முன்னாள் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) மூசா ஹசான், தாம் ஒரு பாடகியை மணம் செய்துகொண்டிருப்பதாகக் கூறியுள்ள வலைப்பதிவர்கள்மீது போலீசில் புகார் செய்துள்ளார்.
பெட்டாலிங் ஜெயா போலீஸ் வட்டார தலைமையகத்தில் அவர் புகார் செய்ததாக த ஸ்டார் நாளேடு தெரிவித்துள்ளது.
“இவ்விவகாரத்தை விசாரிக்கும் பொறுப்பை மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணைய(எம்சிஎம்சி)த்திடம் விட்டு விடுகிறேன்.
“போலீசும் எம்சிஎம்சி-யும் விசாரணைகளை முடித்த பின்னர், சட்டப்படி நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிப்பேன்”, என்றவர் கூறியதாக அந்நாளேடு தெரிவித்துள்ளது.
மூசாவும் பாடகி ஷைலா கமருடினும் மணம் செய்துகொண்டதாகக் கூறிய வலைப்பதிவுகள் அவர்களின் திருமணப் படத்தையும் வெளியிட்டிருந்தன. திருமணத்துக்கு ரிம15மில்லியன் செலவிடப்பட்டதாகவும் அவை கூறின.
அச்செய்தியை மறுத்த மூசா, அப்பாடகியை அறவே தெரியாது என்றும் கூறினார்.
“அந்தப் படத்தில் இருப்பது நானல்ல. எனக்கிருப்பது ஒரே மனைவிதான், ஜூரியா அஹமட்”, என்றவர் சொன்னார்.
இதனிடையே யுஆர்டிவி சஞ்சிகை, ஷைலா தமக்கு நவம்பர் 11-13இல் கோலாலம்பூரில் திருமணம் நடந்ததை உறுதிப்படுத்தினார் என்று கூறியுள்ளது.
ஆனால், அவர் தம் கணவரின் பெயரை வெளியிட விரும்பவில்லை.அத்துடன் வலைப்பதிவில் இடம்பெற்றுள்ள படத்தில் உள்ள ஆடவர் தம் கணவர் என்று கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.