மலேசியாவின் 13வது பொதுத் தேர்தலில் மலாய் வாக்காளர்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக தாங்கள் அரசியல் படைக் காய்களாக வைக்கப்பட்டுள்ளதாக இந்த நாட்டில் வாழும் பல கிறிஸ்துவர்கள் கருதுகின்றனர்.
இவ்வாறு நியூ யார்க் டைம்ஸ் நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்று கூறுகிறது.
கிறிஸ்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டை “கிறிஸ்துவ மயமாக்க” அவர்கள் முயலுவதாக குற்றம் சாட்டப்படுவதாகவும் பல தேவாலயத் தலைவர்கள் கூறியதாக அந்த நாளேட்டின் நேற்றைய தகவல் குறிப்பிட்டது.
“‘கிறிஸ்துவர்களைத் தாக்கும்” ஒரு வகையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது எனப் பொதுவான உணர்வு கிறிஸ்துவர்களிடையே நிலவுவதாக நான் நினைக்கிறேன்”, என மலேசிய தேவாலய மன்றத்தின் உதவித் தலைவர் ரெவரண்ட் தாமஸ் பிலிப்ஸ் அந்த முன்னணி அமெரிக்க நாளேட்டிடம் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பெட்டாலிங் ஜெயாவில் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நிகழ்ந்த விருந்து ஒன்றை சிலாங்கூர் இஸ்லாமிய அதிகாரிகள் தடுத்த பின்னர் ஏற்பட்ட சமய பதற்ற நிலையை அந்தக் கட்டுரை சுட்டிக் காட்டியது.
சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் “போதுமான ஆதாரம் இல்லை” என விசாரணைக்குப் பின்னர் சிலாங்கூர் சுல்தான் முடிவு செய்த போதும் “கிறிஸ்துவச் சதி” இருப்பதாக சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் அரசு சாரா அமைப்புக்களின் தலைவர்களும் தொடர்ந்து பழி சுமத்திக் கொண்டிருக்கின்றனர்.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒர் அரசு சாரா அமைப்பு ஹிம்புன் ஆகும். அண்மையில் தான் அமைக்கப்பட்ட ஹிம்புன் அது அக்டோபர் மாதம் நடத்திய பேரணி ஒன்றில் 5,000 பேர் பங்கு கொண்டனர். கிறிஸ்துவ சமயத்துக்கு மாறுவதற்கு எதிரான சட்டங்களை அரசாங்கம் அமலாக்கவில்லை என அந்தப் பேரணியில் புகார் கூறப்பட்டது.
“அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டமாகும்”
கடந்த மாதம் அம்னோ பொதுப் பேரவையில் பிரதமர் துறை அமைச்சர் அகமட் மஸ்லான் நிகழ்த்திய உரை, “‘கிறிஸ்துவர்களைத் தாக்குவது” என்ற அரசியல் நோக்கத்தை வெளிப்படையாகக் காட்டியது. அடுத்தப் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினால் இஸ்லாம் “காணாமல்” போய் விடும் என அவர் அந்த உரையில் கூறிக் கொண்டிருந்தார்.
“ஆதாரம் இல்லாத அத்தகையக் குற்றச்சாட்டுக்களை வெளியிடுகின்றவர்கள் மீது அதிகாரிகள் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்காதது மிகவும் துரதிர்ஷ்டமானது”, செயிண்ட் மேரிஸ் ஆங்கிலிக்கன தேவாலயத்தைச் சேர்ந்த ஆயர் ஜேசன் செல்வராஜ் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் கட்டுரை தெரிவித்தது.
கிறிஸ்துவச் சதித் திட்டம் ஒன்று வரையப்பட்டுள்ளதாக சித்தரிக்கும் முயற்சிகள், தேசிய ஒற்றுமையையும் அரவணைப்பையும் மேம்படுத்தும் நோக்கம் கொண்ட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஒரே மலேசியா இயக்கத்தை கீழறுப்புச் செய்துள்ளதாக சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞான பேராசிரியராக பணியாற்றும் பாரிஷ் அகமட் நூர் கூறினார்.
“மலாய் வாக்குகளைப் பெறுவதற்கு அதுதான் ஒரே வழி என அம்னோவில் உள்ள சில பிரிவுகள் கருதுமானால் இயன்ற வரை கிறிஸ்துவர்கள் உட்பட அதிகமான மலேசியர்களுடைய வாக்குகளை பிஎன் கூட்டணி பெற வேண்டும் என்பதையும் அவை உணர வேண்டும்.”
ஹிம்புன் போன்ற அமைப்புக்கள் தாங்கள் சுதந்திரமாக இயங்குவதாகக் கூறிக் கொண்டாலும் அவை பின் கூட்டணிக்கு இன்னொரு முன்னணி என்றே மலேசியர்கள் அவற்றைக் கருதுகின்றனர்.