காபூல்,
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனால், அந்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டினரும், ஆப்கன் மக்களும் வெளியேற முயற்சித்தனர். ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தலீபான்கள் அனுமதி அளித்தனர்.
இதற்கிடையில், இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பாதுகாப்பு படை வீரரான பென் சால்டர் ஆப்கானிஸ்தானில் வசித்து வந்தார். அவர் காபூலில் ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி உள்பட பல்வேறு தொழில்களை நடத்தி வந்தார்.
தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியபோது தனது தொழில்நிறுவனத்தில் பணியாற்றிவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோரை ஆப்கானிஸ்தானில் இருந்து வேறு நாட்டிற்கு தப்பி செல்ல பென் சால்டர் உதவி செய்துள்ளார். ஆனால், ஆப்கானிஸ்தான் எல்லையில் அவர்கள் அனைவரையும் தலீபான்கள் தடுத்து நிறுத்தினர். மேலும், ஆப்கானிஸ்தான் மக்கள் தப்பிச்செல்ல உதவிய பென் சால்டரை தலீபான்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தலீபான்களால் கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு படை வீரர் பென் சால்டரை மீட்கும் நடவடிக்கையில் இங்கிலாந்து அரசு ஈடுபட்டு வந்தது. அந்த வகையில், தலீபான்களுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இங்கிலாந்து நாட்டின் 2 அதிகாரிகள் நேற்று காபூல் வந்தனர். அப்போது, முன்னாள் பாதுகாப்பு படை வீரர் பென் சால்டரை தலீபான்கள் விடுதலை செய்தனர். தலீபான்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்த 2 அதிகாரிகள் சென்ற விமானத்தில் பென் சால்டரும் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து 2 இங்கிலாந்து அதிகாரிகளுடன் தனி விமானம் மூலம் பென் சால்டரும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினார். காபூலில் இருந்து புறப்பட்ட அவர்கள் கத்தார் தலைநகர் தோஹா வந்தடைந்தனர். அதன்பின்னர் அங்கிருந்து இங்கிலாந்து செல்ல உள்ளனர். தலீபான்களால் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து முன்னாள் பாதுகாப்பு படை வீரர் பென் சால்டர் விடுதலை செய்யப்படுவதில் இங்கிலாந்து அரசுக்கு கத்தார் உதவி செய்துள்ளது.
(நன்றி Dailythanthi)