பூடான் வரலாறு: பாதாள கோட்டைகள், அழிந்து போன எச்சங்கள் – விட்ட இடத்தில் தேடலை தொடரும் சாம்ராஜ்ஜியம்

(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை ‘வரலாற்றுப் பதிவுகள்’ என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், 18ஆம் கட்டுரை இது)

உலகிலேயே தனி மனித சந்தோஷத்தை தமது நாட்டின் வளர்ச்சி அடையாள குறியீடாகக் கொண்டுள்ள நாடு ஒன்று உள்ளதென்றால் அதற்கு பூடானை முதன்மையான உதாரணமாகக் கூறலாம். இமயமலையில் சக்திவாய்ந்த நட்பு நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருக்கும் இந்த சின்னஞ்சிறிய நாடு, பல நூற்றாண்டுகளாக வெளித்தொடர்புகளே இல்லாமல் துண்டிக்கப்பட்டிருந்ததுதான் வரலாறு.

ட்ரக் யுல் என பூடானிய மொழியில் அழைக்கப்படும் இந்த நாட்டுக்கு இடி அடிக்கும் டிராகன் நாடு என்ற பெயரும் உண்டு. இங்கு 1907இல் வாங்ச்சக் முடியாட்சி அதிகாரத்துக்கு வந்தது. ஆனால், 2008ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு இரு கட்சி நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை இங்கு உள்ளது.

ஆனால், அடிப்படையில் இந்த நாடு இன்னும் தமது பூர்விகத்தையும் வரலாற்றையும் தேடி வருகிறது. இங்குள்ள கற்கால தடயங்கள், தொல்லியல் கண்டுபிடிப்புகளை வைத்து பார்க்கும்போது தமது அண்டை நாடுகளைப் போலவே பூடானிலும் பொது ஆண்டுக்கு முந்தைய கால குடியேற்றங்கள் இருப்பதை அறிய முடிகிறது. எட்டாம் நூற்றாண்டில் பெளத்த மதம் இந்த நாட்டில் வேரூன்றிய பிறகே அதன் இருப்புக்கு உயிர்கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

பொது ஆண்டு 747இல் பூடானில் அதி உயர் பெளத்த துறவியாக அங்குள்ள மக்களால் போற்றப்படும் பத்மசாம்பவா முதல் முறையாக பூடானுக்கு வந்து பெளத்த மதத்தை பரப்பினார். அதன் பிறகு அந்த நாட்டில் சமூகம், அரசியல், கலாசார மாண்புகள் என அனைத்திலும் இந்த மதம் பின்னிப்பிணைந்தது.

உண்மையில் பூடானின் ஆதிகால தொல்லியல் ஆய்வு என்பது வரலாற்று ரீதியாக இருக்கவேயில்லை என்று டோர்ஜி பெஞ்சோர் கூறுகிறார். இவர், பூடான் ஆய்வு மையத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார். பூடானின் ஆதிகால வரலாறு முதல் நவீன கால வாழ்வியல் முறைகள் வரை ஆய்வு செய்து வரும் டோர்ஜி, நவீன உலகில் தனக்கென தனி அடையாளத்தை பூடான் தக்க வைத்த பிறகும் கூட அது தமது தொல்லியல் தலங்களில் காணப்படும் தடயங்கள் மூலம் அறிய முடியாத தமது வரலாறு பற்றி தெரிந்து கொள்ள முடியுமா என்று ஆராய்ந்து வருகிறது என்று கூறுகிறார்.

இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் தடயங்களை வைத்து பார்க்கும்போது பூடானில் தற்போதுள்ள குடியேற்றங்கள், திபெத்திய பீடபூமியை மூலமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று வரலாற்றாய்வாளர்கள் நம்புகின்றனர். துல்லியமாக கணக்கிடும் ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் இல்லாதபோது இந்த நாட்டில் உள்ள கற்கால பொருட்கள், பெருங்கற்களைக் கொண்டே இங்கு வரலாற்றுக்கு முந்தைய காலத்திலும் மக்கள் வாழ்ந்தனர் என்ற நம்பிக்கைக்கு வரலாற்றாய்வாளர்கள் வருகின்றனர்.

