கணினி மென்பொருள் வல்லுநர்கள் மசோதா மீதான திறந்த நாள் நிகழ்வில் ஒரே குழப்பம்

அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு தான் பரிந்துரை செய்துள்ள கணினி மென்பொருள் வல்லுநர்கள் மசோதா மீது இன்று திறந்த நாள் நிகழ்வை நடத்தியது.

அந்த மசோதாவை வரைவதற்கு உதவி செய்த நிபுணர்களிடமும் கல்வியாளர்களிடமும் அதனைத் தற்காத்துப் பேசும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அந்த நிகழ்வின் போது அவர்கள் உள்ளூர் தகவல் தொழில் நுட்ப நிபுணர்களுடனும் சாதாரண மலேசியர்களுடனும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“நாங்கள் அந்த மசோதாவை விரும்பவில்லை”, என மகிழ்ச்சி அடையாத தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் கூறிய போது அவருக்கு ஆதரவாக பலர் எழுந்து நின்று கைகளைத் தூக்கினர்.

அதற்கு முன்னதாக எழுப்பபட்ட கேள்விகளுக்கு குழு உறுப்பினர்கள் தெளிவில்லாமலும் மேலோட்டமாக வழங்கிய பதில்களில் அவர்கள் மனநிறைவு அடையவில்லை.

கணினி மென்பொருள் துறையிலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் நிபுணத்துவம் பெற்ற பலர் இன்றைய திறந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு அதிகாரிகள் யாரும் அங்கு இல்லை. தகவல் தொழில்நுட்பத் துறையில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கு கொண்ட அந்தக் கூட்டத்தில் மசோதாவின் நோக்கங்களை விளக்குவதற்கு அவர்கள் முயன்றனர்.

அந்த நிகழ்வு குறித்து டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா ஏமாற்றம் தெரிவித்தார். அந்த நிகழ்வுக்குப் போதுமான ஒருங்கிணைப்பு இல்லை என்றும் அமைச்சின் முக்கியமான அதிகாரிகள் யாரும் அங்கு இல்லை என்றும் நிபுணர்கள் முக்கியமான அமசங்களை விளக்குவதற்கு தடுமாறினர் என்றும் அவர் சொன்னார்.

மசீச இளம் தொழில் நிபுணர்களுக்குத் தலைமை தாங்கும் லாபிஸ் எம்பி சுவா தீ யோங், இன்று மாலை அந்த நிகழ்வில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மசோதாவுக்கு தமது கட்சியின் எதிர்ப்பை அவர் தெரிவித்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.