வாஷிங்டன்,
1949-ல் நடந்த உள்நாட்டு போரின்போது சீனாவும் தைவானும் பிரிந்தன. ஆனால், தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடா்ந்து கூறி வருகிறது.
அதுமட்டுமின்றி, அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டி வருகிறது. மேலும் தைவானை அச்சுறுத்தும் வகையில் சீன போர் விமானங்கள் அடிக்கடி தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் ஊடுருவி வருகின்றன. அந்த வகையில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தொடர்ச்சியாக 60-க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்கள் தங்களின் வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தாக தைவான் குற்றம் சாட்டியது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி கூறுகையில், ‘‘தைவானுக்கு அருகிலுள்ள சீனாவின் ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கையால் நாங்கள் கவலைப்படுகிறோம். இது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.’’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் ‘‘தைவானுக்கு எதிரான ராணுவ, தூதரக மற்றும் பொருளாதார அழுத்தம் மற்றும் வற்புறுத்தலை கைவிட சீனாவை நாங்கள் வலியுறுத்துகிறோம், தைவான் ஜலசந்தி முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையில் எங்களுக்கு நிலையான ஆர்வம் உள்ளது. எனவே போதுமான சுய பாதுகாப்பு திறனைப் பராமரிக்க தைவானுக்கு நாங்கள் தொடர்ந்து உதவுவோம்’’ எனவும் கூறினார்.
(நன்றி Dailythanthi)