உணவின்றி, மருந்தின்றி குழந்தை பிரசவிக்கும் ஆப்கன் பெண்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய மருத்துவமனையில், பிரசவித்த சில நாட்களுக்குப் பிறகு, ராபியா தனது பிறந்த குழந்தையைத் தொட்டிலாட்டுகிறார். “இது எனது மூன்றாவது குழந்தை, ஆனால் இந்த அனுபவம் முற்றிலும் வித்தியாசமானது. அது கொடூரமானது,” என்று அவர் கூறுகிறார்.

ராபியா குழந்தையைப் பெற்றெடுத்த போது, அவருக்கு வலி நிவாரணிகள், மருந்து, உணவு போன்ற எந்த அடிப்படை விஷயங்களும் கொடுக்கப்படவில்லை.

மருத்துவமனை 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தகித்துக் கொண்டிருந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது மற்றும் ஜெனரேட்டர்கள் வேலை செய்ய தேவையான எரிபொருள் இல்லை. “நாங்கள் குளிப்பது போல் எங்களுக்கு வியர்த்துக் கொண்டிருந்தது” என்கிறார் ராபியாவின் மருத்துவ உதவியாளர் அபிதா. இவர் மொபைல் ஃபோன் வெளிச்சத்தின் மூலம் குழந்தையை பிரசவிக்க இருளில் அயராது உழைத்தார்.

“என் வேலையில் நான் அனுபவித்த மிக மோசமான அனுபவங்களில் இதுவும் ஒன்று. அது மிகவும் வேதனையாக இருந்தது. ஆனால் தாலிபன்கள் பொறுப்பேற்றதிலிருந்து ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு நாளும் இது எங்கள் நிலையாகிவிட்டது.”

பிரசவத்திலிருந்து தப்பிப்பது என்றால் ராபியா அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஆப்கானிஸ்தான் உலகின் மிக மோசமான தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களில் ஒன்றாகும், 100,000 நேரடி பிறப்புகளுக்கு 638 பெண்கள் இறக்கின்றனர்.

இது மிக மோசமாக இருந்தது. ஆயினும் 2001 ல் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்புக்குப் பிறகு தாய் மற்றும் குழந்தை பிறப்பு பராமரிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டது.

“இப்போது மிகுந்த அவசரமும் விரக்தியும் இருக்கிறது. அந்த கணத்தை நான் உணர்கிறேன்” என்கிறார் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதி (UNFPA) நிர்வாக இயக்குனர் நடாலியா கனெம்.

இப்போதிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உடனடி ஆதரவு இல்லாமல் 51,000 கூடுதல் தாய்மார் இறப்புகள், 4.8 மில்லியன் திட்டமிடப்படாத கர்ப்பங்கள், குடும்பக் கட்டுப்பாடு கிளினிக்குகளை அணுக முடியாத இரு மடங்கு மக்கள் இருக்கலாமென ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் மதிப்பிட்டிருக்கிறது,

“ஆப்கானிஸ்தான் முழுவதுமுள்ள ஆரம்ப சுகாதார வசதிகள் சீர்குலைந்து வருகின்றன.. தாய் இறப்பு விகிதம், குழந்தைகள் இறப்பு விகிதம், துரதிர்ஷ்டவசமாக அதிகரிக்கும்,” என்கிறார் பொது சுகாதாரத் தலைவர் மருத்துவர் வாஹித் மஜ்ரூஹ். கடந்த மாதம் காபூல் தாலிபன்களிடம் வீழ்ச்சியடைந்த பிறகும் பதவியிலிருக்கும் ஒரே அமைச்சர் இவர்.

நிலத்தால் சூழப்பட்ட தேசம் உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டது. வெளிநாட்டுப் படைகள் திரும்பப் பெறத் தொடங்கியபோது, ​​தாலிபன்களின் அதிகாரத்தின் எழுச்சி வெளிநாட்டிலிருந்து கிடைத்து வந்த உதவிகளை முடக்க வழிவகுத்தது, அது ஆப்கானிஸ்தானின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புக்கு பெரிதும் நிதியளித்தது.

