பணி முடிந்த பிறகுதான் இதைத் திறக்க வேண்டும் என்பது கட்டளை. அது புதிய கண்டத்தை நோக்கிய பயணத்துக்கான உத்தரவு. அதன்படியே ஜேம்ஸ் குக் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
ஸீலாண்டியா என்றொரு கண்டம் இருக்கிறது என்பதற்கான உண்மையான தடயங்கள் சேகரிக்கப்பட்டது ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த இயற்கை ஆர்வர் ஜேம்ஸ் ஹெக்டர் என்பவரால்தான். அது தொடர்ச்சியான மலையைக் கொண்டிருருக்கிறது என்றும் நீருக்குள் மூழ்கியிருக்கிறது என்றும் 1895-ஆம் ஆண்டில் அவர் அறிவித்தார்.
இத்தகைய முன்னேற்றங்கள் இருந்தபோதும், ஸீலாண்டியா பற்றிய அறிவு தெளிவற்றதாக இருந்தது. 1960-வரை பெரிய தரவுகள் கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் ஒரு கண்டம் என்பதற்கான தெளிவான வரையறையே கிடையாது.
1960-களில்தான் ஒரு கண்டம் என்றால் என்ன என்பதற்கான வரையறையை இறுதி செய்ய புவியியலாளர்கள் ஒப்புக் கொண்டனர். அதிக உயரம் கொண்ட புவியியல் பகுதி, பரந்துபட்ட பாறைகள், அடர்த்தியான புவி மேலடுக்கு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். அதுவும் பெரியதாக இருக்க வேண்டும் என்று கண்டத்துக்கான வரையறை வகுக்கப்பட்டது. இது ஆய்வுக்கான புதிய வாய்ப்புகளை வழங்கியது.
இருப்பினும் ஸீலாண்டியாவைத் தேடும் பணி நிறுத்தப்பட்டது. காரணம் ஒரு கண்டத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது செலவு மிக்கது என்று கருதப்பட்டது. அதைத் தேடுவது ஒன்றும் அவசரமான வேலையில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.
புதிய கண்டத்தின் நவீன கால அறிமுகம்
1995-ஆம் ஆண்டில் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை ஸீலாண்டியா என்று வரையறுத்தார் அமெரிக்க புவியியலாளர் ப்ரூஸ் லூயென்டிக்.
ஏறக்குறைய அதே நேரத்தில், “கடல் சட்டத்தின் மீதான ஐக்கிய நாடுகள் உடன்பாடு” நடைமுறைக்கு வந்தது. அதில் நாடுகள் தங்களது கரையில் இருந்து 200 கடல் மைல் தொலைவைத் தாண்டியும் தங்களது எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ளலாம், அங்கிருக்கும் கடல் செல்வங்களை உரிமை கோரலாம் எனக் கூறியது. இது கடல் ஆய்வுகளுக்கு உத்வேகத்தை அளித்தது.
ஒருவேளை நியூசிலாந்து, தான் ஒரு பரந்த கண்டத்தின் ஒரு பகுதி என்பதை நிரூபிக்க முடிந்தால் தனது நிலப் பரப்பை ஆறு மடங்கு விரிவுபடுத்திக் கொள்ளலாம். அதனால் திடீரென கடல் ஆய்வுகளுக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டது, ஆதாரங்கள் படிப்படியாகச் சேகரிக்கப்பட்டன. அதனால் ஸீலாண்டியா பற்றிய ஆர்வம் அதிகரித்தது.
கடைசியாக செயற்கைக் கோள் தரவுகளில் இருந்து நல்ல செய்தி வந்தது. அதன் மூலம் ஸீலாண்டியா என்பது ஆஸ்திரேலியாவை விடவும் பெரியதான ஒரு பரப்பு என்பது தெளிவாகத் தெரிந்தது.
இந்தக் கண்டம் இறுதியாக உலகுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது உலகின் மிகப் பெரிய கடல் பிரதேசம் ஒன்றுக்கான வாய்ப்பாக மாறியது. நியூசிலாந்தைத் தவிர ஸீலாண்டியாவில் கேலிடோனியா தீவு, சிறிய ஆஸ்திரேலியத் தீவுகள் ஆகியவை அடங்கியிருக்கின்றன.
