கமலா ஹாரிஸின் இட்லி மீதான விருப்பம்; புத்தகத்தில் வெளியான தகவல்

வாஷிங்டன்-சிறு வயது முதல், அமெரிக்கா துணை அதிபராக பதவியேற்றது வரையிலான கமலா ஹாரிசின், 57, வாழ்க்கையை விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது.

இதில் கமலா அய்யர் என்ற பெயர், கமலா ஹாரிசாக மாறியது; இட்லி, தோசை மீதான அவரது விருப்பம் போன்ற விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்க துணை அதிபராக இந்தாண்டு ஜன.,ல் பதவியேற்றார் கமலா ஹாரிஸ். ஆப்ரிக்க தந்தை, இந்திய தாய்க்கு பிறந்த அவர், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்

கமலா ஹாரிசின் வாழ்க்கையை விளக்கும் வகையில், இந்தியாவை பூர்வீகமாக உடைய பிரபல பத்திரிகையாளர் சித்தானந்த ராஜ்கட்டா ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். மொத்தம், 300 பக்கங்கள் உடைய இந்த புத்தகம், இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.

கமலா ஹாரிசின் தாய் ஷியாமளா கோபாலன் தமிழகத்தைச் சேர்ந்தவர். படிப்பதற்காக அமெரிக்கா சென்ற அவர், உடன் படித்த ஆப்ரிக்காவைச் சேர்ந்த டொனால்டு ஹாரிசை திருமணம் செய்தார். அதே காலகட்டத்தில் ராஜ்கட்டாவின் தந்தையும் அமெரிக்காவுக்கு வேலைக்காக சென்றார்.

ஷியாமளா கோபாலனின் அமெரிக்க வாழ்க்கையில் துவங்கி, கமலா ஹாரிசின் சிறு வயது அனுபவங்கள், அவருடைய விருப்பங்கள் உள்ளிட்டவை இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.கமலா ஹாரிஸ் பிறந்த போது அவரது பிறப்பு சான்றிதழில், முதலில் கமலா அய்யர் ஹாரிஸ் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின் அது கமலா தேவி ஹாரிஸ் என மாற்றப்பட்டுள்ளதாக புதிய தகவலும் இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமலாவின் சமையல் விருப்பம், இட்லி, தோசை மீதான காதல் போன்ற சுவாரஸ்ய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அரசியலில் வெற்றி பெற பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், போட்டிகள் குறித்து கமலா ஹாரிஸ் கூறியுள்ளவையும் இடம்பெற்றுள்ளது.

dinamalar