கோலாலம்பூரை யார் கண்டுபிடித்தார்? சீனரா? மலாய்காரரா?

இராகவன் கருப்பையா–  ஆ லோய் எனும் ஒரு சீன வணிகர்தான் கோலாலம்பூரைக் கண்டுபிடித்தவர் எனக் காலங்காலமாக நாம் சரித்திரப் புத்தகங்களில் படித்திருக்கிறோம்.

ஆனால் வெவ்வேறு ஆய்வுகளில் மேலும் இருவரின் பெயர்களும் அந்தப்பட்டியலில் இருப்பதைச் சற்று அலசி ஆராய்கிறார் வரலாற்றாசிரியர் ரஞ்சிட் சிங்.

இந்தோனேசியாவின் வட சுமத்ராவில் உள்ள மண்டய்லிங்ஙைச் சேர்ந்த சுத்தான் பூவாசா எனும் ஒரு மாமனிதர்தான் கோலாலம்பூரைக் கண்டுபிடித்தவர் என அப்டுரஸாக் லுபிஸ் எனும் ஆய்வாளர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அம்பாங் வட்டாரத்தில் ஈயச் சுரங்கங்களை நிர்மாணித்த ராஜா அப்துல்லா ராஜா ஜாஃபார்தான் கடந்த 1857ஆம் ஆண்டில் கோலாலம்பூரை முதலில் கண்டுபிடித்தார் என நமது அரசாங்கம் சார்புடைய வரலாற்றுப்படிவங்கள் காட்டுகின்றன.

அந்தச் சமயத்தில் கிளேங் மாவட்டத் தலைவராக இருந்த அவர் 87 சீனத் தொழிலாளர்களை அழைத்து வந்து அம்பாங்கில் ஈயச்சுரங்க நடவடிக்கைகளைத் தொடக்கியதாகக் கோலாலம்பூரின் நடப்புச் சுற்றுலாத்துறை வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றிக் கோலாலம்பூரை மேம்படுத்தியவர்களில் ராஜா அப்துல்லாதான் முதன்மையானவர் எனத் தற்போதைய 3ஆம் படிவச் சரித்திரப் புத்தகத்திலும் உள்ளதாக ரஞ்சிட் சிங் விவரிக்கிறார்.

மேலும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னதாகவே கோலாலம்பூரில் மலாய்க்காரர்களின் குடியேற்றம் இருந்தது என மலாயா பல்கலைக்கழகத்தின் வரலாற்று பிரிவு இணை பேராசிரியர் ஸுல்கனய்ன் கடந்த 2012ஆண்டில் வெளியிட்ட ஒரு பதிவில் வியக்கத்தக்க வகையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் குழப்பங்களையெல்லாம் கலைவதற்கு நம்பகமான வரலாற்று படிவங்களை ஆராய்வது மிகவும் அவசியம் என்று மேலும் கூறுகிறார் ரஞ்சிட் சிங்.

அம்பாங்கில் ஈயச்சுரங்க வேலைக்கு ராஜா அப்துல்லா அழைத்து வந்த 87 சீனத் தொழிலாளர்களில் 69 பேர் வந்து ஒரு மாதத்திற்குள்ளேயே மலேரியா நோய்க்கு இலக்காகி மரணமடைந்ததால் மேலும் அதிகமானோர் கொண்டுவரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 2 ஆண்டுகளிலேயே ஈயம் ஏற்றுமதி செய்யப்படும் அளவுக்கு அந்தச் சுரங்கத்தொழில் வளர்ச்சியடைந்தது.

எனினும் அப்துல்லாதான் அந்தச் சீனத் தொழிலாளர்களை அம்பாங்கிற்கு அழைத்து வந்தார் என்பதற்கான வரலாற்றுப்பூர்வ ஆதாரம் எதுவுமே இல்லை. மாராகக் கிளேங் மாவட்டத் தலைவரின் மலாய்க்காரப் பிரதிநிதி ஒருவரால் அவர்கள் முதலில் அழைத்துவரப்பட்டனர் என வரலாற்றுத்துறையில் பாண்டியன்த்துவம் பெற்ற ஜே.எம்.குலிக் எனும் ஒரு நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல அப்துல்லா அந்தச் சீனத் தொழிலாளர்களை அழைத்து வந்ததாக 1959ஆம் ஆண்டில் கோலாலம்பூர் நகராட்சி மன்றம் வெளியிட்ட பதிப்பில் கூட எங்குமே குறிப்பிடப்படவில்லை.

இதற்கிடையே கடந்த 1872ஆம் ஆண்டில் கோலாலம்பூர் ஒரு வெறும் சீனக் கிராமம்தான் எனப் பிரிட்டிஷ் நிர்வாக அதிகாரி ஃப்ராங்க் ஸ்வீட்டன்ஹம் குறிப்பிட்டுள்ள அதே வேளை கோலாலம்பூரின் பிரதானச் சாலைகளில் சீனர்களின் கடைகள் இருந்ததாக 1878ஆம் ஆண்டில் அங்கு வருகை புரிந்த அமெரிக்க விலங்கியல் நிபுணர் வில்லியம் ஹோர்ணடே தனது குறிப்பில் பதிவிட்டிருந்தார்.

