13 முதல் 19 வயதுடைய 35 பெண்களைக் கொண்ட குழு கடந்த மாதம் காபூலை விட்டு வெளியேறி பாகிஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த சில வாரங்களாகத் தங்கியிருந்தனர். அவர்களது தற்காலிக விசா திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது.
“நாங்கள் ஆப்கானிஸ்தான் மகளிர் மேம்பாட்டுக் குழுவுடன் பேசி விசாக்களை இறுதி செய்து, விரைவில் பிரிட்டனுக்கு அவர்களை வரவேற்க காத்திருக்கிறோம்” என்று பிரிட்டன் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
வேறு நாடுகள் ஏற்றுக் கொள்ளாவிட்டால், அந்தப் பெண்கள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
“இது அருமையான செய்தி, இந்த உயிர் காக்கும் முடிவுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் உள்துறை அமைச்சர் ப்ரீத்தி பட்டேலுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” இந்தப் பெண்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிவர உதவிய ரோக்கிட் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி சியு அன்னி மேரி கில் கூறினார்.
“அவர்களுக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அறக்கட்டளையின் தலைவர் ஜொனாதன் கென்ட்ரிக் கூறினார்.
அவர் ஆப்கானிஸ்தானில் இருந்து பேருந்துகளில் அவர்களை அழைத்துச் செல்லவும், லாகூரில் தங்கவும் நிதியுதவி அளித்திருந்தார்.
“இது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு புதிய உலகம். கால்பந்து உலகம் தங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். அவர்கள் குடியேறி, வாழ்க்கையின் அனைத்து மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியும்.”
இந்தப் பெண்களுக்கு என்ன நடக்கும் என்று மிகவும் பதற்றமாக இருந்தாகக் கூறும் கில், இப்போது பெரும் நிம்மதி அடைந்திருப்பதாகத் தெரிவித்தார். இரண்டு மூன்று வாரங்களில் அவர்கள் பிரிட்டனுக்குச் செல்வார்கள் என்று அவர் கூறினார்.
லீட்ஸ் யுனைடெட் மற்றும் செல்சி ஆகியவை பிரிட்டனில் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த பல பிரிட்டிஷ் கால்பந்து கிளப்புகளில் அடங்கும்.
அவர்களில் பெரும்பாலோர் மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட்டைச் சேர்ந்தவர்கள். மேற்கு நாடுகளுக்கு விமானப் போக்குவரத்து தொடங்கியபோது அவர்கள் காபூலுக்குச் சென்று பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்தனர்.
“அவர்களில் எழுபது சதவீதம் பேரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது” என்று கில் கூறினார். “அவர்கள் பயந்து போயிருந்தார்கள்”
ஆப்கானிஸ்தானின் முன்னாள் மகளிர் அணி விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டது. பின்னர் அந்தப் பெண்களுக்கு போர்ச்சுகலில் அடைக்கலம் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வளர்ந்துவரும் பெண்கள் அணியின் நிலைமை நிச்சயமற்றதாக இருந்தது.
இந்தப் பதின்ம வயதுப் பெண்கள், அவர்களின் பயிற்சியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன், கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் கத்தார் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட இருந்தனர். விமான நிலையத்துக்கு மிக அருகில் இருந்தபோது, பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக அவர்கள் காத்திருக்க நேரிட்டது. அந்த நேரத்தில் மனிதவெடிகுண்டுத் தாக்குதல் நடந்ததால், அவர்களது பயணம் தடைபட்டது.
10 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர், அவர்கள் இறுதியாக ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிரதமர் இம்ரான் கான் தனிப்பட்ட முறையில் அனுமதி வழங்கிய பின்னர் அவர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்தனர்.
ஆனால் அவர்களின் பாகிஸ்தான் விசாக்கள் முடிவடைய இருந்ததால், அவர்கள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. ” மேடை எரிந்து கொண்டிருந்தது ” என்று கூறுகிறார் கில்.
தாலிபன்கள் பொறுப்பேற்ற பிறகு எந்த விளையாட்டிலும் பெண்கள் பங்கேற்க முடியவில்லை. தாலிபன்கள் பழிவாங்குவார்கள் என்ற அச்சம் காரணமாக, தங்களிடம் உள்ள விளையாட்டுப் பொருள்களை எரித்துவிடுமாறும், சமூக வலைத்தளப் படங்களை அழித்துவிடுமாறும் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் காலிதா போபால் எச்சரித்திருக்கிறார்.
(நன்றி BBC TAMIL)