அமெரிக்கா உட்பட மேற்கத்திய நன்கொடையாளர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பு போன்ற குழுக்கள், தாலிபன்களுக்கு நிதி வழங்குவதில் உள்ள சிரமங்களையும், காபூல் விமான நிலையத்திற்கு மருத்துவப் பொருட்களை வழங்குவதிலுள்ள சிரமங்களையும் சுட்டிக் காட்டுகின்றன.

பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கான உயிர் காக்கும் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கான அணுகல் கணிசமாக பாதிக்கப்படுகிறது. கொரோனா பரவுவதால் இந்த நேரம் இரண்டு மடங்கு துரதிர்ஷ்டவசமானது. “கொரோனா நான்காவது அலைக்கான சாத்தியக்கூறுக்கு எந்த தயாரிப்பும் இல்லை” என்கிறார் மருத்துவர் மஜ்ரூஹ்.

நிதி முடிக்கத்தால் அபிதாவின் பிறப்பு மையத்தில், ஆம்புலன்ஸ் சேவையை இயக்க முடியவில்லை. எரிபொருளுக்கு பணம் இல்லை.

“சில இரவுகளுக்கு முன், ஒரு தாய் பிரசவிக்கும் தருணத்தில் இருந்தார், அவர் அதிக வலியால் அவசரமாக ஒரு ஆம்புலன்ஸ் கேட்டார். நாங்கள் அவரிடம் ஒரு டாக்ஸியைக் பிடித்து வருமாறு கூறினோம், ஆனால் டாக்ஸி வாகனங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

“அவர் இறுதியாக ஒரு காரைக் கண்டுபிடிக்க முடிந்தபோது, ​​மிகவும் தாமதமாகிவிட்டது – அவர் காரிலேயே பிரசவித்து பல மணிநேரங்கள் மயக்கமடைந்திருந்தார். அவர் கடுமையான வலி மற்றும் அதிக வெப்பத்தில் இருந்தார். அவர் உயிர் பிழைப்பார் என்று நாங்கள் கருதவில்லை. குழந்தையும் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது, அவர்கள் இருவருக்கும் சிகிச்சையளிக்க எங்களிடம் எதுவும் இல்லை, “அபிதா கூறுகிறார்.

அதிர்ஷ்டவசமாக, அந்தப் பெண் பெற்றெடுத்த மகள் உயிர் தப்பினார். நிதி இல்லாத மருத்துவமனையில் மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகு, அந்தப் பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

“கடந்த சில வாரங்களில் நடந்த வியத்தகு நிகழ்வுகளுக்கு முன்பே, ஆப்கானிஸ்தானில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பெண் பிரசவத்தில் இறக்கிறார்.” என்கிறார் UNFPA இன் மருத்துவர் கனெம்.

ஆப்கானிஸ்தானிலுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் உயிர்காக்கும் தேவைகளுக்கு 29.2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி வேண்டுமென, ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியமைப்பு கூறுகிறது.

மனிதாபிமான உதவிகளுக்கான அத்தியாவசியத் தேவையின் காரணமாக, முக்கியமான மருத்துவ மற்றும் சுகாதாரப் பொருட்களை கொண்டு செல்லவும், மொபைல் சுகாதார கிளினிக்குகளை களமிறக்கவும் பாதுகாப்பான வழித்தடம் வழங்கப்படும் என அவ்வமைப்பு நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பு இறப்பு விகிதத்தை மேலும் அதிகரிக்கும் என்று கவலை கொண்டுள்ளது அவ்வமைப்பு. ஏழ்மை, சிறுமிகள் பள்ளிக்குச் செல்ல இயலாமை குறித்த கவலை, தாலிபன் போராளிகளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பது தொடர்பான அச்சம் போன்ற பிரச்சனைகள் இளம் பருவப் பெண்களுக்கிடையே சிக்கலை அதிகரிக்கிறது.

“நீங்கள் ஒரு இளம் தாயாக இருந்தால், உங்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் உடனடியாக சுருங்கிவிடும்” என்று மருத்துவர் கனெம் கூறுகிறார்.

பெண்கள் மீதான தாலிபன்களின் புதிய கட்டுப்பாடுகள் ஏற்கனவே பலவீனமான சுகாதார அமைப்பை மேலும் முடக்குகின்றன. ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில், பெண்கள் தங்கள் முகத்தை நிக்காப் அல்லது புர்காவால் மறைக்க வேண்டியிருக்கிறது.

