ஆப்கனில் வறுமையால் சிறுமியர் விற்பனை; வயதானவர்களுடன் திருமணம் நடக்கும் அவலம்

காபூல் : வருமானம் எதுவும் இல்லாததால் வறுமையில் வாடும் குடும்பத்தை காப்பாற்ற இளம் சிறுமியரை பணம் பெற்றுக் கொண்டு வயதானவர்களுக்கு விற்று திருமணம் செய்து வைக்கும் அவல நிலை ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருகிறது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். தற்காலிக அரசும் அமைந்துள்ளது. ஆனால் இதற்கு சர்வதேச நாடுகள் இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்து வந்த போர் ஓய்ந்துள்ளது. ஆனாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

தற்போது சர்வதேச நாடுகள் வழங்கும் நிதியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடும் நிதி நெருக்கடியை ஆப்கன் சந்தித்து வருகிறது. இதற்கிடையே தலிபான்களுக்கு பயந்து, பலர் குடும்பத்துடன், அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். வேலையும் இல்லை, வருமானமும் இல்லை என்ற நிலையில், குடும்பத்தைக் காப்பாற்ற, இளம் சிறுமியரை, வயதானவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் அவலநிலை அங்கு அதிகரித்துள்ளது.

பணம் பெற்றுக் கொண்டு, பெண் குழந்தைகளை வயதான கோடீஸ்வரர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

பாக்திஸ் மாகாணத்தில் அப்துல் மாலிக் என்பவர், தன், 9 வயது பெண் குழந்தையை, 55 வயதுடைய ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். ஏற்கனவே, 12 வயது மகளை இதேபோல் வயதான ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். குடும்பத்தில் மீதமுள்ள எட்டு பேரை காப்பாற்ற வேறு வழியில்லாமல் இதை செய்ததாக அப்துல் மாலிக் கூறியுள்ளார். இவரைப் போன்று பல குடும்பங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

dinamalar