அமேசான் மழைக்காடுகள் சட்ட விரோத விற்பனை: பிபிசி புலனாய்வும் ஃபேஸ்புக் நடவடிக்கையும்

இது போன்ற சட்டவிரோத வணிகம் பற்றி பிபிசி நடத்திய புலனாய்வினை அடுத்து ஃபேஸ்புக் இது தொடர்பான தமது கொள்கையை மாற்றிக்கொண்டுள்ளது.

ஃபேஸ்புக்கின் இந்த நடவடிக்கை, பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். அரசுக்கு சொந்தமான எல்லா காடுகளுக்கும் பொருந்தாது. அதைப் போல இது அமேசான் மழைக்காடுகளுக்கு மட்டுமே பொருந்தும், உலகில் உள்ள பிற மழைக்காடுகளுக்கும், காட்டுயிர் வாழ்விடங்களுக்கும் பொருந்தாது.

உலகில் நடக்கும் காடு அழிப்பில் மூன்றில் ஒரு பங்கு அமேசான் பகுதியில் அரசுகளுக்கு சொந்தமான காடுகளில்தான் நடக்கிறது என்று இபாம் (Instituto de Pesquisa Ambental da Amazonia) என்ற கருத்தியல் குழு நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமேசான் காடுகளில் இடங்களை விற்பது தொடர்பான சட்டவிரோத விளம்பரங்கள் எப்படி அடையாளம் காணப்படும் என்பதை வெளியே சொல்லப்போவதில்லை என்கிறது ஃபேஸ்புக். ஆனால், அமேசான் மழைக்காடுகள் தொடர்பான இத்தகைய சட்டவிரோத விளம்பரங்களைக் கண்டுபிடித்து நிறுத்தப்போவதாக அது கூறியுள்ளது.

சட்டவிரோத காடு அழிப்பு அம்பலம்

அமேசானில் ஆயிரம் கால்பந்து மைதானங்கள் அளவுக்குப் பெரிய நிலப்பகுதிகளை விற்பதற்கான விளம்பரங்கள்கூட ஃபேஸ்புக்கில் வெளியிடப்படுவதாக பிப்ரவரியில் வெளியான பிபிபிசியின் உலகளாவிய ஆவணப் படமான Selling the Amazon அம்பலப்படுத்தியது.

ஆல்விம் சௌசா ஆல்வெஸ்தேசியக் காடுகள், பூர்வகுடிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள் உள்ளிட்ட பல பாதுகாக்கப்பட்ட காடுகள் இப்படி விற்பனைக்கு விளம்பரம் செய்யப்பட்டவற்றில் அடக்கம்.

பிபிசி கையாண்ட உத்தி

இந்த விளம்பரங்கள் உண்மை என்பதை நிரூபிக்க, நான்கு விற்பனையாளர்களுக்கும் பணக்கார முதலீட்டாளர்களின் பிரதிநிதி என்று ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்குரைஞருக்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தது பிபிசி.

உள்ளூர் பணத்தில் 16 ஆயிரத்து 400 பவுண்டுகளுக்கு இணையான தொகைக்கு ஒரு நிலத்தை விற்க முன்வந்தார் நில ஆக்கிரமிப்பாளர் ஆல்விம் சௌசா ஆல்வெஸ். இந்த நிலம் பூர்வகுடிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட உரு யு வா வா (Uru Eu Wau Wau) பகுதிக்குள் உள்ளது.

பிபிசி நடத்திய இந்தப் புலனாய்வின் விளைவாக இது பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டது பிரேசில் கூட்டாட்சி உச்ச நீதிமன்றம்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அப்போது பூர்வகுடி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தபோதும், உள்ளூர் அதிகாரிகளோடு இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக கூறிய ஃபேஸ்புக் ஆனால், இந்த வணிகத்தை தன்னிச்சையாக நிறுத்த முடியாது என்று கூறி மறுத்துவிட்டது.

ஆனால், ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஆலோசித்து இந்த பிரச்சனையை கையாள்வதற்கான முதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தற்போது கூறுகிறது ஃபேஸ்புக்.

பூர்வகுடி ஆள்.முன்னாள் ஃபேஸ்புக் ஊழியரும், கூக்குரல் விடுப்பவருமான ஃப்ரான்சஸ் ஹௌஜென் அம்பலப்படுத்திவரும் அதிர்ச்சிகரமான விஷயங்களை அடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் அழுத்தத்துக்கு ஃபேஸ்புக் நிறுவனம் ஆளாகியிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கை பலன் அளிக்குமா?

