சீனாவுடன் மோதும் சின்னஞ்சிறு தீவு: தைவானின் வரலாறு தெரியுமா?

“நாம் அதிகம் சாதிக்க, சாதிக்க சீனாவிடம் இருந்து வரும் அழுத்தம் அதிகமாகும்,” என்று ஞாயிறன்று நடந்த தைவானின் தேசிய தின உரையில் அவர் பேசியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக தைவானில் சீ னாவின் ராணுவ நடவடிக்கை அதிகரித்திருப்பது உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தைவானை தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற ஒரு பகுதியாகவே சீனா இன்றுவரை பார்க்கிறது. மீண்டும் தன்னுடன் இணையும், அல்லது இணைந்திருக்கும் பிராந்தியமாகவும் கருதுகிறது.

ஆனால் இதை பெரும்பகுதி தைவானிய மக்கள் ஒப்புக் கொள்வதில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் இறையாண்மை கொண்ட ஒரு தேசத்தில் வாழ்ந்து வருவதாகவே அவர்கள் கருதுகிறார்கள்.

இருப்பினும் உலக அளவில் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளே தைவானை அங்கீகரித்திருக்கின்றன. இந்தியா உள்பட்ட பெரும்பாலான நாடுகள் தைவானை இறையாண்மை கொண்ட நாடாக இன்னும் அங்கீகரிக்கவில்லை.

இந்தப் பதற்றத்தின் வரலாறு என்ன?

தைவானில் முதலில் அறியப்பட்ட குடியேறியவர்கள் ஆஸ்ட்ரோனேசிய பழங்குடி மக்கள். அவர்கள் நவீன கால தெற்கு சீனாவில் இருந்து வந்தவர்கள் என்று கருதப்படுகிறது.

இந்த தீவு சீனாவின் வரலாற்றுப் பதிவுகளில் கி.பி 239இல் காணப்படுகிறது. ஒரு பேரரசர் அந்தத் தீவுப் பகுதியைக் கண்டறிய ஒரு படையை அனுப்பினார். இதையே சீனா தைவான் மீதான உரிமைக்கு பயன்படுத்துகிறது.

குறைந்த காலத்துக்கு டச்சுக் காலனியாக இருந்து தைவான், பின்னர் கிங் வம்சத்தால் 1683 முதல் 1895 வரை ஆட்சி செய்யப்பட்டது.

17ஆம் நூற்றாண்டில் கொந்தளிப்பு மற்றும் கடினமான சூழல் காரணமாக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் சீனாவிலிருந்து வரத் தொடங்கினர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் ஃபுகியன் மாகாணத்தைச் சேர்ந்த ஹோக்லோ சீனர்கள் அல்லது குவாங்டாங்கிலிருந்து வந்த ஹக்கா சீனர்கள். இவ்விர புலம்பெயர் குழுக்களின் வம்சாவளியினரே இப்போது தைவானில் மிகப்பெரிய இனங்களாக உள்ளனர்.

1895ஆம் ஆண்டில் சீன-ஜப்பானியப் போரில் ஜப்பான் வென்றது. கிங் வம்ச அரசு தைவானை ஜப்பானுக்கு கொடுக்க வேண்டியிருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் சீனாவிடம் இருந்து கைப்பற்றிய பிரதேசங்களின் கட்டுப்பாட்டை இழந்தது.

சியாங் காய் ஷேக்போரில் வெற்றி பெற்றவர்களில் ஒன்றான சீனா, அப்போதைய அதன் கூட்டாளிகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஒப்புதலுடன் தைவானை ஆளத் தொடங்கியது.

ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் சீனாவில் உள்நாட்டுப் போர் வெடித்தது, அப்போதைய தலைவர் சியாங் காய்-ஷேக்கின் துருப்புக்கள் மாவோ சேதுங்கின் கம்யூனிஸ்ட் படைகளால் விரட்டி அடிக்கப்பட்டன.

சியாங் மற்றும் அவரது குவோமிண்டாங் (KMT) அரசைச் சேர்ந்தவர்கள் 1949 இல் தைவானுக்கு தப்பிச் சென்றனர். இந்தக் குழு பெரும்பரப்பு சீனக் குழு என்று அழைக்கப்பட்டது. அப்போது இதில் 15 லட்சம் பேர் இருந்தனர். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 14 சதவிகிதம் என்றாலும், பல ஆண்டுகளாக தைவானின் அரசியலில் இந்தக் குழுவினர் ஆதிக்கம் செலுத்தினர்.

