தீவு நாடுகள், கட்டமைப்பு , திட்டம், மோடி
கிளாஸ்கோ :புவி வெப்பமயமாவதால் பாதிக்கப்பட்ட தீவு நாடுகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தை, பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.
ஐரோப்பாவைச் சேர்ந்த ஸ்காட்லாந்தில், பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடக்கிறது. இதில், பருவ நிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட தீவு நாடுகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும், ஐ.ஆர்.ஐ.எஸ்., திட்டத்தை, பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி பேசியதாவது:புவி வெப்பமயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு, ஐ.ஆர்.ஐ. எஸ்., திட்டம் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.இதை, சிறிய தீவு நாடுகளின் அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் திட்டம் எனக் கூறுவதை விட, மக்களின் நல்வாழ்க்கைக்கு பொறுப்பேற்கச் செய்யும் திட்டம் எனலாம்.
மனித குலத்தின் நலனுக்கு நாம் கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டும்; இது, உலகை வெப்பமயமாக்கிய பாவங்களுக்கு நாம் செய்யும் பரிகாரம். பல ஆண்டுகளாக பருவ நிலை மாற்றத்தின் பாதிப்பில் இருந்து ஒருவர் கூட தப்பவில்லை. இதில் வளர்ந்த நாடுகள், வளம் பெற்ற நாடுகள் என எதுவும் விதி விலக்கல்ல. ஒவ்வொருவருக்கும் இது மிகப் பெரிய அச்சுறுத்தல். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரஸ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
மோடி – பில்கேட்ஸ் சந்திப்பு
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியும், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சும் சந்தித்து பேசினர்.
புவி வெப்பமயமாவதால் பருவ நிலையில் ஏற்படும் மாறுதல்கள், பாதிப்புகள் ஆகியவற்றுக்கான தீர்வுகள் குறித்து இருவரும் விவாதித்ததாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
dinamalar