ஒரு மர்மமான நீட்சி
சுமார் 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான கோண்ட்வானா என்ற பண்டைய பெருங் கண்டத்தின் ஒரு பகுதியாக ஸீலாண்டியா இருந்திருக்கிறது. கிழக்குப் பகுதியில் ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகியவற்றை எல்லைகளாக் கொண்டிருந்தது.
சுமார் 10.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக கோண்ட்வானா கண்டம் தனித்தனியே பிரிந்தபோது, ஸீலாண்டியாவும் வெளிப்புறம் நோக்கி இழுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் ஆய்வாளர் துல்லோக்.
கண்டங்களின் மேலோடு பொதுவாக 40 கி.மீ. ஆழத்தில் இருக்கும். ஆனால் ஸீலாண்டியாவின் மேலோடு அதிகமாக இழுக்கப்பட்டதால் வலுவிழந்து 20 கி.மீ. ஆழத்துக்கு வந்துவிட்டது. இறுதியில் கண்டத்தின் பெரும்பகுதி நீருக்குள் மூழ்கிவிட்டது.
மெல்லியதாகவும், நீருக்குள் மூழ்கியும் இருந்தாலும்கூட அங்குள்ள பாறைகள் காரணமாக அதைக் கண்டமாகவே கருத வேண்டும் என புவியியலாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் இன்னும் பல அறியப்படாத புதிர்கள் ஸீலாண்டியாவில் உள்ளன. எட்டாவது கண்டத்தின் அசாதாரண தோற்றம் புவியியலாளர்களுக்கு குறிப்பாக புதிராகவும், கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கிறது. உதாரணமாக, மெல்லியதாக இருந்தும், சிறிய கண்டங்களாக சிதறாமல் எப்படி ஒன்றாக இருக்க முடிந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஸீலாண்டியா எப்போது நீருக்கு அடியில் மூழ்கியது என்பது அடுத்த மர்மம். அது எப்போதாவது பெரும் நிலப்பரப்பைக் கொண்டிருந்ததா என்ற கேள்வியும் இருக்கிறது. ஏனென்றால், தற்போது கடல் மட்டத்திற்கு மேலே உள்ள பகுதிகள் பசிபிக் மற்றும் ஆஸ்திரேலிய கண்டத் தட்டுகள் மோதி நொறுங்கியதால் உருவான முகடுகள் மட்டுமே.
ஸீலாண்டியா கடலுக்கு மேலே இருந்திருந்தால், அங்கு என்ன வாழ்ந்தது என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.
கோண்ட்வானா ஒரு பரந்த அளவிலான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாக இருந்தது. முதல் நான்கு கால் நில விலங்குகள், நீண்ட காலம் பூமியில் வசித்த டைட்டனோசர்கள் ஆகியவை அங்கு வசித்தன. அதனால் ஸீலாண்டியாவில் இவற்றுக்கான எச்சங்கள் கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது.
டைனோசர்களும் ஸீலாண்டியாவும்
தெற்கு அரைக்கோளத்தில் புதைபடிவ நில விலங்குகள் அரிதானவை. ஆனால் 1990 களில் நியூசிலாந்தில் ஒரு பெரிய, நீண்ட வால் மற்றும் நீண்ட கழுத்து டைனோசரின் எலும்பு உட்பட பலவற்றின் எச்சங்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல வகையான டைனோசர்கள் மற்றும் பிற வகை விலங்குகளி புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலம் கோண்ட்வானாவில் இருந்து ஸீலாண்டியா பிரிந்ததற்கு பிந்தையது என்பதும் தெரியவந்திருக்கிறது.
ஆயினும் ஸீலாண்டியாவில் டைனோசர்கள் சுற்றித் திரிந்தன என்று இதற்கு அர்த்தமில்லை. டைனோசர்கள் நீரில் மூழ்கியபோது, இந்தத் தீவுகள் பிற டைனோசர்களின் புகலிடமாக இருந்திருக்கலாம். இது தொடர்பாக நீண்ட விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியான நிலம் இல்லாமல் விலங்குகளால் நீண்ட காலம் வாழ்ந்திருக்க முடியுமா என்பது அதில் முக்கியமான கேள்வி.