சர்வாதிகார ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதால், சியாங்கின் மகன் சியாங் சிங்-குவோ தைவானில் ஜனநாயகப்படுத்தும் நடைமுறையைத் தொடங்கினார்.

தைவான் “ஜனநாயகத்தின் தந்தை” என்று அழைக்கப்படும் அதிபர் லீ டெங்-ஹுய், அரசியலமைப்பு மாற்றங்களை முன்னின்று செய்தார். இறுதியில் தைவானில் முதல் கே.எம்.டி அல்லாத அதிபரான சென் ஷுய்-பியனன் 2000 இல் தேர்வு செய்யப்பட்டார்.

இப்போதைய பதற்றத்துக்கு என்ன காரணம்?

சீனா மற்றும் தைவான் இடையேயான உறவு 1980 களில் மேம்படத் தொடங்கியது. “ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்” என்று அழைக்கப்படும் ஓர் உத்தியை சீனா முன்வைத்தது. இதன் கீழ் தைவான் சீனாவுடன் இணைய ஒப்புக் கொண்டால், அதற்கு கணிசமான தன்னாட்சிஅதிகாரம் வழங்கப்படும்.

முன்னதாக இந்த நடைமுறை ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்டது. இது தைவானிய மக்களை மீண்டும் நிலப்பகுதிக்கு ஈர்க்கும் ஓர் உத்தியாகக் கவனிக்கப்பட்டது.

ஆனால், தைவான் இந்த வாய்ப்பை நிராகரித்தது. இருப்பினும் பயணம் மற்றும் முதலீடு குறித்த விதிகளை தளர்த்தியது. 1991ஆம் ஆண்டில் சீனாவுக்கு எதிரான போர் முடிவடைவதாகவும் அறிவித்தது.

தைவானின் அரசு சட்டவிரோதமானது என்று சீனா கூறுவதால், அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடப்பதில்லை என்றாலும், அதிகாரப்பூர்வம்ற்ற முறையில் பிரதிநிதிகளின் சந்திப்பு நடைபெற்றிருக்கின்றன.

2000ஆம் ஆண்டில், தைவான் அதிபராக சென் ஷுய்-பியன் தேர்வு செய்யப்பட்டபோது, சீனா கவலையடைந்தது. ஏனென்றால் அவர் தைவானின் “விடுதலையை” வெளிப்படையாக ஆதரித்தார்.

பியன்2004ஆம் ஆண்டில் சென் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஓராண்டுக்குப் பிறகு பிரிவினை எதிர்ப்புச் சட்டத்தை சீனா பிறப்பித்தது. சீனாவிலிருந்து “பிரிந்து செல்ல” முயன்றால் தைவானுக்கு எதிராக “அமைதியற்ற வழிமுறைகளை” பயன்படுத்துவதற்கு இந்தச் சட்டம் வழிவகுத்தது.

சென்னுக்குப் பிறகு 2008ல் பதவியேற்ற மா யிங் ஜியோ, பொருளாதார உடன்பாடுகள் மூலம் சீனாவுடனான உறவை மேம்படுத்த முயன்றார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2016இல், தைவானின் தற்போதைய தலைவர் சாய் இங்-வென் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஜனநாயக முன்னேற்றக் கட்சி, சீனாவில் இருந்து பிரிந்து செல்வதை தீவிரமாக வலியுறுத்துகிறது.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றபோது சாய் அவருடன் தொலைபேசியில் பேசினார். 1979-இல் அதிகாரப்பூர்வ உறவுகள் துண்டிக்கப்பட்ட பிறகு, இப்படியொரு பேச்சு நடந்தது அதுவே முதல்முறையாகும்.

அதிகாரப்பூர்வ உறவுகள் இல்லாத போதிலும், தைவானுக்கு தற்காப்பு ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

2018-இல் தைவானை சீனாவின் ஒரு பகுதியாக தங்கள் வலைத்தளங்களில் பட்டியலிடும்படி பன்னாட்டு நிறுவனங்களுக்கு சீனா அழுத்தம் கொடுத்தது. அதற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், சீனாவில் இயங்க முடியாது என்றும் அச்சுறுத்தியது.

2020ஆம் ஆண்டில் சாய் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். அந்த நேரத்தில் ஹாங்காங்கில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இது தைவானிலும் கவனிக்கப்பட்டது.