இந்த நாட்டில் வரலாற்றுச் சுவடுகள் அழிந்து போனதற்கு அந்த காலங்களில் நடந்த போர், காட்டுத்தீ, நிலநடுக்கம், பெருவெள்ளம், இயற்கை பேரிடர்கள் போன்றவை காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இங்கு பராமரிக்கப்பட்டு வந்த புனாகா என்ற நகரின் ஒரே வரலாற்றுப்பூர்வ ஆவணங்கள் 1832இல் ஏற்பட்ட தீ மற்றும் அதைத்தொடர்ந்து 1897இல் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புகளால் அழிந்து போயின.

இதற்கு முன்பும் காலங்காலமாக இயற்கை பேரிடர்கள் மற்றும் மனித செயல்பாடுகளால் தமது தொன்மையான தடயங்களை பூடான் தொலைத்துள்ளது. இமயமலையின் தட்பவெப்ப சூழ்நிலையும் இந்த நாட்டுக்கு சாதகமாக இருக்கவில்லை.

இந்த நாட்டின் வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது, இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. பூடானில் அது எழுத்து கலாசாரம் அறிமுகமான ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தை குறிப்பிடுவதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.

பூடான் வரலாறுஅந்த நூற்றாண்டில், அதாவது 569-650 அல்லது 617 – 650 காலகட்டத்தில் பாரோ நகரில் கியிச்சு இஹாகாங் மற்றும் பும்தாங் நகரில் ஜம்பா இஹாகாங் புராதன கட்டடம் ஆகியவற்றை தொடர்புபடுத்தும்போது பூடான் பெயர் முதல் முறையாக குறிப்பிடப்படுகிறது.

779இல் சமேயே கட்டடத்தை எழுப்பிய பிறகு குரு பத்மசாம்பவா பூடானுக்கு இரண்டாவது முறையாக வருகை தந்த பிற்பாட்டில்தான், இந்த நாட்டில் எழுத்துக் கலாசாரம் தழைக்கத் தொடங்கியது என்பது ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு.

அந்த காலகட்டத்தில் திபெத்திய பீடபூமிக்கு பெளத்த போதனைகளை எழுத்து வடிவில் பதிவு செய்ய, ஆயிரக்கணக்கான எடை அளவுக்கு கைகளால் தயாரிக்கப்பட்ட காகிதத்தை பூடான் வழங்கியதாகவும் அந்த போதனைகளை எழுதியவர் குரு பத்மசாம்பவேவின் எழுத்தராக பணியாற்றிய டென்மாங் ட்செமாங் என்றும் திபெத்திய வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

பூடான் வரைபடம்இந்த காகித தயாரிப்பு ஆற்றல் காரணமாகவே பூடானுக்கு குரு பத்மசாம்பவாவை திபெத்திய மன்னர் ட்ரிசொங் டெட்சென் அனுப்பி வைத்து தமது நன்றியை பூடானியர்களுக்கு தெரிவிக்கச் சொன்னதாகவும் அப்போது அவருடன் சென்றவர் டென்மாங் ட்செமாங் என்றும் பல வரலாற்றாய்வு நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

டென்மாங் ட்செமாங் தமது எழுத்துகளை இஹோயிக் என அந்த காலத்தில் பூடானில் புழக்கத்தில் இருந்த எழுத்துமுறையில் பதிவு செய்தார். ஆனால், புத்தர் பிறந்த ஆண்டில் இருந்து சில நூறாண்டுகளுக்கு முன்பே பூடானில் மனித குடியேற்றங்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளதாக பூன்ட்ஷோ டாஷி போன்ற பூடானிய வரலாற்றாய்வாளர்கள் வாதிடுகின்றனர்.

