கர்பால்-ராமா மோதலை தீர்க்க உயர் நிலைக் குழு

டிஏபி தலைவர் கர்பால் சிங்-கிற்கும் பினாங்கு மாநிலத் துணைத் தலைவர் பி ராமசாமிக்கும் இடையில் உருவாகியுள்ள தகராற்றைத் தீர்ப்பதற்கு அந்தக் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு, மூவர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங், வாழ்நாள் ஆலோசகர் டாக்டர் சென் மா ஹின் ஆகியோர் அந்தக்குழு உறுப்பினர்கள் ஆவர்.

“நாங்கள் அந்த விவகாரத்தை விரைவாகத் தீர்க்க விரும்புகிறோம்”, என தலைமைச் செயலாளர் லிம் கிட் சியாங், நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்துக்குப் பின்னர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அந்தக் கட்சியின் துணைத் தலைமைச் செயலாளருமான ராமசாமியும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகத் தெரிய வருகிறது.

டிஏபி-யின் பினாங்கு மாநில மாநாடு கடந்த வார இறுதியில் நிகழ்வதற்கு முன்னதாக கட்சித் தலைவர் கர்பால் சிங்-கை “ஞானாசிரியர்” என ராமசாமி சொன்னதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் மூண்டது.

கர்பாலுக்கு ஆதரவாக பினாங்கு டிஏபி குழு உறுப்பினர் ஆர் எஸ் என் ராயர் அறிக்கை விடுத்தார். ராமசாமி “ஜமீன்தாரை” போன்று நடந்து கொள்வதாகவும் பினாங்கின் இரண்டாவது முதலமைச்சராக நியமிக்கப்படுவதற்கு கெஞ்சினார் என்றும் ராயர் குற்றம் சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து தமக்கு கொலை மருட்டல் வந்தததாக ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினருமான ராயர் கூறிக் கொண்டார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை டிஏபி பினாங்கு மாநில மாநாடு நடைபெற்ற இடத்திற்கு வெளியில் கூடிய ராமசாமி ஆதரவாளர்கள் ராயருக்கும் கர்பாலுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அந்த மாநாட்டில் பேசிய கர்பாலும் ராமசாமியும் தங்களது சொற்பொழிவுகளில் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசினர்.

TAGS: