விண்வெளி பயணத்துக்கு ராக்கெட் தென் கொரியா சோதனை வெற்றி

சியோல்:விண்வெளிக்கு விண்கலங்களை ஏந்திச் செல்லும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில், முதல் முறையாக தென் கொரியா தயாரித்துள்ள ராக்கெட்டின் சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது.

அமெரிக்கா, இந்தியா உட்பட ஒன்பது நாடுகள் மட்டுமே தங்கள் சொந்த உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ராக்கெட்டுகளை தயாரித்துள்ளன. கடந்த 1990களில் இருந்து மற்ற நாடுகளின் ராக்கெட் வாயிலாகவே கிழக்காசிய நாடான தென் கொரியா, தன் விண்கலங்களை அனுப்பி வந்துள்ளது. கடந்த 2013ல், ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் ராக்கெட்டை உருவாக்கியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், உள்நாட்டு தொழில்நுட்பத்தின் வாயிலாக, ‘நுாரி’ என்ற ராக்கெட்டை தென் கொரியா தயாரித்துள்ளது. மூன்றடுக்குகள் உடைய இந்த ராக்கெட், 154 அடி உயரம் உள்ளது.இந்த ராக்கெட் நேற்று செலுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் மூன் ஜேயின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திட்டமிட்டப்படி ராக்கெட் சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக தென் கொரியா தெரிவித்து உள்ளது. மேலும் சில சோதனைகள் செய்யப்பட்டு, அதன்பின் விண்கலங்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2030ல் நிலவுக்கு விண்கலங்களை அனுப்பவும் தென் கொரியா திட்டமிட்டுள்ளது.

dinamalar