மருத்துவமனைகளுக்கும் கிளினிக்குகளுக்கும் பெண் ஊழியர்களை மட்டுமே பெண் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அனுமதிக்க உத்தரவிடப்படுகிறது என்கிற செய்திகள் அதிக கவலையாக உள்ளது.

ஒரு பெண்னை, ஒரு ஆண் மருத்துவர் மருத்துவ ரீதியாக அவரது உடல் நலம் குறித்து விசாரித்து பரிசோதனை செய்ததால், அந்த ஆண் மருத்துவர் தாலிபன்களால் தாக்கப்பட்டதாக, தன் பெயரை குறிப்பிட விரும்பாத ஒரு பெண் மருத்துவ உதவியாளர் பிபிசியிடம் கூறினார்.

ஆப்கனின் கிழக்குப் பகுதியில் இருக்கும் தனது மருத்துவ மையத்தில், “ஒரு பெண்ணை ஒரு பெண் மருத்துவரால் பார்க்க முடியாவிட்டால், ஆண் மருத்துவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இருக்கும் போது தான், பெண் நோயாளியை பார்க்க முடியும்” என்று அவர் கூறுகிறார்.

பெண்கள் “மஹ்ரம்” அல்லது ஆண் உறவினர் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

“என் கணவர் என் குழந்தைகளுக்கு உணவளிக்க உழைக்கும் ஒரு ஏழை, அதனால் என்னுடன் சுகாதார மையத்திற்குச் செல்லும்படி நான் ஏன் அவரிடம் கேட்க வேண்டும்?” என்கிறார் நங்கர்ஹார் மாகாணத்தில் ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கும் ஜர்மினா.

இதனால் ஜர்மினா போன்ற பல பெண்களாள் முக்கியமான சோதனைகளை செய்துகொள்ள முடியாது. அதேபோல், பல பெண் சுகாதாரப் பணியாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாது என்கிறார் அபிதா.

10,000 ஆப்கானியர்களுக்கு 4.6 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் உள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு கணக்கிடுகிறது. தாலிபன்கள் பொறுப்பேற்றதிலிருந்து பலர் வேலை செய்வதை நிறுத்திவிட்டனர் அல்லது நாட்டை விட்டு வெளியேறிவிட்டதால், இந்த எண்ணிக்கை இப்போது மேலும் குறைய வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் பிற்பகுதியில், தாலிபன்கள் பெண் சுகாதாரப் பணியாளர்களை பணிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொண்டது, ஆனால் “அவர்கள் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்தி நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப நேரம் எடுக்கும், ” என்று மருத்துவர் மஜ்ரூஹ் கூறுகிறார்.

ஓரிரவில் எல்லாம் மாறிவிட்டது என காபூலில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவ நிபுணர் நபிசாடா கூறுகிறார். தாலிபன் பொறுப்புக்கு வந்த பின் ராஜினாமா செய்த மருத்துவர் இவர். அவருடைய முன்னாள் சகாக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார்கள் அல்லது வேலையை விட்டு விட்டு பாதுகாப்பாக வீட்டில் இருக்கின்றனர்.

“என் பக்கத்து வீட்டுக்காரர் 35 வார கர்ப்பிணியாக இருக்கிறார், சிசேரியனுக்கு ஒரு தேதியை நிர்ணயிக்க வேண்டும். ஆனால் அவருடைய மருத்துவரின் செல்போனை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் மிகவும் பதட்டமாக இருக்கிறார். அவரால், அவரது குழந்தையின் அசைவுகளை உணர முடியவில்லை.”

பொது சுகாதார ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லை. அபிதா அவர்களில் ஒருவர். சம்பளம் இல்லாவிட்டாலும், அவர் இன்னும் இரண்டு மாதங்கள் தொடர்ந்து வேலை செய்வார் என்று நம்புகிறார்.

“எங்கள் நோயாளிகளுக்காகவும் எங்கள் மக்களுக்காகவும் இதை செய்ய முடிவு செய்துள்ளேன் … ஆனால் நிதி இல்லாதது எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் நோயாளிகளுக்கும் கவலை அளிக்கிறது. அவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள்,” என்று அவர் கூறுகிறார்.