சட்டவிரோதமாக நிலங்களை விற்பவர்களை கண்டுபிடிக்க ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட பாதுகாப்பு கண்காணிப்பு மையத்தின் தரவுகளைப் பயன்படுத்தவுள்ளது ஃபேஸ்புக்.

அரசுகள் மற்றும் பிற நிறுவனங்கள் அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில் மாதந்தோறும் புதுப்பிக்கப்படும் இந்தத் தரவு மிகவும் விரிவானது என்கிறது ஐநா சுற்றுச்சூழல் திட்டம்.

ஆனால், விற்பனை செய்யப்படும் இடம் எங்கே உள்ளது என்பதை விளம்பரதாரர்கள் கட்டாயமாக தெரிவிக்கவேண்டும் என்று விதிகளை திருத்தாவிட்டால், சட்டவிரோத விற்பனையைத் தடுப்பதற்கான எந்த முயற்சியும் வெற்றிபெறாது என்கிறார் பிரேசில் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியும் வழக்குரைஞருமான பிரென்டா பிரிட்டோ.

“உலகின் தலைசிறந்த தரவுகள் அவர்களிடம் இருக்கலாம். ஆனால், விற்பனை செய்யும் இடம் உள்ள பகுதி எங்கே இருக்கிறது என்ற குறிப்பு இல்லாவிட்டால் அது வேலைக்கு ஆகாது,” என்கிறார் அவர்.

சில விளம்பரங்களில் இடத்தின் செயற்கைக்கோள் படங்களும், ஜிபிஎஸ் புவியியல் குறிப்புகளும் இடம் பெற்றிருந்தன; ஆனால், எல்லா விளம்பரங்களும் அந்த அளவுக்கான தகவல்களைப் பகிர்வதில்லை என்பதை பிபிசி புலனாய்வில் கண்டறியப்பட்டது.

விற்கப்படும் நிலம் அமைந்துள்ள இடத்தைப் பற்றி விற்பனையாளர்களிடம் துல்லியமான விவரம் கேட்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று பிபிசியிடம் கூறியது ஃபேஸ்புக்.

“இந்தப் பிரச்சனைக்கு சர்வரோக நிவாரணி ஏதும் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், எங்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு விளம்பரம் செய்வோரை தடுக்க தொடர்ந்து பாடுபடுவோம்,” என்று ஃபேஸ்புக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

அமேசான் என்னும் பிரும்மாண்டம்

பிரேசில், பெரு, ஈக்வடார், கொலம்பியா உள்பட குறைந்தபட்சம் 7 நாடுகளில் பரவியுள்ள அமேசான் மழைக்காடுகள் மொத்தம் 75 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்துவிரிந்துள்ளன.

இந்த சட்டவிரோத விற்பனையைத் தடுப்பது தொடர்பாக அந்தந்த நாடுகளின் அரசுகளுடனும் இணைந்து செயல்படுகிறதா என்பதை ஃபேஸ்புக் உறுதிப்படுத்தவில்லை.

அமேசான் மழைக்காடுகளில் 60 சதவீதம் பிரேசிலில் உள்ளது. இங்கே காடு அழிப்பு விகிதம் 12 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்போது அதிகமாக உள்ளது.

காடுகளை சட்டவிரோதமாக இணையத்தில் விற்பதைத் தடுப்பதற்கான முக்கிய கருவி பிரேசில் அரசின் பொதுக் காடுகள் குறித்த அதிகாரபூர்வ தரவு. ஆனால், இந்த தரவுகளை ஃபேஸ்புக் பயன்படுத்தப்போவதில்லை.

“இந்த முயற்சியை மேம்படுத்துவதற்கு 2016 முதல் கிடைக்கும் இந்த தரவை அவர்கள் பயன்படுத்தலாம்,” என்கிறார் பிரெண்டா பிரிட்டோ.

ஆனால், அமேசான் மழைக்காடுகளில் நடந்துவரும் பெரிய அளவிலான காடு அழிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டங்களை பலவீனப்படுத்த நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஆகியவற்றின் பின்னணியில் பார்த்தால், ஃபேஸ்புக்கின் இந்த அறிவிப்பு ஒரு சிறிய வெற்றி என்கிறார்கள் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்.

(நன்றி BBC TAMIL)