கேஎல்ஐஏ-இல் தமிழில் அறிவிப்பு இல்லை

கேஎல் பன்னாட்டு விமானநிலையத்தில் தமிழில் அறிவிப்பு செய்யும் திட்டம் எதனையும் போக்குவரத்து அமைச்சு கொண்டிருக்கவில்லை என இன்று டேவான் நெகாராவில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்  தெரிவித்த  துணைப் போக்குவரத்து அமைச்சர் அப்துல் ரஹிம் பக்ரி, இந்தியாவிலிருந்து வருபவர்கள் பல்வேறு மொழிகளைப் பேசுவதே இதற்குக் காரணமாகும் என்றார்.

“அவர்கள் தமிழ் தவிர்த்து இந்தி, உருது, மலையாளம், தெலுங்கு இன்னும் பல மொழிகள் பேசுவோராக உள்ளனர்.” கேள்வி நேரத்தின்போது செனட்டர் எஸ்.நல்லகருப்பனின் கேள்வியொன்றுக்கு துணை அமைச்சர் இவ்வாறு மறுமொழி நவின்றார்.

மேலும், இந்தியாவிலிருந்து வருவோர் ஆங்கிலம் அறிந்தவர்களாகவும் உள்ளனர் என்று அப்துல் ரஹிம் கூறினார்.

இப்போதைக்கு கேஎல்ஐஏ-இல் மலாய், ஆங்கிலம், மெண்டரின் ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே அறிவிப்பு செய்யப்படுகிறது.

“குறிப்பிட்ட சில காலங்களில் மட்டுமே அரபு, ஜப்பானிய மொழிகளிலும் அறிவிப்பு செய்யப்படுகிறது”, என்றாரவர்.

-பெர்னாமா