நியூசிலாந்தில் வாழும் பறக்க இயலாத கிவி பறவைகளும் புதிரை மேலும் சிக்கலாக்குகின்றன. ஏனெனில் மடகாஸ்கரில் வாழ்ந்து அழிந்துபோன பெரும் யானைப் பறவையுடன் அவற்றுக்கு மரபியல் ரீதியிலான தொடர்பு இருக்கிறது.
மடகாஸ்கரில் வாழ்ந்து அழிந்துபோன பெரும் யானைப் பறவையின் எச்சம்
கோண்ட்வானாவில் வாழ்ந்த ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து இரு பறவைகளும் உருவானதாக விஞ்ஞானிகள் நம்புவதற்கு இந்த கண்டுபிடிப்பு வழிவகுத்தது.
கோண்ட்வானா முழுமையாகப் பிரிவதற்கு 13 கோடி ஆண்டுகள் ஆனது. அது நடந்தபோது தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், அண்டார்டிகா, ஆஸ்திரேலியா, அரேபியத் தீபகற்பம் , இந்தியத் துணைக் கண்டம், ஸீலாண்டியா என அது உலகம் முழுவதும் சிதறிய துண்டுகளாக மாறியது.
அதனால் தற்போது நீருக்கடியில் இருக்கும் ஸீலாண்டியாவின் ஒரு பகுதியாவது கடலுக்கு மேலே நீண்ட காலத்துக்கு இருந்திருக்கலாம் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
ஸீலாண்டியாவின் கடற்பரப்பில் இருந்து புதைபடிவங்களை நேரடியாகச் சேகரிப்பது சாத்தியமில்லை என்றாலும், விஞ்ஞானிகள் துளையிடுவதன் மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள்.
2017 ஆம் ஆண்டில், ஒரு குழு இதுவரை இப்பகுதியின் மிக விரிவான ஆய்வை மேற்கொண்டது. 6,101 அடிக்கு மேல் (1,250 மீ) ஆறு வெவ்வேறு இடங்களில் கடற்பரப்பில் துளையிட்டது. நில தாவரங்களிலிருந்து மகரந்தங்கள், சூடான, ஆழமற்ற கடல்களில் வாழும் உயிரினங்களின் ஓடுகள் போன்றவை அவர்களுக்குக் கிடைத்தன. 10 மீட்டர் அதைப்போன்ற ஆழத்தில் கடல் நீர் இருந்தால் அதைச் சுற்றி நிலம் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இன்னொரு மர்மம்
ஸீலாண்டியாவின் வடிவமும் ஆராய்ச்சியாளர்களுக்கு புதிய முடிச்சைப் போடுகிறது.
மிகப் பரந்த கண்டமான ஸீலாண்டியா வினோதமாக வளைந்திருக்கிறது. பசிபிக் மற்றும் ஆஸ்திரேலிய கண்டத் தட்டுகள் சந்திக்கும் ஒரு கிடைமட்ட கோட்டால் இரண்டும் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன. இந்த துல்லியமான கட்டத்தில், ஏதோ ஒன்று கீழ் பாதியை எடுத்து அதை முறுக்கியது போன்று காட்சியளிக்கிறது.
கண்டத் தட்டுகள் நகர்ந்து, எப்படியோ அவற்றை சிதைத்திருக்கலாம் என்று இதற்கு விளக்கமளிக்கலாம். ஆனால் இது எப்படி அல்லது எப்போது நடந்தது என்பது இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை.
இப்போதைக்கு நமக்கு உறுதியாகத் தெரிந்தது, எட்டாவது கண்டம் ஒன்று இருக்கிறது என்பது மட்டும்தான். ஆனால் டாஸ்மேன் கண்டுபிடித்து சுமார் 400 ஆண்டுகள் ஆன பிறகும் அதில் உள்ள மர்மங்கள் மட்டும் விலகவில்லை.
(நன்றி BBC TAMIL)