தாயிப்பை விசாரிக்க வேண்டும், பக்காத்தான் கோரிக்கை

ஆறு நாடுகளைச்  சேர்ந்த என்ஜிஓ-கள் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்மூட்டுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எதிராக நிறைய குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருப்பதைக் கருத்தில்கொண்டு அதிகாரிகள் அவர்களைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று பக்காத்தான் ரக்யாட் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் தொடர்பில் அதில் இடம்பெற்றுள்ள மூன்று கட்சிகளும் தனித்தனியே அறிக்கை வெளியிட்டுள்ளன.தாயிப் அக்குற்றச்சாட்டுகளுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று நிரூபிக்கும்வரை பதவியை விட்டு விலகியிருக்க வேண்டும் என்றும் அவை விரும்புகின்றன.அவர்மீதும் அவரின் குடும்பத்தாரின்மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளாவன:

-அரசுப் பணத்தைச் சட்டவிரோதமாகக் கையாடல் செய்தது;
-அதிகார அத்துமீறல்;
-அரசு நிலங்களை அபகரித்தது;
-மோசடி, ஊழல்;
-பதவியைத் தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொண்டது;
-கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முனந்தது; – சட்ட விரோத நோக்கம் கொண்ட அமைப்பை உருவாக்க சதி செய்தது.

“இக்குற்றச்சாட்டுகளை அரசாங்கம் விசாரிக்கவில்லை என்றால்  முதலீடுகளும் சுற்றுலாத்தொழிலும் பாதிப்படையலாம் என்று கவலைகொள்கிறோம். அரசாங்கம் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்து பாதுகாப்பு அளிக்கிறது என்றும் குற்றம் சாட்டப்படலாம்”, என்று பாஸ் இளைஞர் பகுதி உதவித் தலைவர் ராஜா அஹ்மட் அல்-ஹிஸ் கூறினார்.

பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், சரவாக்கின் “நூற்றுக்கணக்கான மில்லியன்” பெறுமதியுள்ள வளம் நாட்டிலிருந்து கடத்தப்பட்டு அவரது குடும்பத்தாரின் தனிப்பட்ட நிறுவனங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது என்றார்.

“ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ள சரவாக் வாக்குகள் இன்றியமையாதவை என்பதால் அங்கு தாயிப் தனி ராஜ்யம் நடத்திக்கொள்ள பிஎன் இடமளித்திருக்கிறது”, என்றவர் குறைபட்டுக்கொண்டார்.

தாயிப்மீது அரச ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த சுரேந்திரன், அவர் “தண்டனை பயமின்றி செயல்பட” அனுமதித்ததற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனிடையே டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், தாயிப் மீது ஏற்கனவே சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை எல்லாம் விசாரிப்பதுடன் அதன் தொடர்பில் நஜிப் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

“முன் எப்போதுமில்லாத வகையில் உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் சரவாக் முதலமைச்சர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதால் தாய்ப்புக்கு எதிராக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் எந்த நிலையில் உள்ளன என்பது பற்றி பிரதமர் மேலவையில் (செனட்டில்) விளக்கமளிப்பது அவசியம்”, என்றார்.

என்ஜிஓ-கள் 10-பக்கக் கடிதமொன்றில் தாயிப் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளன.

அவர்களுக்கு 332 மலேசிய நிறுவனங்களிலும் 85 வெளிநாட்டு நிறுவனங்களிலும் பல பில்லியன் டாலர் பெறுமதியுள்ள பங்குரிமை இருக்கிறதென்று அவை கூறியுள்ளன.

தாயிப்மீது ஏற்கனவே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.சரவாக்கின் வெட்டுமரத் தொழில் ஆதாயங்களை அவரின் குடும்பத்தாருக்குச் சொந்தமான நிறுவனங்களே விழுங்கி ஏப்பமிடுவதாக குறைகூறப்பட்டிருப்பதை அடுத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது.

ஆனால், தாயிப்பும் அவரின் குடும்பத்தாரும் தங்களைப் பற்றிக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.