இஸ்லாமாபாத் : ஐ.எஸ்.ஐ. எனப்படும் உளவு அமைப்பின் தலைவர் நியமனத்தில் ராணுவத் தளபதியுடன் ஏற்பட்ட மோதல் தொடர்வதால் பாக். பிரதமர் இம்ரான் கான் தன் பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாக்.கில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தாலும் ராணுவத்தின் கையே எப்போதும் ஓங்கியிருக்கும். ராணுவத்துக்கு மிகப் பெரிய அளவில் உதவுவது ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு. அதிருப்திஅந்த அமைப்பின் புதிய தலைவராக தன் ஆதரவாளரான நதீம் அஞ்சுமை நியமிக்க ராணுவத் தளபதி ஜெனரல் குமர் ஜாவத் பஜ்வா வலியுறுத்தினார்.
ஆனால் தற்போதுள்ள பயஸ் ஹமீது தொடர்வதற்கு பிரதமர் இம்ரான் கான் விருப்பம் தெரிவித்திருந்தார். இறுதியில் நதீம் அஞ்சுமை நியமிக்க பிரதமர் ஒப்புதல் அளித்தார். அவர் நவ., 20ம் தேதி பதவியேற்க உள்ளார்.நவ., 20ம் தேதிக்குள் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும்படி இம்ரான் கானுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
அவ்வாறு அவர் விலகாவிட்டால் அவரது கட்சிக்கு அளித்து வரும் ஆதரவை முதாஹிடா குவாமி அமைப்பு மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஆகியவை விலக்கி கொள்ளும் என மிரட்டப்பட்டுள்ளது. இதனால் நவ., 20ம் தேதி இம்ரான் கான் பதவியை இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. மேலும் தெஹ்ரிக் இ லப்பைக் பாகிஸ்தான் என்ற அமைப்பு கடந்த சில மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டது.
அதனால் பல இடங்களில் வன்முறையும் வெடித்தது. அந்த அமைப்பின் கோரிக்கையை ஏற்று அதன் தலைவர் சாத் ரிஸ்வி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நடவடிக்கைகள் ராணுவத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.முடிவுதற்போது ஐ.எஸ்.ஐ. தலைவர் நியமனத்தில் நேரடியாக மோதியுள்ளதால் இம்ரான் கானை பதவியில் இருந்து துாக்க ராணுவத் தளபதி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இம்ரான் கட்சியைச் சேர்ந்த பர்வீஸ் காதக் அல்லது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷபாஸ் நவாஸ் அடுத்த பிரதமராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
dinamalar