8-ந்தேதி முதல் அமெரிக்கா செல்ல வெளிநாட்டவர்களுக்கு அனுமதி – அமெரிக்க துணை தூதரகம் தகவல்

அமெரிக்காவுக்கு செல்ல வெளிநாட்டவர்களுக்கு 8-ந்தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் தெரிவித்துள்ளது.

சென்னை, அமெரிக்காவுக்கு செல்ல வெளிநாட்டவர்களுக்கு 8-ந்தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு செல்லும் வெளிநாட்டு பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற புதிய சர்வதேச விமான பயண கொள்கையை அமெரிக்கா அமல்படுத்துகிறது.

வருகிற 8-ந்தேதி முதல் அமெரிக்க குடியுரிமை பெறாத, குடியேறாத விமான பயணிகள், அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும் என்றால், விமானத்தில் ஏறும் முன்பு கொரோனாவுக்கு முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போடாத பயணிகள், அவர்கள் அமெரிக்க குடிமக்கள், சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்கள் அல்லது தடுப்பூசி போடாத வெளிநாட்டினர் என யாராக இருந்தாலும், புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு பரிசோதனை செய்யவேண்டும். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டினர் 8-ந்தேதி முதல் சுற்றுலா போன்ற காரணங்களுக்காக அமெரிக்காவின் வடக்கு மற்றும் தென்மேற்கு நில எல்லைகளில் பயணிக்க முடியும்.

அமெரிக்காவுக்கு, விமானத்தில் ஏறும் முன்பு தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை வழங்கவேண்டும். உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டுக்கு பட்டியலிடப்பட்ட தடுப்பூசிகள் போட்டதற்கான சான்றுகளை ஏற்றுக்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யவேண்டும்.

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

maalaimalar