ஐஸ் கோபுரங்கள்: இமய மலையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்துக்கு விஞ்ஞானிகள் முன் வைக்கும் எளிய தீர்வு

இமயமலையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை சரி செய்ய ஒரு செயற்கை பனிமலையை அபர்தீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்து மேம்படுத்தி வருகின்றனர்.

அந்தப் பனிமலையை ‘ஐஸ் ஸ்தூபம்’ (ஐஸ் கோபுரம்) என்று அழைக்கின்றனர். இது 2013ஆம் ஆண்டு சோனம் வாங்சுக் என்கிற பொறியாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த யோசனை இப்போது தொடக்கநிலையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உருவாக்கப்படும் பனிமலையிலிருந்து வசந்த காலத்தில், தண்ணீர் உருகி வரும், அதை பயிர்களை வளர்க்க பயன்படுத்துகின்றனர்.

அப்படிப்பட்ட பனிமலைகளை வட இந்தியாவில் லடாக் பகுதியில் கட்டமைத்துள்ளனர். உலகிலேயே மிகவும் வறண்ட பகுதிகளில் அதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

அபர்தீன் க்ரையோஸ்ஃபியர் மற்றும் பருவநிலை ஆராய்ச்சிக் குழு அப்பகுதியில், இந்த யோசனையை மேம்படுத்தவும், அதை பரவலாக பயன்படுத்தவும் தேவையான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

“எங்கள் ஆராய்ச்சிப் படி, லடாக் பகுதியில் இருக்கும் பனிமலைகள் அதிவேகமாக உருகி வருகின்றன” என்கிறார் அவ்வணியைச் சேர்ந்த பேராசிரியர் மட்டெயோ ஸ்பக்னோலோ.

“எனவே ஐஸ் கோபுரங்கள் போன்ற யோசனைகள் அவசியம் என்பது தெளிவாகிறது”

இமய மலையில் ஏன் தண்ணீர் பஞ்சம்?

லடாக்கில் உள்ள டாங்ட்சே கிராமம்ஐஸ் கோபுர திட்டத்தின் படி, இப்பகுதியில் இருக்கும் பெரும்பாலான கிராமங்கள், ஏப்ரல் மே மாதங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்கின்றன.

இந்த காலகட்டத்தில் தான் புதிதாக விதைக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச மக்கள் போட்டி போடுகின்றனர்.

செப்டம்பர் மாதத்தின் மத்தியில் சிறு ஓடைகளில் நீர் வரத் தொடங்கிவிடும். ஆனால் அப்போது விவசாய நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிடும்.

பருவநிலை மாற்றப் பிரச்சனையால், இங்கு இருக்கும் இயற்கை பனிமலைகள் காணாமல் போகத் தொடங்கிவிட்டன. தண்ணீர் பிரச்சனை தீவிரமடைந்துவிட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், உலகில் உள்ள பனிமலைகள் அதிவேகமாக உருகி வருவதாகவும், ஏற்கனவே கடந்த 20 ஆண்டுகளில், ஆண்டுக்கு 270 பில்லியன் டன் பனிமலைகள் உருகிவிட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அபர்தீன் பல்கலைக்கழக அணியோடு, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக அணியும்ம் இணைந்து, லடாக் பகுதியில் உள்ள பனிமலைகள் அதிவேகமாக சுருங்கி வருவதைக் காட்டியுள்ளனர்.

அடிக்கடி மற்றும் நீண்ட காலத்துக்கு ஏற்படும் வறட்சிகள் பயிர்களையும், கடுங்குளிர் மற்றும் உலகின் மிக வறண்ட பகுதியில் வாழும் மக்களையும் அச்சுறுத்துகின்றன.

“பனிமலைகள், பருவநிலை மாற்றங்களை சுட்டிக்காட்டக் கூடிய நம்பத்தகுந்த காரணிகள். மிக எளிமையாக கூற வேண்டுமானால் வெப்பம் அதிகரித்தால் பனிமலைகள் சுருங்கி ஒரு கட்டத்தில் காணாமல் போய்விடும்” என்கிறார் பேராசிரியர் ஸ்பக்னோலோ.

