டிஏபி-இன் “கோட்பாதர்” (ஞானாசிரியர்) கர்பால் சிங்தான் என்பது அனைவரும் அறிந்ததே. அவரிடம் முறைத்துக்கொண்டால் மன்னிப்பு கேட்டுத்தான் ஆக வேண்டும் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
“அவர் (டிஏபி துணைத் தலைமைச் செயலாளர் பி.ராமசாமி) உண்மையைத்தான் சொன்னார். எல்லாருக்கும் தெரியும் கர்பால்தான் கோட்பாதர் என்பது.
“அவரின் மனம் கோணாதபடி நடந்துகொள்ள வேண்டும். அவரிடம் முறைத்துக்கொண்டால் நீங்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.” இன்று மாலை ஸ்ரீகெம்பாங்கானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் மகாதிர் இவ்வாறு கூறினார்.
டிஏபி சர்ச்சையைச் சில்லறை சண்டை என்று ஒதுக்கித்தள்ளிய அந்த மூத்த அரசியல்வாதி, ராமசாமிக்கு சின்ன அறிவுரையை மட்டும் கூறினார்: “அவர் (கர்பால்) வேறு ஒன்றும் கேட்கவில்லையே. பேசாமல், ‘மன்னித்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போங்களேன்”, என்றார்.
டிஏபி தேர்தல் வேட்பாளர் பற்றி அறிவிக்கும் அதிகாரம் உயர்தலைமைக்கு மட்டுமே உண்டு வேறு யாருக்கும் இல்லை என்று கர்பால் கூறப்போக அதற்கு மறுமொழியாக ராமசாமி கட்சிக்கு ஞானாசிரியர்கள் தேவையில்லை என்று கூற கட்சிக்குள் சர்ச்சை மூண்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பினாங்கு டிஏபி பேராளர் மாநாட்டில் கர்பால் மீண்டும் ராமசாமியை சாடினார். அவர் மூத்த தலைவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
அதற்கு ராமசாமி, அவசியமேற்பட்டால் தாம் பதவி விலகவும் தயார் என்று கூறினார்.