இந்தியர்களின் பிரச்சனைகளைக் களைய நிதி அமைச்சருடன் சந்திப்பு – குலசேகரன்  

எதிர்க்கட்சி கட்சிகளும்  ஆளும் கட்சியும் இணைந்து செய்துகொண்ட  புரிந்துணர்வு அடிப்படையின் கீழ், நிதி அமைச்சர் தெங்கு சாப்ருல் அஜிசை சந்திப்பதற்கு   பாக்காத்தான் ஹரப்பான் கட்சி  30 செப்டம்பர் அன்று ஒரு சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த கலந்துரையாடலில் , விடுபட்டுப் போன   சமூக பொருளாதார  பிரச்சனைகள்,   முறையாகச் செயல் படுத்தாமல்  தோல்வியுற்ற  திட்டங்கள். தாமதித்து  செயலாக்கம் கண்டதால்  அதன் இலக்கை  சென்று அடையாமல்  போன திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது  . இதன் காரணங்களால்  எப்படி  இந்திய சமுதாயம் அதற்குரிய  பலன்களை அடையத் தவறிவிட்டது  என்பதும் விளக்கப்பட்டது.

ஜனநாயக செயற்கட்சியின் செயலாளர் லிம் குவான் எங் தலைமையேற்க  , தோனி புவா, பி கே ஆர் கட்சியிலிருந்து  சைபுடின் நசுத்தியோன் , அமனா கட்சியிலிருந்து  சுல்கிப்லி அஹமட்  மற்றும் நானும் கலந்து கொண்ட   இந்தக் கூட்டம்  சுமார் 2 மணி நேரம் வரை  நடைபெற்றது.

பி-40 குழுமத்தைச் சார்ந்த இந்தியர்களின் மத்தியில்   தொழில் முனைவர்களை  உருவாக்குதல் , மலேசிய இந்தியர்கள் உருமாற்று கட்டமைப்பான  மித்ராவிற்கு கூடுதல் அதிகாரங்கள் கொடுப்பது   , தமிழ்ப்பள்ளிகளின் கட்டிடத்  தரம்  உயர்த்துதல்  ,நாட்டின் பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்குடைமையை தற்பொழுதுள்ள  1.2%  இருந்து மேலும் உயர்த்துதல், இந்தியர்களுக்கென உள்ள  தொழிற் பயிற்சி கழகங்களை  மேலும் அதிகரித்தல்     போன்றவை  குறித்து நிதி அமைச்சருக்கு விளக்கப்பட்டது.. இந்தியத் தொழில் முனைவர்களை உருவாக்க ரிம 50 மில்லியன் தேவை என  இதில் வேண்டு கோள் விடுக்கப்பட்டது.

அதோடு, வெளிநாட்டுத்  தொழிலாளர்களுக்கு பதிலாக உள்நாட்டுத்  தொழிலாளர்களை  வேலைக்கமர்த்த வேண்டி  அவர்களுக்குச் சிறப்பு நிதி உதவி ஒதுக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தமிழ்ப்பள்ளிகளுக்கு 2022 நிதிநிலையில்   2021 நிதிநிலையை விட அதிக ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டுமென  பாக்காத்தான்  ஹாரப்பான் கேட்டிருந்தது.   அதற்கான ஒதுக்கீடு  2021ல் ரிம 29.98 மில்லியன்  மட்டுமே !. 2022 பட்ஜெட்டில் அதற்கென  ரிம 100 மில்லியன்  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்காகப்   பிரத்தியேகமாகத்  தயாரிக்கப்பட்ட  நீல வியூக திட்டத்திற்குப்   புத்துயிர் வழங்கும்  வேளை வந்துவிட்டது.  அதன்  திட்டங்கள் முழுமையாகச்  செயல் படுத்தப்படாமையாலும் அதன் அடிப்படை நோக்கங்கள்  கடைப்பிடிக்கப்படாமல் போனதாலும்  இந்த அவசியம் ஏற்படுகிறது. அந்த திட்டத்தின் வெற்றி தோல்விகளை  நிர்ணயிக்கும் முக்கிய  குறியீடுகள் பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. .

மித்ராவின் உதவிகள்  முழுமையாக  பி 40 குழுமத்தைச் சார்ந்த இந்தியர்களுக்கு போய்ச் சேர  வேண்டுமென்ற நோக்கத்தில்  அதன் நிர்வாகக் குழுவில், அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும்  கொண்ட  உறுப்பினர்கள்    இடம் பெறவேண்டுமென்ற பரிந்துரையை  பாக்காத்தான்  ஹராப்பான் முன் வைத்தது.   இந்த நிதி உதவிகள் அதன் இலக்கை அடையவும் அதன் முடிவுகள்  எதிர்பார்த்தது போல அமைவதை உறுதிப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் ஒன்றைக் கையொப்பமிட்டவுடன் அந்தப்பணம்  வழங்கப் படவேண்டும்.

