கருக் கலைப்பு உரிமை: அமெரிக்க நகரங்களில் பேரணி நடத்தும் பெண்கள்

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் கருக்கலைப்பு உரிமைகளுக்கு ஆதரவாக ஆயிரக் கணக்கான பெண்கள் பேரணி செல்கின்றனர்.சமீபத்தில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கொண்டு வரப்பட்ட கருக்கலைப்பு தொடர்பான சட்டம், பெண்களை எதிர்வினையாற்றத் தூண்டியது.

வரும் மாதங்களில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு தொடர்பாக ஒரு முக்கிய வழக்கை விசாரிக்க உள்ளது. 1973ஆம் ஆண்டு ரோ vs வேட் என்கிற வழக்கில், அமெரிக்க உச்ச நீதிமன்றம், அமெரிக்கா முழுமைக்கும் கருக்கலைப்பு சட்டப்படி செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

வாஷிங்டன் டிசியில், ‘கருகலைப்பை சட்டப்பூர்வமானதாக்கு’ என்கிற பதாகைகளோடு போராட்டக்காரர்கள் உச்ச நீதிமன்ற கட்டடத்தை நோக்கி பேரணி சென்றனர்.

சில கருக்கலைப்புக்கு எதிரான போராளிகளால், கருக் கலைப்பை ஆதரிக்கும் பேரணி பாதிக்கப்பட்டது.

லாஸ் ஏஞ்சலஸ் மாகாணத்தில் நடந்த பேரணி

“அப்பாவி குழந்தைகளின் ரத்தம் உங்கள் கைகளில் உள்ளது” என ஒரு நபர் கூச்சலிட்டார். அவர் அப்புறப்படுத்தப்பட்டார் என தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

கருக்கலைப்பை ஆதரிக்கும் போராட்ட பேரணியில் கலந்து கொண்ட பெண்களில் ஒருவர், பெண்களுக்கான உரிமைகளை ஆதரிக்க தான் கலந்து கொண்டதாக கூறினார்.

“அதிர்ஷ்டவசமாக நான் அது போன்ற வாய்ப்பை எதிர்கொள்ளவில்லை. எங்கள் உடல் சார்ந்த விஷயங்களில் தலையிட அரசாங்கங்களுக்கோ, ஆண்களுக்கோ எதுவும் இல்லை” என ராய்டர்ஸ் முகமையிடம் கூறினார் ராபின் ஹார்ன்.

ஆண்டுதோறும் நடைபெறும் பெண்கள் பேரணியை ஏற்பாடு செய்பவர்களே இந்த பேரணியையும் ஏற்பாடு செய்தனர்.

“கருக் கலைப்பு சட்டப்பூர்வமானதாகவும், அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாகவும் இருக்கும் என்றே எங்களில் பலரும் வளர்ந்தோம்” என்கிறார் ரேசல் ஓ லேரி கர்மோனா. இவர் தான் பெண்கள் பேரணியின் செயல் இயக்குநர். “அந்த உரிமமை ஓர் உண்மையான ஆபத்தில் இருக்கும் போது அனைவரும் விழித்தெழ வேண்டிய தருணமிது” என்கிறார்.

நியூ யார்க் நகரத்தின் ஆளுநர் கேதி ஹோகல் இரண்டு பேரணிகளில் பேசினார்.

“கருக்கலைப்பு உரிமைகளுக்காக போராடி போராடி நான் களைத்துவிட்டேன்” என்றார். “அமெரிக்காவில் கருக்கலைப்பு என்பது தீர்பளிக்கப்பட்ட ஒரு விஷயம், அந்த உரிமையை உங்களால் எப்போதும் எங்களிடமிருந்து பறிக்க முடியாது” என்றார்.

டெக்ஸாஸ் மாகாணம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி கருக்கலைப்பு தொடர்பாக ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் படி சிசுவின் இதயம் துடிக்கத் தொடங்கிய பின் கருவைக் கலைக்கக் கூடாது. அந்த கட்டத்தில் பல பெண்களுக்கு தாங்கள் கர்பமாக இருப்பதே தெரியாது.

டெக்சாஸில் நடந்த பெண்கள் பேரணி

பொதுவாக ஆறு வாரங்களுக்குள் குழந்தைகளின் இதயம் துடிக்கத் தொடங்கும். எனவே இந்த சட்டப் படி, யார் வேண்டுமானாலும், அந்த ஆறு வார காலத்துக்குப் பிறகு கருக்கலைப்பு செய்யும் மருத்துவர் மீது வழக்குத் தொடர வழிவகுக்கிறது இச்சட்டம். பிறக்காத குழந்தைகளைப் பாதுகாப்பதுதான் இச்சட்டத்தின் நோக்கம் என்கிறார்கள் இதன் ஆதரவாளர்கள்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், தங்கள் மாகாணங்களிலும் இச்சட்டத்தைக் கொண்டு வர ஆலோசித்து வருகிறார்கள்.

உரிமை குழுக்கள் இந்த டெக்ஸாஸ் சட்டத்துக்கு தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன, ஆனால் 5 – 4 என்கிற கணக்கில் தடை விதிப்பதற்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டது.

வரும் டிசம்பர் 1ஆம் தேதி மிசிசிப்பி மாகாணத்தின் 15 வார கருகலைப்பு சட்டத்தை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

1973ஆம் ஆண்டு ரோ vs வேட் என்கிற முக்கிய வழக்கில், ஒரு குழந்தை சுயமாக தாயின் கருவறையில் இருந்து வெளியே வந்து வாழ முடியும் என்கிற நிலையை எட்டுவதற்கு முன்பு வரை (பொதுவாக 28 வார கர்ப காலம்), பெண்கள் தங்கள் வயிற்றில் சுமக்கும் கருவைக் கலைக்க உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தது அமெரிக்க உச்ச நீதிமன்றம்.

(நன்றி BBC TAMIL)