கடந்த 1891ஆம் ஆண்டு வாக்கில் கோலாலம்பூரின் மக்கள் தொகையில் 79 விழுக்காட்டினர் சீனர்கள் என்று நம்பப்படுகிறது. ஆகக் கோலாலம்பூர், சீன வர்த்தகத்தினால் உருவாக்கப்பட்ட மற்றொரு நகரம் எனப் பிரிட்டிஷ் மலாயா வரலாற்று வல்லுநர் மார்கரெட் ஷென்னன் கூறியுள்ளதை ரஞ்சிட் சிங் சுட்டிக் காட்டுகிறார்.

முன்னதாக 1868ஆம் ஆண்டில் கோலாலம்பூரின் 2வது சீனத் தலைவர் லியூ ஙிம் கொங் மரணமடைந்ததைத் தொடர்ந்து 3ஆவது சீனத் தலைவராக நியமனம் பெற்றவர்தான் யா ஆ லோய்.

கடந்த 1866ஆம் ஆண்டிலிருந்து 1873ஆம் ஆண்டு வரையில் சிலாங்கூரில் நிகழ்ந்த உள்நாட்டு கலவரத்தில் சேதமடைந்த கோலாலம்பூரை மறு நிர்மாணம் செய்வதற்குக் காரணகர்த்தாவாக இருந்தவர் யா ஆ லோய்தான். மீண்டும் தொழில்களைத் தொடங்குமாறு சீனர்களை வற்புறுத்திய அவர், கோலாலம்பூர் குற்றச்செயல்களற்ற ஒரு நகரமாக இருப்பதை உறுதி செய்ததோடு அருகிலுள்ள ஈயச் சுரங்கங்களுக்குச் செல்வதற்குச் சாலைகளையும் அமைத்தார். அதோடு தனது ஈயச் சுரங்கங்களிலும் இதர தொழில்துறைகளிலும் வேலை செய்வதற்கு மேலும் 4000 சீனத் தொழிலாளர்களை வரவழைத்தார்.

பிறகு 1881ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நிகழ்ந்த ஒரு தீ விபத்திலும் டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்திலும் பெரும் சேதமடைந்த கோலாலம்பூரை மறுசீரமைப்பதில் யா ஆ லோய் முக்கியப் பங்காற்றினார். சீனர்கள் இந்நாட்டில் தொடர்ந்து வேரூன்றியிருப்பதற்கு அவர் ஒருவரின் விடா முயற்சியொன்றே பிரதானக் காரணமாகும் என ஸ்வீட்டன்ஹம் தனது குறிப்பில் பதிவு செய்திருந்தார்.

எனவே யா ஆ லோய்தான்  ‘கோலாலம்பூரை நிர்மாணித்தவர்’ என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளதை வரலாற்று படிவங்கள் காட்டுகின்றன. ஒரு ஈயச் சுரங்கக் கிராமமாக வளர்ச்சியற்றுக் கிடந்த கோலாலம்பூரை மலாய் தீபகற்பத்தின் மிக முக்கிய நகரகமாக அவர் உயர்த்தினார் எனக் குலிக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தலைநகராக அதனை உருவாக்கியதில் வேறு யாரையும் விட யா ஆ லோய் ஆற்றிய பங்கு அளப்பரியது என 1960களில் புகழ்பெற்ற பள்ளி புத்தக எழுத்தாளராக இருந்த ஜே.கெண்ணடியும் கூடத் தனது பதிவில் விவரித்திருந்தார்.

சுத்தான் புவாசாவைப் பொருத்த வரையில் கோலாலம்பூரின் தொடக்ககால நிர்மாணிப்பிலோ அதன் மேம்பாட்டிலோ எவ்விதப் பங்கும் அவர் ஆற்றவில்லை. அம்பாங்கின் ஈயச் சுரங்கக் குடியிருப்புப் பகுதியில் அவர் வசித்தார் – அவ்வளவுதான். சுரங்கத் துறையிலும் நிர்வாகத்திலும்  ஒரு பெரும் புள்ளியாக விளங்கிய யா ஆ லோயுடன் ஒப்பிடும் போது ஒரு ஈய வர்த்தகரான சுத்தான் புவாசா கோலாலம்பூரை மேம்படுத்துவதில் ஆற்றிய பங்கு வெறும் கொசுக்கடிதான்.

ஆகச் சுத்தான் புவாசா அம்பாங்கில் செல்வாக்கு மிக்க ஒரு மண்டய்லிங் தலைவராகத்தான் இருந்தார். கோலாலம்பூர் கண்டுபிடிக்கப்பட்டதிலோ அது மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகளிலோ அவர் முக்கியப் பங்காற்றவில்லை. எல்லாமே யா ஆ லோயின் உழைப்புதான் என்று தனது கட்டுரையில் குறிப்பறிகிறார் மொத்தம் 19 வரலாற்று புத்தகங்களை எழுதியுள்ள ரஞ்சிட் சிங்.