இந்தியர்களுக்கான   நீல வியூகத்திட்டம்  முழுமையாக  வெற்றி பெற   மித்ராவின் பங்கு  அளப்பரியது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.  இந்த ஆண்டு  மித்ராவிற்கான நிதி ரிம 100 மில்லியன்  கொடுக்கப்பட்டது  அது அடுத்த ஆண்டு ரிம 150 மில்லியனாக  உயர்த்த பாக்காத்தான்  பரிந்துரைத்துள்ளது .

தொழிலாளர்  தொடர்பான  விவகாரத்தில் குறைந்த பட்ச அடிப்படை சம்பளத்தை உயர்த்துதல் பற்றி பேசப்பட்டது  . நான் முன்பு  மனித வள அமைச்சராக இருந்த போது கொண்டு வந்த  தொழிலாளர்  ,தொழிற் சங்க சட்டங்களில்   செய்யப்பட திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்டமாக்குவது  பற்றி வலியுறுத்தினேன்.

“கிக்” எனப்படும் முறை சாரா தொழிலாளர்களுக்கான  சட்ட பாதுகாப்பு , மருத்துவ மனைகளில்   வேலை செய்யும் ஒப்பந்த அடிப்படையிலான  தொழிலாளர்களை  அரசாங்கத்தில்  நிரந்தர  பணியாளர்களாக ஆக்குவது , எதிர்காலத்தில்  பொருளாதார  வீழ்ச்சி அல்லது தொற்று நோய் பரவும்  அபாயம் ஏற்படும்  போது அவற்றை சமாளிக்க ஒரு  சமூக  நீல வியூகத்திட்டம் உருவாக்குவது குறித்தும் பேசப் பட்டது.

நலிந்திருக்கும் பொருளாதார சூழலின்   விளைவாக தொழிலாளர்களின்   உரிமையை பாதுகாக்கும்  அரண் என அங்கீகரிக்கப்பட்ட  எம் டி யு சி எனப்படும் தொழிற் சங்க காங்கிரசிற்கு நிதி உதவி தேவைப்படுகிறது.

உறுப்பினர்கள் குறைவினால் அதன்  வருமானம் குறைந்துள்ளது என்பதே அதற்கான காரணம்.

மனித உரிமைகள் பேணப்படுவதன்  வழி  ஒரு ஆரோக்கியமான  சூழல் உருவாக்கப்பட்டு  நாட்டின் மனித வள மூலதனம்  பெருக அது வழி கோலும் .. இதற்கு  தொழிற் சங்க காங்கிரசின் ன் பங்கு  முக்கியமானது.அதற்கு  ரிம 3 மில்லியன் ஒதுக்க வேண்டுமென  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தவறான  செயலாக்கத்தாலும் , முறையான நாடாளுமன்ற மேற்பார்வை இல்லாததாலும் ஏற்பட்டிருக்கும்   சிக்கலான பல பிரச்சனைக்களுக்கு  இந்த புரிந்துணர்வின் அடிப்படையில்  நிதி அமைச்சர் தீர்வு காண்பார் என எதிர் பார்ப்போம்.

பாக்காத்தான்  ஹராப்பன் தொடர்ந்து ஒரு வலுவான எதிர்கட்சியாக  செயல்படும் அதே வேளையில் நாட்டின் நலன் கருதி செய்து கொண்ட  புரிந்துணர்வின்  அடிப்படையில் நாடு எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு , நடப்பில் இருக்கும் தொற்று காலத்திலும் சரி அது கடந்து பின் வரும்  காலங்களிலும் சரி,  அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும்..

ஒரு நாடு  முன்னேற்றம்  அடைந்த நாடு என்ற அந்தஸ்த்தை  அடைய அதன் திட்டங்களும்   கொள்கைகளும் வலுவான  செயலாக்கமும்  , முறையான மேற்பார்வையிடலும்  கொண்டிருப்பது அவசியமாகும்.

ஒரு நாடு எப்படி அதன் ஒதுக்கப்பட்ட சமுதாயத்தையும் தொழிலாளர்களையும் நடத்துகிறதோ அதன் அடிப்படையில் தான்  அதன் முன்னேற்றமும் , உலக அரங்கில் அதன்  மதிப்பும்  நிர்ணயிக்கப்படும்.

(மு குலசேகரன் – ஈப்போ பாராட் நாடளுமன்ற உறுப்பினர்)