புத்தர் பிறப்பதற்கு சில நூறாண்டுகளுக்கு முன்பு ட்ரைம் குந்தென் என்ற இந்திய உள்ளூர் இளவரசர், மத்திய பூடானில் உள்ள தூரி ஹஷங் என்ற கருமலைக்கு நாடு கடத்தப்பட்டாகவும் அந்த இளவரசர் அழைத்து வரப்பட்ட பகுதிகளில் இன்றளவும் கூட அவரதுபெயரை தாங்கி நிற்கும் இடங்களை பார்க்க முடிகிறது.

பொது ஆண்டு 433இல் இந்திய பெளத்த தத்துவவாதியான புத்தரக்ஷிதா கிழக்கு பூடானில் உள்ள குரிச்சு பள்ளத்தாக்கு வழியாக திபெத்துக்கு சென்றபோது அவருடன் லொசெம்ட்சோ என்ற உள்ளூர் பூடானியர் வழிகாட்டியாக சென்றார் என்ற தகவல், 1999இல் பூடான் கல்வித்துறை வெளியிட்ட பாடநூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால், பூடானிய வரலாற்றை தொல்லியல் கண்டுபிடிப்புகள் மூலம் மீள்கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் அந்த நாட்டு அரசாங்கம் பெரிய ஆர்வத்தை அந்த காலங்களில் காட்டவில்லை. அதற்கான முறையான கொள்கையோ தொல்லியல் ஆய்வுக்கான கல்வி நிறுவனமோ அங்கு இருக்கவில்லை.

ஏதோவொரு காலத்தில் எதேச்சையாக கண்டறியப்பட்ட தொல்லியல் தடங்கள் அல்லது கண்டுபிடிப்புகள், கட்டுமானப் பணிகளின்போது கண்டெடுக்கப்பட்ட அகழ்வுப் பொருட்கள் மூலமே பூடானிய வரலாறுக்கு அவ்வப்போது சில கண்டுபிடிப்பாளர்கள் உயிர் கொடுத்தார்கள். ஆனால், அந்த நிலைமை இப்போது மாறிவிட்டது.

பூடான்மகிழ்ச்சி1999-2000ஆம் ஆண்டில் பூடானின் வரலாற்றுபூர்வ அகழ்வுப் பணிகள் பத்பலாதாங் பகுதியில் முதல் முறையாக தொடங்கப்பட்டது. அதன் பிறகு, சோஹொர் ட்ஸோங் கால தொல்பொருட்கள் 2008-2011ஆம் ஆண்டில் மத்திய பூடானின் பூம்தாங்கில் நடந்தது. குகைகள், கற்சிற்பங்கள், புராதன ஓவியங்கள் என பல குறிப்பிடத்தக்க படைப்புகள் பூடானில் உள்ளன.

அவை பெரும்பாலும் பெளத்த மதம் அல்லது புத்தர் தொடர்புடையவை ஆக உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று 2014இல் திம்புவில் கண்டறியப்பட்ட திறந்தவெளி பாறை ஓவியம். அது வரலாற்றுக்கு முந்தைய படைப்பாகக் கருதப்படுகிறது.

அந்த ஓவியத்தில் குதிரை போன்ற வடிவில் உள்ள நான்கு கால்களைக் கொண்ட இரு விலங்குகள் மோதிக் கொள்வது போன்ற காட்சிகள் சிவப்பு நிறத்தால் தீட்டப்பட்டுள்ளன. அந்த ஓவியம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது என்று வரலாற்றாய்வாளர் குயெங்கோ கூறினாலும், அதன் மேலேயே புத்தரின் போதனை வரிகள் கரியாலும் மணி மந்திரங்கள் சிந்தெட்டிக் பெயின்ட்டாலும் எழுதப்பட்டுள்ளன. இந்த எழுத்துகள் புராதன ஓவிய கண்டுபிடிப்பின் உண்மைத்தன்மையை சரிபார்க்க முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டன.

