கோவிட் தொற்று பாதிக்கப்பட்டதால் வியட்நாமின் லாங் ஆன் மாகணத்தை சேர்ந்த தம்பதியினர் தங்களது 15 நாய்களுடன் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.
ஆனால் அந்த தம்பதியினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர்களின் நாய்கள் தொற்று பரவல் அச்சத்தால் கொல்லப்பட்டுவிட்டன என்பதை தெரிந்து துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
“நானும் எனது மனைவியும் ஓயாமல் அழுதுகொண்டே இருக்கிறோம். எங்களால் தூங்க முடியவில்லை,” என்கிறார் 49 வயது பாம் மின் ஹங்
“எனது குழந்தையை காப்பாற்ற என்னால் முடியவில்லை” என்றார் அவர்.
இவர்களின் கதை டிக் டாக்கில் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் இம்மாதிரியாக கொல்லும் வழக்கத்தை நிறுத்துவதற்கான கையெழுத்து பிரசாரத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
வியட்நாமில் சமீபத்திய கொரோனா தொற்று பரவலால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.
தொற்று பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது வியட்நாம் அரசு. எனவே பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை தேடி பெரு நகரங்களுக்கு சென்றனர். அதில் பாம் மின் ஹங் மற்றும் அவரின் மனைவி குயேன் தி சி எம்-மும் அடக்கம்.
அக்டோபர் 8ஆம் தேதி அவர்கள் 280 கிலோ மீட்டர் கொண்ட ஒரு நீண்ட பயணத்தை தொடங்கினர். அவர்களுடன் அவர்களின் நாய்களையும் அழைத்து வந்தனர். அவர்களின் மூன்று உறவினர்களும் உடன் வந்தனர். அவர்களிடத்திலும் மூன்று நாய்கள் மற்றும் ஒரு பூனை இருந்தன.
அந்த தம்பதியினர் அவர்களின் உறவினர்கள் வசிக்கும் மாகாவ் மாகணத்தில் உள்ள கான் ஹங் என்ற நகருக்கு பிழைப்பு தேடி சென்றனர். அங்கு கொரோனா தொற்று எண்ணிக்கையும் குறைவு.
அவர்கள் இருசக்கர வாகனத்தில் தங்களின் உடமைகள், மற்றும் நாய்களுடன் பயணம் செய்த வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவு செய்திருந்தனர். அதனால் அவர்கள் பிரபலமடைந்தனர். பலர் அவர்களின் பயணத்திற்கு வாழ்த்துக்களும் தெரிவித்திருந்தனர்.
அந்த தம்பதியினர் நாய்களை மழையிலிருந்து பாதுகாக்க ரெயின்கோட் போர்த்தியிருந்தனர். அது தங்களின் இதயத்தை நெகிழ வைத்ததாக பலர் சமூக ஊடகத்தில் தெரிவித்திருந்தனர். சில அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கினர்.
மாகாவ் மாகணத்திற்குள் நுழைந்தவுடன் அந்த தம்பதியினர் இருநாய்களை தத்து கொடுத்துவிட்டனர். ஒரு நாய் உயிரிழந்துவிட்டது. மற்ற நாய்கள் அவர்களுடன் இருந்தன.
உறவினரின் வீட்டை அடைந்தவுடன் அந்த தம்பதியினருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நாய்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் உள்ளூர் அதிகாரிகள் அவர்களின் 12 நாய்களையும், உறவினர்கள் வளர்த்த நாய் பூனைகளையும் அவர்களுக்கு எந்த தகவலும் கொடுக்காமல் கொன்றுவிட்டதாக அரசு ஊடக செய்தி தெரிவித்திருந்தது. ஆனால் அந்த செய்தி பின்னர் நீக்கப்பட்டது. அந்த விலங்குகள் எவ்வாறு கொல்லப்பட்டன என்பது தெரியவில்லை. ஆனால் காவல்துறையின் அதிகாரபூர்வ செய்தித்தாளில் அவை எரித்து கொல்லப்பட்டது போல புகைப்படங்கள் இருந்தன.
“நோய் தடுப்பு நடவடிக்கைக்குதான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். விலங்குகளை கொல்ல வேண்டும் என எடுக்கப்பட்ட முடிவு தடுப்பு நடவடிக்கையின் அங்கம்” என உள்ளூர் அதிகாரி ஒருவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
விலங்குகளை இவ்வாறு கொன்றது காட்டுமிராண்டித்தனமானது
என சமூக ஊடகப் பயனர்களும், விலங்குகள் நல ஆர்வலர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த கொலைகள் நியாயமற்றவை
என்றும் “ஏற்றுக் கொள்ள முடியாதவை” என்றும் அமெரிக்காவில் உள்ள சிட்டி ஆஃப் ஹோப் நேஷனல் மெடிக்கல் சென்டரை சேர்ந்த விஞ்ஞானி குயான் தெரிவித்துள்ளார்.
உரிமையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களின் செல்லப்பிராணிகளை கொல்ல வேண்டும் என எந்த வழிகாட்டல் நெறிமுறையும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாய், பூனைகளால் மனிதர்களுக்கு கொரோனா தொற்று பரவும் என எந்த அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை. ஆனால் மனிதர்கள் அவற்றிற்கு தொற்றினைப் பரப்ப வாய்ப்புள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(நன்றி BBC TAMIL)