வெளிநாட்டு வங்கிகளில் பாகிஸ்தானுக்கு அதிக கடன்: உலக வங்கி தகவல்

வாஷிங்டன்

நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு திணறி வருகிறது.

இந்தநிலையில் வெளிநாட்டு வங்கிகளில் பாகிஸ்தானுக்கு அதிக கடன் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அதே வேளையில் அந்த கடனை தற்காலிகமாக ரத்து செய்யும் நடைமுறைக்கு அந்த நாடு தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டுக்கான சர்வதேச கடன் புள்ளியியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு வங்கிகளில் அதிகம் கடன் வாங்கிய 10 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அங்கோலா, வங்காளதேசம், எத்தியோப்பியா, கானா, கென்யா, மங்கோலியா, நைஜீரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் சாம்பியா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த நாடுகள் அனைத்தும் தற்காலிக கடன் ரத்து நடைமுறைக்கு தகுதி பெற்றுள்ளன.

2020-ம் ஆண்டு இறுதிவரை இந்த நாடுகளின் மொத்த கடன் இருப்பு 509 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில், இது 12 சதவிகிதம் அதிகமாகும். பாகிஸ்தானை பொறுத்தவரை, வெளிநாட்டு வங்கிகளில் அதன் கடன் 8 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

(நன்றி MAALAIMALAR)