“பனிமலைகள் புகைப்படமெடுக்க நன்றாக இருப்பது, பருவநிலை மாற்றத்தின் குறியீடாக இருப்பது எல்லாம் தாண்டி, பனிமலைகள் பல சமூகங்களுக்கு ஈடுஇணையற்ற, மாற்ற முடியாத சுத்தமான நீர் ஆதாரங்கள்” என்கிறார்.

ஐஸ் கோபுரங்கள் எப்படி செயல்படுகின்றன?

இந்த கோபுரங்களை உருவாக்க குழாய்களைப் பயன்படுத்துகின்றனர்கடந்த 2013ஆம் ஆண்டு சோனம் வாங்சுக் என்பவரால் ஐஸ் கோபுரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர் தான் ஹிமாலயன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அல்டர்னேட்டிவ்ஸ் என்கிற அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் இந்தியாவின் முக்கிய பொறியாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குளிர் காலத்தில் தேவையில்லாத நீரை ஐஸ் கோபுரங்களில் சேமித்து வைத்துவிட்டு, அது உருகும் போது, வறட்சி நிலவும் காலங்களில் பயன்படுத்துகிறார்கள்.

தொடக்கத்தில் குழாய்கள் நிலத்துக்கு அடியில் பதிக்கப்படுகின்றன, நிலத்தில் ஃப்ரோஸ்ட் லைன் என்கிற தண்ணீர் உறையாத ஆழத்தில் குழாய்கள் பதிக்கப்படுகின்றன. அதன் நிறைவுப் பகுதிக்கு முன், குழாய்கள் செங்குத்தாக உயர்கின்றன.

உயரத்தில் இருக்கும் மாறுபாடு, வெப்பநிலை, ஈர்ப்பு விசை காரணமாக குழாயில் அழுத்தம் ஏற்படுகிறது. அந்த நீரோடை நீரானது மேல் நோக்கிப் பாய்ந்து, ஒரு நீரூற்று போல் வழிகிறது.

மைனஸ் வெப்பநிலையில் வீசும் காற்று, மெல்ல நீரை உறையச் செய்வதால், ஒரு பிரமிட் கோபுரம் போன்ற தோற்றம் உருவாகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஐஸ் கோபுரங்களிலிருந்து லட்சக் கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறுகிறது. அந்த கோபுரங்கள் எங்கு தண்ணீர் அதிகம் தேவை இருக்கிறதோ அங்கு கட்டமைக்கப்படுகிறது. பொதுவாக கிராமங்களில் வயல்வெளிகளுக்கு அருகில் உருவாக்கப்படுகின்றன.

அபர்தீன் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினர்

ஐஸ் கோபுரங்களின் வடிவம் மற்றும் அளவு தான் அதை இத்தனை திறன்மிக்கதாகவும், செலவற்றதாகவும், பராமரிக்க எளிதானதாகவும் மாற்றுகின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

குழாய்களில் நீர் உறைவதைத் தடுக்க இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உள்ளூரில் நிலவும் பருவநிலை குறித்து இன்னும் ஆழமான புரிதல் வேண்டும் என்றும், ஐஸ் கோபுரங்களிலிருந்து கிடைக்கும் தண்ணீரை பல்வேறு கிராமங்கள் மற்றும் பயனர்களுக்கு பகிர்ந்தளிக்கும் முறை வேண்டுமென்றும் கூறினர்.

“நாங்கள் ஐஸ் கோபுர திட்டத்தில் தொழில்நுட்ப ரீதியாகவும், போக்குவரத்து சவால்கள் தொடர்பாகவும் உதவ, எங்கள் கூட்டாளிகளோடு நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்” என ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த முனைவர் அன்ஷுமன் பரத்வாஜ் கூறினார்.

“பனிமலைகள் எத்தனை வேகமாக உருகுகின்றன என்பதை இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ள பணியாற்றி வருகிறோம், அதோடு அவ்விவரங்கள் எங்கள் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல எப்படி உதவும் எனவும் ஆராய்ந்து வருகிறோம்” என்றார்

(நன்றி BBC TAMIL)