அதிபர் சாய்அதே நேரத்தில், அமெரிக்கா தைவானுக்கான தனது உறவை வலுப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியுறவுத்துறை உயர் அதிகாரியை தைவானுக்கு அனுப்பியது.

இந்தப் பயணத்தை சீனா கடுமையாக விமர்சித்தது, “சீனா-அமெரிக்க உறவுகளுக்கு கடுமையான பாதிப்பை தவிர்க்க வேண்டுமானால், தவறான சமிக்ஞை எதையும் அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்காவை எச்சரித்தது.

இந்த ஆண்டில் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் தைவான் விவகாரத்தின் அமெரிக்காவின் உறுதி, திடமானது என்று கூறியுள்ளது.

பைடன் அதிபராகப் பதவியேற்ற முதல் சில நாட்களில் சீனப் போர் விமானங்கள் ஊடுவியதாக தைவான் அறிவித்தது. ஏப்ரல் 12 அன்று, தனது வான் எல்லைக்குள் அதிக எண்ணிக்கையிலான ராணுவ விமானங்களை பறக்க விட்டதாக தைவான் கூறியது.

இதற்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்க இந்தோ-பசிபிக் படைப் பிரிவின் தலைவரான ஜான் அகிலினோ, “தைவான் மீதான சீனப் படையெடுப்பு நாம் நினைப்பதை விட நமக்கு மிகவும் நெருக்கமானது” என்று கூறினார்.

தைவானை அங்கீகரிப்பது யார்?

தைவான் என்றால் என்ன என்பதில் கருத்து வேறுபாடு மற்றும் குழப்பம் உள்ளது.

சீனா தைவானை ஒரு பிரிந்த மாகாணமாக கருதுகிறது. தேவைப்பட்டால் மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருக்கிறது. ஆனால் தைவானின் தலைவர்கள் இதை ஏற்கவில்லை. தைவான்ஓர் இறையாண்மை கொண்ட நாடு என்று வாதிடுகின்றனர்.

தைவான் தனக்கென ஓர் அரசியல் சட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், படைகளில் சுமார் 3 லட்சம் வீரர்களைக் கொண்டிருக்கிறது.

சியாங் காய்-ஷேக்கின் சீனக் குடியரசு (ROC) அரசு, 1949 இல் தைவானுக்கு தப்பிச் சென்றது. தாங்களே ஒருங்கிணைந்த சீனா என்று அறிவித்தது. பின்னர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் சீனாவின் இடத்தைப் பிடித்தது. பல மேற்கத்திய நாடுகளால் ஒரே சீன அரசாங்கமாகவும் அங்கீகரிக்கப்பட்டது.

ஆனால் 1971 இல், ஐக்கிய நாடுகள் சபை பெய்ஜிங்கில் இருந்து இயங்கும் சீன அரசுக்கு அங்கீகாரத்தை மாற்றியது. தைவானில் இருந்து இயங்கும் அரசு வெளியேற்றப்பட்டது. அதன் பிறகு தைவானில் இருக்கும் அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை சுமார் 15 ஆகக் குறைந்தது.

வரைபடம்இந்த இரண்டு நிலைப்பாட்டுக்கும் இடையே பெரும் பிளவு இருப்பதால், பெரும்பாலான பிற நாடுகள் தற்போதைய தெளிவற்ற தன்மையை அப்படியே ஏற்றுக் கொண்டு திருப்தியடைகின்றன. இதனால் அங்கீகாரம் கிடைக்காவிட்டால்கூட, ஒரு சுதந்திர அரசின் அனைத்துப் பண்புகளையும் தைவான் கொண்டுள்ளது

இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

இந்தியா தைவானை இறையாண்மை கொண்ட தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. எனினும் பண்பாட்டு ரீதியிலான உறவைப் பேணி வருகிறது. 1990-களில் இருந்து இரு தரப்பு உறவுகள் மேம்பட்டு வந்திருக்கின்றன.

கடந்த மே மாதம் தைவானின் அதிபராக சாய் தேர்வு செய்யப்பட்டபோது, பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.க்களான மீனாட்சி லேகி, ராகுல் கஸ்வான் ஆகிய இருவரும் காணொளி மூலம் அவரது பதவியேற்பு விழாவின் பங்கேற்றனர்.

ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமை ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளும் இணைந்திருப்பதாக தங்களது வாழ்த்துச் செய்தியில் அவர்கள் கூறினர்.

இரு தரப்பு வர்த்தக உறவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

(நன்றி BBC TAMIL)