இது ஒருபுறமிருக்க பூடானில் முதலாவது குடியேற்றம் என்பது, பொது ஆண்டுக்கு முந்தைய 2000-1500 காலத்தில் நடந்திருக்க வேண்டும் என பிரிட்டிஷ் அருங்காட்சியகம் ஏற்பாடு செய்த ஓர் ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் பயன்பாட்டில் இருந்த கோடாரி போன்ற மனிதர்கள் பயன்படுத்திய கருவியின் அடிப்படையில் இந்த முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.

பெளத்த அண்டவியல் சாஸ்திரத்தில் ஒரு நம்பிக்கை உள்ளது. அதன்படி அந்த காலத்தில் விருப்பத்தை நிறைவேற்றும் மரத்தில் இருந்து விழும் பழங்கள் தொடர்பாக நடந்த போரில் வானில் இருந்த கடவுள் இரும்புக் கோடாரியை வீசியதாகவும் பூமியில் உள்ள பூதங்கள் அவற்றை எதிர்க்க அழுத்தப்பட்ட எரிவாயுவை அனுப்பியதாகவும் கூற்று உள்ளது.

அப்படி கீழே விழுந்த கல் போன்ற கோடாரிகளை தங்களுடைய பண்ணை நிலங்களில் விவசாயிகள் கண்டெடுத்து அதை சக்தி வாய்ந்த புனிதப் பொருளாக காலங்காலமாக வைத்திருந்தனர் என்கிறது அந்த நம்பிக்கை. இந்த வகை கோடாரிகளின் பல வடிவங்கள், பூடான் தேசிய அருங்காட்சியகத்தில் இப்போதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

யுரா, டாங் பள்ளத்தாக்குகளின் குறுக்கே ஷைதாங்க்லாவில் உள்ள வரலாற்றுக்குப் பிந்தைய கல் தூண்கள் பொது ஆண்டுக்கு முந்தைய 1979இல் எல்லை வரையறைக்கு பயன்படுத்தப்பட்டிருந்ததாக நம்பப்படுகின்றன. பூம்தாங்கின் சோம்ப்ராங் இஹாகாங் பகுதிக்கு வெளியே இத்தகைய கல் தூண்கள் எல்லை போல அமைக்கப்பட்டிருக்கின்றன. இது ஊர் எல்லையாகவோ மத சடங்கு வழிமுறைகளுக்காகவோ அவ்வாறு வைக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கிழக்கு பூடானின் லூன்ட்சேவில் உள்ள மிஞ்சே கிராமத்தில் துளையிடப்பட்ட பாறைகள் உள்ளன. அவற்றை காந்த்ரோ யெஹே ட்ஷோக்யால், கடவுளுக்கு உணவு படைக்க பாத்திரங்களாக பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். இந்த காந்த்ரோ யெஷ்ஹே ட்ஷோக்யால் அந்த காலத்தில் பெளத்த துறவிகளுக்கு எழுத்தராக இருந்திருக்கிறார். லுன்ட்சே மாவட்டத்தில் அரிசி தானியங்களை அரைக்க பயன்படும் 108 அரவை கற்கருவிகள் இப்போதும் உள்ளன.

பாதாள கோட்டையும் விலகாத புதிரும்

பூடான் வரலாறுகிழக்கு பூடானின் லூன்ட்சேவில் பூமிக்கடியில் பாங்க்ஸோ கோட்டை சில ஆண்டுகளுக்கு முந்தைய அகழ்வுப்பணியின்போது கண்டெடுக்கப்பட்டது. அது ஒன்பது அடுக்கு மாடி கொண்ட பாதாள கோட்டையாக இருந்திருக்க வேண்டும் என்றும் அதை கட்டியவர் லாசே ட்சாங்கமா என்ற மன்னரால் கட்டியெழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இந்த பாதாள கோட்டை, மலை அடிவாரத்தில் உள்ள மற்றொரு கோட்டையுடன் இணைகிறது. பாதாள கோட்டையின் முதல் தளம் 1990களில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது அது பூடான் தேசிய அருங்காட்சியக கட்டுப்பாட்டில் உள்ளது.

