உணவு வினியோகம்: ரோபோக்களுக்கு கிராக்கி

ஆன் அர்பார்: கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடான பிரிட்டனில், உணவு வினியோக நிறுவனங்கள், ‘ரோபோ’க்களை அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளன. இதனால், ரோபோக்களுக்கு தேவை அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களிலும், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், உணவு வினியோக நிறுவனங்கள், மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களை பயன்படுத்தி வருகின்றன.கொரோனா பரவலுக்குப் பின் வேலையாட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. உணவு வினியோக துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், போதிய ஆட்கள் கிடைக்காமல் திணறுகின்றன. இதையடுத்து ரோபோக்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

‘ஸ்டார்ஷிப் டெக்னாலஜிஸ்’ என்ற அமெரிக்க உணவு வினியோக நிறுவனம், சமீபத்தில் 20 லட்சம் வினியோக சாதனையை படைத்துள்ளது.கடந்த 2019ம் ஆண்டில் 250 ரோபோக்களை, உணவு வினியோகத்தில் இந்த நிறுவனம் ஈடுபடுத்தியது. தற்போது அந்த நிறுவனத்திடம் மட்டும் 1,000 ரோபோக்கள் உள்ளன.கல்லுாரிகள், மால்கள் போன்ற இடங்களில் வினியோகத்துக்கு இந்த ரோபோக்கள் பயன்படுத்தப் படுகின்றன. ரோபோக்கள் பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தாலும், அதிக வாடிக்கையாளர்கள் ரோபோக்கள் மூலமான உணவு வினியோகத்தை தேர்வு செய்து வருகின்றனர்.

dinamalar