பெட்ரோனாஸின் நிதி செயல்திறன் அறிக்கையை அரசாங்கம் இரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று பிரதமர் துறை (பொருளாதாரம்) அமைச்சர் முஸ்தபா மொஹமட் கூறினார்.
நிறுவனத்தின் இணையத்தளம் ஊடாக, நிதி செயற்திறன் அறிக்கையைப் பொதுமக்கள் அணுக முடியும் என முஸ்தபா தெரிவித்தார்.
“பெட்ரோனாஸ் அதன் நிதி செயல்திறனை இரகசியமாக வைத்திருக்கவில்லை, அந்நிறுவனத்தின் முன்னேற்றம் மற்றும் சாதனைகள், குறிப்பாக காலாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில், அதன் இணையதளத்தில் நிதி செயல்திறன் பற்றிய வழக்கமான அறிக்கையுடன் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது, பங்குச் சந்தையில் அது பட்டியலிடப்படவில்லை என்றாலும்.
“கூடுதலாக, பெட்ரோனாஸ் அதன் நிதி செயல்திறனை, அதன் காலாண்டு செய்தி அறிக்கைகள் மற்றும் விளக்கங்கள் மூலம் அறிவிக்கிறது. எனவே, இது இரகசியமில்லை. பெட்ரோனாஸ் எப்போதும் நல்ல கார்ப்பரேட் நிர்வாகத்தை கடைப்பிடித்து வருகிறது,”என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.
பெட்ரோனாஸ் நிதி செயல்திறன் அறிக்கை ஆண்டு அறிக்கையின் மூலம் இரகசியமாக வைக்கப்பட்டது என்றும், அது செயல்படத் தொடங்கியதில் இருந்து இது வரை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்படாமல் இருப்பது ஏன் என்பதைப் பிரதமர் விளக்க வேண்டுமென்று மடியஸ் தங்காவ் (பிஎச்-துவாரான்) கேட்ட கேள்விக்கு முஸ்தபா இவ்வாறு கூறினார்.
சட்டத்தில் வழங்கப்படாததால், மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று முஸ்தபா கூறினார்.
எவ்வாறாயினும், நிதி அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதனால், பெட்ரோனாஸின் செயல்பாடுகள் குறித்து அரசாங்கம் அறிந்திருக்கவில்லை என்று அர்த்தமல்ல என்று முஸ்தபா கூறினார்.
“அறிக்கை ஏன் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை, ஏனெனில் அது சட்டப்படி தேவையில்லை, பெட்ரோனாஸை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய கட்டாயப்படுத்தும் எந்தச் சட்டமும் இல்லை,” என்று அவர் சொன்னார்.