“ஆப்கானியர்கள் போரில் ஏற்படும் உயிரிழப்புகளைப் பற்றி அதிகம் கேட்கிறார்கள். ஆனால் பிரசவத்துடன் தொடர்புடைய தடுக்கப்படக் கூடிய இறப்புகளால் எத்தனை பெண்கள் மற்றும் குழந்தைகள் இறக்கிறார்கள் என்பதைப் பற்றி சிலர் மட்டுமே பேசுகிறார்கள்” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பெண்கள் உரிமைகள் பிரிவின் இணை இயக்குனர் ஹீதர் பார் கூறுகிறார்.

மே மாதம் காபூலுக்கு சென்றிருந்த போது, ​​ஒரு மருத்துவமனை ஊழியர்களின் சம்பளத்தைப் உறுதிப்படுத்த மற்ற எல்லாவற்றையும் குறைத்ததாகக் கூறினார். பல பெண்கள் பிரசவத்திற்காக சொந்தமாக செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

“ஒரு பெண் கையுறைகள், சுத்தப்படுத்தும் திரவம் போன்றவற்றுக்காக சுமார் $ 26 செலவழித்தார். அவர் தனது கடைசி பணத்தை செலவழித்துவிட்டார். அவர் மிகுந்த அழுத்தத்தோடு இருந்தார், ஏனென்றால் அவருக்கு சிசேரியன் தேவைப்பட்டால், அவர் தன் சொந்த செலவில் ஸ்கால்பெல் வாங்க வேண்டிவரும்” என பார் கூறுகிறார்.

ஆனால் இப்போது, ​​மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறை நிலவுவதால் அவற்றை தனியார் சுகாதார நிலையங்களிலிருந்து மட்டுமே வாங்க முடியும், இது பல ஆப்கானியர்களுக்கு சாத்தியமில்லாத ஒன்று.

உலக வங்கியின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தானில் 54.5% மக்கள் தேசிய வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். பெரும்பாலானோர் தொலைதூரப் பகுதிகளில் உள்ளனர்.

“தாலிபன்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நான் கர்ப்பமாக இருந்தபோது ஒரு சுகாதார மருத்துவமனை எனக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை இருப்பதை கண்டறிந்தது” என்று ஹெராத் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் 28 வயதான லீனா கூறுகிறார். தாலிபன்கள் இப்பகுதியை கைப்பற்றிய உடன், அவரது கணவர், தன் மேய்ப்பர் – வேலையை இழந்தார்.

கையில் பணமில்லை, அதோடு தாலிபன்களுக்கு பயந்து, லீனா தனது நீர்குடம் உடையும் வரை மருத்துவமனைக்கு மீண்டும் செல்லவில்லை.

“என் கணவர் என்னை கழுதையின் மூலம் அழைத்துச் சென்றார். ஒரு மருத்து உதவியாளர் என் சிக்கல்களைச் சமாளித்து, பிறப்பிலேயே குறைந்த எடை கொண்ட என் குழந்தையைப் பெற்றெடுக்க முடிந்தது,” என்று அவர் கூறுகிறார். லீனா மிகவும் மோசமான நிலையில் வீட்டில் இருக்கிறார், வருமானம் இல்லாமல், தனது குழந்தைக்கு எப்படி தேவையான விஷயங்களை வழங்குவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

பல ஆப்கானியர்கள் நாட்டின் சுகாதார நெருக்கடி மிகவும் மோசமடைந்து வருவதாக அஞ்சுகின்றனர், கர்ப்பிணி பெண்கள், புதிய தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகள் அதிக பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.

“ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகி வருகிறது,”. “எங்களுக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.” என்கிறார் அபிதா.

(குறிப்பு: இந்த செய்தியில் நேர்காணல் செய்யப்பட்டவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. கெட்டி இமேஜஸ் புகைப்படங்களிலிருந்து எலைன் ஜங்கின் புகைப்பட விளக்கப்படங்கள் உருவாக்கப்பட்டன.)

(நன்றி BBC TAMIL)