அம்னோ/பிஎன் அரசியல் ஆற்றல் வலிமையும் தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு பரிந்துரைகள் அமலாக்கப்படும் வேகமும் அடுத்த பொதுத் தேர்தலின் முடிவுகளை நிர்ணயம் செய்யும்.
இவ்வாறு கூறும் பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார், 1999ம் ஆண்டு, 2008ம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் முடிவுகளை பெரும்பாலும் முறையே சீன, மலாய் வாக்காளர்கள் நிர்ணயம் செய்தனர் எனத் தெரிவித்தார்.
ஆனால் அடுத்த பொதுத் தேர்தல் முடிவுகள் எந்த ஒர் இனத்தையும் சார்ந்ததிருக்காது என அவர் நம்புகிறார்.
“13வது பொதுத் தேர்தல்: யாருடைய வாக்குகள் முடிவு செய்யும்?” என்னும் தலைப்பில் மலாய் நாளேடான சினார் ஹரியான், ஷா அலாமில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் நுருல் இஸ்ஸா பேசினார்.
அவரது கருத்துக்களை ஒப்புக் கொண்ட டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அடுத்த பொதுத் தேர்தல் முடிவுகளை “ஆவி வாக்காளர்களே” நிர்ணயிக்கப் போகிறார்கள் எனச் சொன்ன போது கூட்டத்தில் இருந்தவர்கள் சிரித்து விட்டனர்.
“நாம் ஆவிகளைப் பற்றிப் பேசவில்லை என்றால் மக்களுடைய விருப்பங்களைப் பிரதிபலிக்காத தேர்தல் முடிவுகள் நம்மை ஆட்டிப் படைக்கும்”, என லிம் சொன்னார்.
“நாடாளுமன்றத் தேர்வுக் குழு பரிந்துரைகள் அமலாக்கப்படாவிட்டால் அது மிகவும் ஆபத்தாக முடியும்.”
“ஆவி வாக்காளர்கள்” கையும் களவுமாக பிடிக்கப்பட்டு விட்டால் சபா, சரவாக்கில் உள்ள வாக்காளர்களே ஆட்சியாளர்களை நிர்ணயம் செய்வர் என பினாங்கு முதலமைச்சருமான லிம் சொன்னார்.
“நமக்கு அந்த அதிசய எண் 112 (நாடாளுமன்ற பெரும்பான்மை) கிடைக்குமா என்பதை அவர்கள் முடிவு செய்வர்.”
அந்தக் கருத்தரங்கில் பேசிய ஐவர் கொண்டகுழுவில் நுருலும் லிம்-மும் இடம் பெற்றிருந்தனர். அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் உயர் கல்வித் துணை அமைச்சருமான சைபுதின் அப்துல்லா, கீத்தா கட்சி தலைவர் ஜைட் இப்ராஹிம், மலாயாப் பல்கலைக்கழக ஊடகவியல் விரிவுரையாளர் பேராசிரியர் ஹசான் ஹாஸ்புல்லா ஆகியோர் மற்ற உறுப்பினர்கள் ஆவர்.