உக்யென் பெல்கென் என்ற ஆய்வாளரின் கூற்றுப்படி, பாங்க்ஸோ மன்னனின் மூத்த சகோதரர் தங்களுடைய தந்தையும் கிழக்கு பூடானில் உள்ள கலிங்கர் ராஜ்ஜியத்தை ஆண்டவருமான மன்னரின் சொத்துகளில் தமது பங்கை பிரித்துக் கொடுத்தால் தாம் வேறு இடத்துக்கு செல்வதாக நிபந்தனை விதித்ததாகவும் அதன் பேரில் தமக்கு கிடைத்த சொத்துகளுடன் வந்து இந்த பாதாள கோட்டையை பாங்க்ஸோ எழுப்பியிருக்கிறார்.

காரணம், அந்த காலத்தில் பாங்க்ஸோ குடும்ப சொத்துகளை அபகரிக்க திபெத்திய சாம்ராஜ்ஜியத்தில் இருந்தவர்கள் இடைவிடாது முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

திபெத்தியர்களிடம் இருந்து பல முறை தப்பித்தபோதும் கடைசியில் ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்ட பாங்க்ஸோ கொல்லப்பட்டதாகவும் ஒரு கதை இங்கு நிலவுகிறது.

பிற்காலத்தில் பாங்க்ஸோ எழுப்பிய பாதாள கோட்டையில் இருந்த பொருட்களும் சூறையாடப்பட்டதால் எஞ்சிய வரலாற்று அடையாளமாக கோட்டை சிதிலங்கள் மட்டுமே உள்ளன.

சூறையாடப்பட்ட லாசே ட்சாங்மாவின் கோட்டை

பூடான் வரலாறுபூடானின் ஆரம்பகால வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் திபெத்திய இளம் இளவரசரான லாசே ட்சாங்மா நாடு கடத்தப்பட்டு தெற்கு பூடானுக்கு அவரது இளைய சகோதரர் லாங் தர்மாவால் அனுப்பி வைக்கப்பட்டார். இவர் பொது ஆண்டு 838-841வரை திபெத்தை ஆண்டார்.

இந்த லாசே ட்சாங்மா பூடான் முழுவதும் பயணம் செய்து கடைசியில் கிழக்கு பூடானின் ஜாம்கரில் குடியேறினார். பூடானின் பெரும்பாலான ராஜ்ஜிய குடும்பங்கள், இவரது வழித்தோன்றல்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் கிழக்கு பூடானின் லுன்ட்சேவில் உள்ள கோட்டையில் வாழ்ந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

ஆனால், இங்கு காணப்பட்ட மரப்பொருட்களின் மாதிரிகள் கரிம பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவை 1420-1435 காலத்திலானவை என்று தெரிய வந்துள்ளது. லாசே ட்சாங்மா வாழ்ந்ததாக நம்பப்படும் மற்றொரு கோட்டை கிழக்கு பூடானின் ட்ராஷிகாங்கில் உள்ள மிஸிம்பாவில் உள்ளது. அங்கு அகழ்வுப்பணிகள் நடக்கவில்லை. அதற்கான காரணங்கள் புலப்படவில்லை.

17ஆம் நூற்றாண்டில் ஜாப்த்ருங் என்கவாங் நம்கியால் என்ற பிரபல பெளத்த தலைவர், பூடானை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இரட்டை ஆளுகை முறையை நிறுவினார். அதன்படி ஜே கென்போ மத ஒழுங்கமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். நிர்வாகத் தலைவராக தேப் ராஜா நியமிக்கப்பட்டார்.

