மித்ராவின் செயல்பாடு அவசியமானது – ஊழல் வேண்டாம்!  

இராகவன் கருப்பையா – மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டுக்கு அரசாங்கம் ஒதுக்கிய 100 மில்லியன் ரிங்கிட், தேவைப்படுவோரைச் சென்றடையும் முன்னரே முடிந்துவிட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘மித்ரா’ எனப்படும் இந்தியச் சமூக உருமாற்று பிரிவின் வழி அரசாங்கம் ஆண்டுதோறும் அத்தொகையை இந்தியர்களின் மேம்பாட்டுக்கு ஒதுக்குகிறது.

இது குறித்துக் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் ஹலிமா சாடி 2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் 65 மில்லியன்தான் இருந்ததாகவும் 35 மில்லியனை முன்னைய அரசாங்கம் ஏற்கெனவே செலவிட்டு முடித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

அதே போல இவ்வாண்டுக்கான ஒதுக்கீட்டில் 49 மில்லியன்தான் இருந்ததாகவும் 51 மில்லியன் பழைய கடனை அடைக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் செய்த அறிவிப்பு நம் சமூகத்தினரிடையே பெரும் குழப்பத்தையும் கோபத்தையும் கிளப்பிவிட்டுள்ளது.

அந்த நிதி எப்படிக் கடனுக்குள்ளானது எனப் பிரதமர் துறையில் அதற்குப் பொறுப்பாக இருந்த முன்னைய அமைச்சர் வேதமூர்த்தியைத்தான் கேட்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்துக் கருத்துரைத்த வேதமூர்த்தி தாம் அமைச்சராவதற்கு முன்னரே நிகழ்ந்துள்ள குளறுபடிகள் தொடர்பாக ஏற்கெனவே தாம் அளித்துள்ள விளக்கத்தைச் சுட்டிக்காட்டினார்.

பாரிசான் ஆட்சியின் போது ‘செடிக்’ எனும் பெயரில் இயங்கிய அந்நிதியை ஒரு இந்தியத் அமைச்சரும் இரு இந்திய துணையமைச்சர்களும் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்தனர் என, தாம் வேலையைத் தொடங்குவதற்கு முன்னரே தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் தமக்கு விளக்கமளித்ததை வேதமூர்த்தி நினைவுகூர்ந்தார்.

இந்தியர்களின் பொதுவான மேம்பாட்டுக்கு மட்டுமின்றி வரிய நிலையில் அவதிப்படும் இலட்சக்கணக்கான நம் இனத்தவரை ஓரளவாவது தூக்கிவிடுவதற்கென ஒதுக்கப்பட்ட அந்திதியை முறைகேடு செய்த அம்மூவரின் பெயர்களை அரசாங்கமோ வேதமூர்த்தியோ இதுவரையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதது வியப்பாகத்தான் உள்ளது.

தன்னை ஒரு கண்ணியமானவராக காட்ட முற்படும் வேதமூர்த்தி, ஊழல் சார்பாக ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என்பது வியப்பாக உள்ளது.

இந்நிலையில் மித்ராவின் நிதி ம.இ.கா. தொடர்புடைய அரசு சாரா இயக்கங்களுக்கு வழங்கப்பட்டது எனக் கோடிகாட்டும் ஒரு பட்டியல் சமூக வலைதளங்களில் இவ்வாரம் அதிக அளவில் பகிரப்பட்டு அக்கட்சி மீதான மக்களின் சினத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரன், செயலாளர் அசோகன், விக்னேஸ்வரனின் முன்னாள் உதவியாளரின் சகோதரர், கட்சியின் உதவித் தலைவர் டி.மூருகையா, ஜொகூரில் உள்ள காஹாங் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரமேஸ் மற்றும் சொக்சோ தலைவர் ஹனிஃபா ஆகியோரின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அதோடு ம.இ.கா.வின் மகளிர் பிரிவுத் தலைவி உஷா நந்தினி, துணைத் தலைவி விக்னேஸ்வரி பாபுஜி, செயலாளர் சிவரஞ்ஜினி, பொருளாளர் அம்ரிட் கோர், சிலாங்கூரில் உள்ள காப்பார் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோமலா கிருஷ்ணமூர்த்தி போன்றோருடன் தொடர்புடைய இயக்கங்களின் பெயர்களும் அப்பட்டியலில் காணப்படுகிறது.

நம் சமூகத்தினரிடையே பெரும் சலசலப்பையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ள இந்தப் பட்டியல் எந்த அளவுக்கு உண்மையைக் கொண்டுள்ளது என்று தெரியாத நிலையில் அதன் தொடர்பாக மேலும் விவரங்கள் தேவைப்படுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹலிமாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மிக விரைவில் இது குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கவிருப்பதாக ஹலிமா அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட எத்தனை இந்திய அரசியல்வாதிகளின் தலைகள் உருளும் என்பதைக் காண மக்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

கடந்த 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற 12ஆவது பொதுத் தேர்தல் தொடங்கிச் சன்னம் சன்னமாக  இந்தியர்களின் ஆதரவை முற்றிலும் இழந்துவிட்ட ம.இ.கா. தனது பழைய புகழைக் கொஞ்சமாவது மீட்டெடுக்க வேண்டும் எனும் வேட்கையில் அண்மைய காலமாகப் பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் இந்தப் புதிய சர்ச்சை அக்கட்சிக்கு ஒரு எதிர்பாராப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஏறக்குறைய இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருக்கும் இவ்வேளையில்,   ம.இ.கா. மீட்சிபெற தன்னை புதுபித்துக்கொள்ள வேண்டும். தவறினால் அது மூழ்கும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதையாவது உணர வேண்டும்.

இருப்பினும்,  அரசாங்கம் நம்மை 100% புறந்தள்ளவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அரசாங்கத்திற்கும் நமக்கும் பாலமாக இருக்க வேண்டிய கூட்டமே ‘வேலியே பயிரை மேய்ந்த’ கதையாக நமக்குச் சேரவேண்டியதைச் சரமாரியாகப் பிரித்து மேய்ந்தால், இனவாத  அரசாங்கம் மேலும் நம்மை பிளவு படுத்தி கிடைப்பதையும் எடுத்துக்கொள்ளும். குரங்கும் இரண்டு பூனைகளும் கதையாகிவுடும்.