சுல்தானுக்குச் சினமூட்டிய மன்றத்தின் பெயர் மாற்றப்பட்டது

ஆலோசனை மன்றம் தொடர்பில்  சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவுடன்  ஏற்பட்ட சர்ச்சைக்கு வெறும் “குழப்பம்”தான் காரணம் என்று கூறிய சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் அதைத் தவிர்க்கும் நோக்கில் மன்றம் “விசாரணைக் குழு”எனப் பெயர்மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

அவ்வாறான ஆலோசனை மன்றம் அமைக்கத் தாம் பரிந்துரைக்கவில்லை என்றும் அம்மன்றம் அமைப்பது மாநிலத்தில் ஏற்கனவே செயல்பட்டுவரும் சமய அமைப்புகளின் பணிகளில் குறுக்கிடுவதாக அமையும் என்றும் சுல்தான் நேற்று விளக்கியதை அடுத்து இம்மாற்றம் நிகழ்ந்துள்ளது.

தேவாலயத்துடன் நடத்தப்படவிருக்கும் சந்திப்பில் காலிட் மற்றும் மாநில முப்தி தம்யெஸ் அப்துல் வஹாப் ஆகியோருடன் சிலாங்கூர் துணை முப்தி அப்துல் மஜிட் ஒமாரும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று மட்டுமே சிலாங்கூர் சுல்தான் ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்பட்டது.

நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மந்திரி புசார், “ஆகஸ்ட் 3-இல், டமன்சாரா உத்தாமா மெதடிஸ் தேவாலயத்தில்(டியுஎம்சி) ஜயிஸ் திடீர் சோதனை நடத்தியதை அடுத்து  ஏற்பட்ட சர்ச்சைக்குத் தீர்வு காண அமைக்கப்பட்ட குழுவுக்கு  ‘ஷியுரா மன்றம்’ என்று பெயரிடப்பட்டதால் எழுந்துள்ள குழப்பம் குறித்து மாநில அரசு வருந்துகிறது”, என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனாலும், அக்குழுவின் நோக்கத்திலும் அமைப்பிலும் மாற்றமிராது. கடந்த வாரம் காலிட் சுல்தானைச் சந்தித்துப் பேசியதன் அடிப்படையிலேயே அது அமைந்திருக்கும்.

“குழப்பம் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அதை இந்தப் பெயர்மாற்றம் போக்கும் என்று எதிர்பார்க்கும் மாநில அரசு சிலாங்கூர் மக்களின் நல்வாழ்வுக்காக டியுஎம்சி-ஜயிஸ் சர்ச்சைக்குத் தீர்வுகாண தொடர்ந்து முயற்சி செய்யும்.”

டியுஎம்சி-இல் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு விருந்து, ஜயிஸின் திடீர் சோதனை நடவடிக்கையால் தடைப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைக்குத் தீர்வு காண ‘ஷியுரா மன்றம்’ அமைக்கப்படுவதாக காலிட் திங்கள்கிழமை அறிவித்தார். விருந்தில் கலந்துகொண்டிருந்த முஸ்லிம்கள் சிலரை மதம் மாற்றும் முயற்சி நடப்பதாகக் கேள்விப்பட்டதால் அச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.

மன்றம் அமைக்கும் யோசனை சுல்தானிடமிருந்து வந்ததாக காலிட் கூறினார்.

ஆனால், சுல்தானின்  ஆலோசனையின் பேரில்தான் அந்த  மன்றம் அமைக்கப்பட்டது என்று வெளியான செய்தியை மறுத்து சுல்தானின் தனிச் செயலர் முகம்மட் முகமட் முனிர்  பாணி அறிக்கை வெளியிட்டது மந்திரி புசாருக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

இம்மறுப்பால் தர்மசங்கடத்துக்கு ஆளானாலும் மாநில அரசு, சுல்தானின் உத்தரவுப்படியே நடந்துகொள்ளும் என்று காலிட் தம் அறிக்கையில் கூறினார்.

ஆகஸ்ட் 3-இல், ஜயிஸ் மேற்கொண்ட அந்த அதிரடிச் சோதனையால் மாநில அரசு இக்கட்டான நிலைக்கு இலக்காகியுள்ளது.ஒரு தரப்பு, மாநில அரசுக்கு சமய சகிப்புத்தன்மை இல்லை என்று குற்றஞ்சாட்டுகிறது.இன்னொரு தரப்பு மந்திரி புசார் ஜயிஸ் நடவடிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது.

சர்ச்சை தொடர்பில் அதிகாரிகள் யாரும் கருத்துரைக்கக் கூடாது என்று காலிட் வாய்ப்பூட்டுப் போட்டிருக்கிறார்.

இதனிடையே கிறிஸ்துவ தலைவர்களும் எனஜிஓ-களும் ஜயிஸ் நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என்று கண்டித்துள்ளனர். பிஎன் தலைவர்கள்,  தன் நிர்வாகத்தில் உள்ள ஒரு துறையை மாநில அரசால் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியவில்லையே என்று சுட்டிக்காண்பிக்கிறார்கள்.

ஆனால், ஜயிஸ் டியுஎம்சியில் ஹராபான் கொம்முனிடி ஏற்பாடு செய்த விருந்தில் அதிரடிச் சோதனை நடத்தியதாகக் கூறப்படுவதை மறுத்தது.அதன் அதிகாரிகள் விருந்து முடிந்த பின்னர்தான் அங்கிருந்த முஸ்லிம்களிடம் விசாரணை நடத்தினர் என்றும் அது கூறியது.

அவ்விருந்தில் முஸ்லிம்களை மதம் மாற்றும் முயற்சிகள் நடப்பதாக புகார்களைப் பெற்றிருந்தாகவும் ஜயிஸ் கூறிற்று.