17ஆம் நூற்றாண்டின் முடிவில் பூடான் தனக்கென ஒரு தேசிய மற்றும் கலாசார அடையாளத்துடன் தலைநிமிர்ந்தது. அதுவரை இல்லாத வகையில் ஸ்திரமான அரசியல் ஒழுங்கையும் பூடான் கடைப்பிடித்தது.

ஆனால், 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் இரட்டை ஆளுகை முறை பலவீனம் அடைந்தது. ஆளுகையில் இருந்த சிலரது கருத்து பேதங்களால் நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறி ஆனது. அது 19ஆம் நூற்றாண்டைக் கடந்தும் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கச் செய்தது.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாட்டை வலுப்படுத்த வலுவான தேசிய தலைமை தேவை என்று உணரப்பட்டது. அதன் பயனாக மன்னர் உக்யென் வாங்சக் தலைமையிலான முடியாட்சி 1907இல் அமைந்தது.

இந்த புதிய தொடக்கம், பூடானில் அமைதி, ஸ்திரத்தன்மை ஏற்பட உதவியது. மத்திய தலைமையின் கீழ் உள்ளாட்சி நிர்வாகங்கள் பிரச்னையின்றி நடக்க அது பாலமாக இருந்தது. அதுவே வெளியில் உள்ள நாடுகளுக்கு பூடானின் நிர்வாகம் ஒரு முன்மாதிரி ஆளுகை என்ற அடையாளத்தை கொடுத்தது.

அதன் பிறகு பூடானில் வழிவழியாக மன்னராட்சி நடந்தது. 2008இல் முடியாட்சியின் நூறு ஆண்டுகள் நிறைவின்போது அந்த நாடு முதல் முறையாக தனது நாடாளுமன்ற தேர்தலை நடத்தியது. அதில் ஜனநாயக முறையிலான அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2013-லும் வெற்றிகரமாக ஜனநாயக முறைப்படி அரசு தேர்வானது.

பூடான் வரலாறு2008ஆம் ஆண்டு முதல் ஜிக்மி கெசர் நம்கியெல் வாங்சூக் (31 வயது) பூடானின் மன்னராக இருக்கிறார். இந்த நாட்டின் தேசிய அடையாளத்துக்காகவும் இறையாண்மையை பாதுகாக்கவும் அவர் பங்களிப்பை வழங்கி வருகிறார். பூடானியர்களால் இவர் மக்களின் மன்னர் என்றே அழைக்கப்படுகிறார்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்புவரை தமது நாட்டின் வரலாற்றை ஆராய அதிக அக்கறை காட்டிக் கொள்ளாத பூடான், வாங்சக் வம்ச ஆளுகையில் தமது வரலாற்றை மீட்டெடுக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு அங்கமாக பூடான் ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர் டோர்ஜி பெஞ்சோர் ஆய்வுத் தகவல்களை திரட்டி வருகிறார்.

சமீபத்தில் ட்ராஃபம் ட்ஸோங் கோட்டை அகழ்வுப் பணியை தீவிரப்படுத்த பூடான் அரசு முடிவு செய்துள்ளது. ஸ்விச், லீசெஸ்டைன் தொல்லியல் ஆய்வு வல்லுநர்களை பூடானுக்கு வரவழைத்து புராதன சின்னங்களின் வரலாறை கண்டரியவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2016ஆம் ஆண்டில் திம்பு அரசு கல்லூரியில் மானுடவியல் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அங்கமாக தொல்லியல் ஆய்வுப்பாடமும் உள்ளது.

ஒரு நாட்டின் வரலாறு, காலத்தால் அழியாதிருக்க வேண்டுமானால் அது புத்தகங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் வாயிலாகவே சாத்தியமாகும் என்பது சான்றோர் வாக்கு. அத்தகைய முயற்சியைத்தான் காலங்கடந்தபோதும் நம்பிக்கையை கைவிடாது பூடான் அரசு முன்னெடுத்திருக்கிறது.

(நன்றி BBC TAMIL)